திருவேற்காடு நகராட்சி அலுவலகம் முன்பு தூய்மை பணியாளர்கள் திடீர் சாலை மறியல்: 2 மாதங்களாக சம்பளம் வழங்கவில்லை என புகார்

பூந்தமல்லி: திருவேற்காடு நகராட்சியில், சம்பளம் வழங்காததை கண்டித்து, தூய்மை பணியாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இச்சம்பவத்தால், அங்கு பரபரப்பு நிலவியது. திருவேற்காடு நகராட்சியில் சுமார் 200க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் மற்றும் டெங்கு கொசு ஒழிப்பு பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் ஒப்பந்த அடிப்படையில் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பணிபுரிந்து வருகின்றனர்.

இந்த நிலையில், நேற்று காலை தூய்மை பணியாளர்கள் 150க்கும் மேற்பட்டோர் வேலையை புறக்கணித்து நகராட்சி அலுவலகம் முன்பு திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.
திருவேற்காடு நகராட்சி ஆணையர் ஜஹாங்கீர் பாஷாவுக்கும், ஒப்பந்ததாரர்களுக்கும் இடையே ஏற்பட்ட பிரச்னை காரணமாக கடந்த இரண்டு மாதங்களாக தூய்மை பணியாளர்களுக்கு சரிவர சம்பளம் கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

தூய்மை பணியாளர்களுக்கு இரண்டு மாத சம்பளமும், டெங்கு கொசு ஒழிப்பு பணியாளர்களுக்கு இந்த மாதம் 15 ஆம் தேதி ஆகியும் இதுவரை சம்பளம் வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இது குறித்து நகராட்சி ஆணையரை தூய்மை பணியாளர்கள் பலமுறை நேரில் சென்று கேட்டும் அதற்கு சரியான பதில் அவர் அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது. கடந்த இரண்டு மாதங்களாக சம்பளம் வழங்காததை கண்டித்தும், நகராட்சி ஆணையரின் போக்கை கண்டித்தும் தூய்மை பணியாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

மேலும் குப்பை அள்ளும் வாகனங்களை சாலையிலேயே நிறுத்தி வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் திருவேற்காடு பேருந்து நிலையத்திலிருந்து, சிவன் கோயில் செல்லும் சாலை வரை கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. காலை நேரம் என்பதால் பள்ளி மாணவ, மாணவியர், வேலைக்கு செல்பவர்களும் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

இது குறித்து, தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு திருவேற்காடு நகர் மன்ற தலைவர் என். இ.கே. மூர்த்தி மற்றும் திருவேற்காடு போலீசார், நகராட்சி ஆணையர் ஜஹாங்கீர் பாஷா ஆகியோர் வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையை தொடர்ந்து தூய்மை பணியாளர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இரண்டு மாதங்களாக சம்பளம் கொடுக்காததால் தூய்மை பணியாளர்கள் திடீரென போராட்டம் நடத்தியதால் அந்தப் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Related posts

சிவகங்கை மாவட்டம் மதகுப்பட்டியில் நகைக்கடையில் 300 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் 2 பேர் கைது

அக்.03: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை!

கதர் தொழிலுக்கு கை கொடுக்கும் வகையில் கதர், கிராம பொருட்களை அதிகளவில் வாங்கி நாட்டிற்கு வலிமை சேர்த்திட வேண்டும்: காந்தியடிகளின் பிறந்தநாளில் முதல்வர் வேண்டுகோள்