சர்க்கரை, மைதா இல்லாத ஆரோக்கியமான பேஸ்ட்ரி கேக்…

கேக், பேஸ்ட்ரி, இதெல்லாம் எவ்வளவுக் கொடுத்தாலும் சாப்பிட்டுக் கொண்டே இருக்கலாம். ஆனால் சர்க்கரை , மைதா என யோசித்தாலே நோ சொல்லத்தான் தோன்றுகிறது. ஏன் நீரிழிவு நோயாளிகள், இரத்த அழுத்தம் உடைய மக்கள் என பலருக்கும் இந்த கேக், பேஸ்ட்ரிக்கள் சிம்மசொப்பனம்தான். அதற்குதான் தீர்வாக முழுக்க முழுக்க க்ளூட்டன் ஃப்ரீ, ரிஸ்க் ஃப்ரீ, கேக் மற்றும் பேஸ்ட்ரி தயாரித்து அதில் வெற்றிகரமான பிஸினஸும் செய்து வருகிறார் தனுசந்திரசேகர். ‘சொந்த ஊர் சென்னை, ஸ்கூல் படிப்பெல்லாம் சின்மயா வித்யாலயா பள்ளியிலே படிச்சேன், பி.காம் முடிச்சிட்டு ஒரு தனியார் கம்பெனியிலே வேலையிலே இருந்தேன். இடையிலேயே கொரோனா காலத்தில் வீட்டில் நிறைய நேரம் கிடைச்சது. அப்போ கரஸ்ல எம்.பி.ஏ முடிச்சேன். அப்பா சந்திரசேகர், கிளேசிங் டேப்ஸ் பிஸினஸ் செய்கிறார், அம்மா தனலட்சுமி சந்திரசேகர் இருபது வருடங்களுக்கு மேலே பிரைமரி ஸ்கூல் டீச்சரா இருந்து நிறைய ஸ்கூல்கள்ல வேலை செய்திருக்காங்க. இப்போ அப்பா கூட சேர்ந்து பிஸினஸைப் பார்த்துக்கறாங்க. எனக்குச் சின்ன வயதில் இருந்தே சமையல் செய்ய ரொம்ப பிடிக்கும். எதாவது குக் பண்ணிட்டுதான் இருப்பேன். இடையிலே படிப்பு, வேலைன்னு ஒரு சின்ன பிரேக் ஆனது. ஆனாலும் அப்பப்போ இந்த கேக், பேஸ்ட்ரி இதெல்லாம் செய்து வீட்டில் இருக்கறவங்களுக்கு கொடுத்திட்டு இருப்பேன்’ என்னும் தனு கொரோனா நாட்களில்தான் பேஸ்ட்ரி தயாரிப்பை முழுமையான பிஸினஸாக மாற்றியிருக்கிறார்.

‘கொரோனா காலம் என்கிறதால ஒர்க்கும் எனக்கு மத்தவங்க மாதிரி ஒர்க் ஃபிரம் ஹோம் கான்செப்ட் கூட இல்லாம நிறைய ஓய்வான நேரம் கிடைச்சது. மொத்தமா கிச்சனை நான் ஆக்கிரமிச்சுக்கிட்டேன். நிறைய சாப்பாடு ஐட்டங்கள் எல்லாம் செய்துட்டே இருந்தேன். அப்போதான் ஏன் ஒரு ஆன்லைன் பக்கம் ஆரம்பிக்கக் கூடாதுன்னு தோணுச்சு. அன்டோல்ட் ரெசிப்பீஸ்’ அப்படின்னு ஒரு இன்ஸ்டாகிராம், யூடியூப் பக்கம் எல்லாம் ஆரம்பிச்சு நான் சமைக்கிறதெல்லாம் வீடியோக்களா எடுத்து போஸ்ட் செய்ய ஆரம்பிச்சேன். ஆரம்பத்திலே கடாய், குக்கர் இப்படித்தான் சமைச்சேன், மேலும் எல்லாமே மைதா, சர்க்கரை இப்படித்தான் இருந்துச்சு. எங்கம்மாவுக்கு சர்க்கரை, மைதா இதெல்லாம் சாப்பிடக் கூடாது, அதே சமயம் நாங்களா இதெல்லாம் சாப்பிட்டு சாப்பிட்டு வெயிட் வேற ஏற ஆரம்பிச்சது. சரி கொஞ்சம் ஆரோக்கியமான சாப்பாடுக்கு மாறுவோமேன்னு யோசிச்சு ஓவன் ஒண்ணு வாங்கினோம். ஓவன்ல எண்ணெய் இல்லாமலே அப்பளம், வடகம் எல்லாம் கூட பொரிச்சுக்கலாம் என்கிறதால வாங்கினோம். அதையே என்னுடைய குக்கீஸ், பேஸ்ட்ரீஸ் எல்லாம் செய்யப் பயன்படுத்திக்கிட்டேன். எங்க அம்மாவுக்கு சாப்பிடவே முடியலைன்னாலும், இந்த குக்கீஸ், பேஸ்ட்ரீஸ் சாப்பிடப் பிடிக்கும். ஆனாலும் மனசக் கட்டுப்படுத்திக்குவாங்க. அதைப் பார்த்துட்டுதான் ஏன் நாம சர்க்கரை இல்லாம, மைதா இல்லாத குக்கீஸ், பேஸ்ட்ரீஸ் எல்லாம் முயற்சி செய்யக் கூடாதுன்னு தோணுச்சு’ இந்த எண்ணத்துடன் மைதா, சர்க்கரை இல்லா ஆரோக்கியமான பேக்கிங் தயாரிப்பிற்காக பலகட்ட முயற்சிகளை எடுத்திருக்கிறார் தனு. ‘நிறைய முயற்சிகள், நிறைய கட்ட சோதனைகளைக் கடந்துதான் என்னால அந்த மிருதுத் தன்மையைக் கொடுக்க முடிஞ்சது. குறிப்பா முட்டையில்லைன்னாலே கேக், குக்கீஸ்கள்ல அந்த மிருதுத் தன்மை வராது. அதற்கெல்லாம் எவ்வளவு தூரம் ஆரோக்கியமா செய்ய முடியுமோ செய்து பழகினேன். என்னுடைய கேக், பேஸ்ட்ரீகள் முழுக்க முழுக்க பனங்கற்கண்டு, கோதுமை கொண்டுதான் செய்கிறேன்.

மேலும் ஆரோக்கியமான கேக், குக்கீஸ்கள் செய்து சாப்பிடும் போதுதான் அதனுடைய அருமை தெரியுது. அப்படி ஒரு சுவை, மிருதுத்தன்மைன்னு நானே என்னுடைய கேக்ஸ்க்கு அடிமையாகிட்டேன். இந்த ஆரோக்கிய கேக்ஸ் மற்றும் பேஸ்ட்ரீஸ்க்கு ‘சுகர் கப்’ அப்படின்னு பெயர் வெச்சு புது பிஸினஸா உருவாக்கினேன். என் அம்மா முதல்ல குக்கீஸ், கேக்ஸ்ன்னு சாப்பிட ஆரம்பிச்சாங்க. அதுவே செம ஹேப்பி எனக்கு. அப்பா ஏற்கனவே பிஸினஸ் பண்றதால எனக்கும் அது சுலபமா வந்தது. இப்போ பார்த்திட்டு இருந்த வேலையை விட்டுட்டு முழுமையாகவே இந்த ஆரோக்கியமான கேக்ஸ், குக்கீஸ், பேஸ்ட்ரீஸ் தயாரிப்பிலே இறங்கிட்டேன். சில இடங்களில் ஸ்டால்கள் போடும்போது அப்பா, அம்மாவும் கூடவே வந்து உதவி செய்யறாங்க. சொல்லப் போனா என்னை விட எங்க அப்பாதான் கஸ்டமர்கள் கிட்டே நல்லா பேசுறார். ஆன்லைன் சேல்ஸ், ஆர்டர்கள் கூட நிறைய வருது. அதிலும் கொரோனாவுக்குப் பின் மக்கள் கிட்ட ஆரோக்கிய உணவுகள் மேலான ஆர்வம் அதிகரிச்சிருக்கு. அதனால் என்னுடைய கேக்ஸ்க்கு நிறைய கஸ்டமர்கள் வராங்க. எப்போதுமான கேக்ஸ்களை காட்டிலும் கொஞ்சம் விலை கூடதான். காரணம் நான் என்னுடைய மூலப்பொருள் விலை அதிகம். ஆனாலும் ஆரோக்கியமான உணவுகளை விற்கும் போது அதிலே கொஞ்சம் லாபம் கிடைச்சாலும் மனநிறைவா இருக்கு. அதிலும் கேக்ஸ், குக்கீஸ் எல்லாமே குழந்தைகளுக்குப் பிடிச்ச உணவு, அதை ஆரோக்கியமா கொடுக்கும் போது அதிலே இருக்குற சந்தோஷமே வேற’.
– ஷாலினி நியூட்டன்

Related posts

இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.10 கோடி கஞ்சா பறிமுதல்: 4 பேர் கைது

ரூ.100 கோடி நிலம் அபகரிப்பு வழக்கு; அதிமுக மாஜி அமைச்சருக்கு இடைக்கால ஜாமீன் இல்லை: முன்ஜாமீன் மனு குறித்து இன்று பரிசீலனை

விசிக பிரமுகர் சரமாரி வெட்டிக்கொலை: ஆட்டோ டிரைவர் கைது