அதிமுக மோதலில் திடீர் திருப்பம் ஓ.பன்னீர்செல்வத்தை கைவிட்டார் அமித்ஷா: உள்கட்சிப் பிரச்னை என்று நழுவல்

சென்னை: அதிமுக உள்கட்சி மோதலில் திடீர் திருப்பமாக செல்வாக்கு இல்லாத ஓ.பன்னீர்செல்வத்தை, அமித்ஷா தற்போது கைவிட்டுள்ளது தெரியவந்துள்ளது. மேலும், அவர்களுக்குள் உள்ள பிரச்னை உள்கட்சிப் பிரச்னை. அதில் தலையிட விருப்பவில்லை என தெளிவுபடுத்தியுள்ளார். இது பன்னீர்செல்வம் ஆதரவாளர்களை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது. அதிமுக உள்கட்சி மோதல் தீவிரமடைந்துள்ளது. தலைவர்கள், நிர்வாகிகள் தங்கள் பக்கமே உள்ளனர் என்பதை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி நிரூபித்துள்ளார். ஆனால் தொண்டர்கள் தங்கள் பக்கம் உள்ளதாக பன்னீர்செல்வம் கூறி வருகிறார். இதற்காக திருச்சியில் மாநாடு நடத்தினார்.

அதேநேரத்தில், பன்னீர்செல்வத்தை நம்பி பயன் இல்லை என்று கருதிய பாஜ, மெல்ல மெல்ல எடப்பாடி பழனிசாமி பக்கம் சாய்ந்து விட்டது. டெல்லியில் பழனிசாமியுடன் அமித்ஷாவும் சந்தித்துப் பேசியதோடு அண்ணாமலையுடன் நடந்த மோதலையும் முடிவுக்கு கொண்டு வந்துள்ளார். இது பன்னீர்செல்வத்தை மேலும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. சசிகலாவை எதிர்த்து, பாஜ மேலிடமும், மோடியும் சொன்னதால்தான் தான் அதிமுகவை உடைத்ததாக ஏற்கனவே பன்னீர்செல்வம் கூறியிருந்தார். பின்னர் டிடிவி தினகரன் வெளியேறியபோது, பன்னீர்செல்வத்தையும், எடப்பாடி பழனிசாமியையும், அப்போது கவர்னராக இருந்த வித்யாசாகர் ராவ் சேர்த்து வைத்தார். அதன்பின்னர்தான் மக்களவை தேர்தல் நடந்தது.

அதில் தேனியைத் தவிர மற்ற 38 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி தோல்வியை சந்தித்தது. இந்தநிலையில் தற்போது மீண்டும் மக்களவை தேர்தல் வர உள்ளது. இதனால் அதிமுகவை ஒன்றிணைக்க பாஜக முயன்றது. ஆனால் எடப்பாடி பழனிச்சாமி, அதிமுக அணிகள் ஒன்றிணைய வாய்ப்பே இல்லை என்று கூறி பிடிவாதமாக இருந்து விட்டார். இதனால் வேறு வழி இல்லாமல், எடப்பாடி பழனிசாமியின் பின்னால்தான் அதிமுக தொண்டர்களும், நிர்வாகிகளும் இருப்பதை பாஜ மேலிடம் உணர்ந்தது. இதனால் பன்னீர்செல்வத்தை கை விட்டுவிட்டு அப்படியே பழனிசாமி பக்கம் தாவிவிட்டது. பழனிசாமியுடன்தான் கூட்டணி என்று அமித்ஷா அறிவித்து விட்டார்.

அதோடு, பன்னீர்செல்வம் விவகாரம், அது அவர்களது உள்கட்சிப் பிரச்னை என்று கை கழுவிக் கொண்டது. தன்னை நம்பி வந்த பன்னீர்செல்வத்தை தேர்தலுக்காக பாஜ கைவிட்டு விட்டதாக தற்போது பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். இந்நிலையில், டெல்லியில் பேட்டியளித்த உள்துறை அமைச்சர் அமித்ஷா, அதிமுகவின் உள்கட்சிப் பிரச்னையில் தலையிட விரும்பவில்லை. அவர்கள் இருவரும் சுமுகமாக பேசி முடிவு எடுக்க வேண்டும். சுமுக முடிவு எடுக்க வேண்டுமா, வேண்டாமா என்பது அவர்களது முடிவு என்று கூறிவிட்டார். இது பன்னீர்செல்வம் அணியினரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

Related posts

மக்களுக்கு சேவையாற்றுவோரை கவுரவிக்கும் வகையில் விஜயகாந்த், ஜி.விஸ்வநாதன் உள்ளிட்ட 9 பேருக்கு விருது: எஸ்டிபிஐ கட்சி அறிவிப்பு

பாடப்புத்தகத்தில் நாகப்ப படையாட்சியின் வரலாறு இடம்பெற நடவடிக்கை எடுக்க கோரிக்கை

அன்புமணி கோரிக்கை ஆன்லைன் சூதாட்டத்திற்கு அரசு தடை பெற வேண்டும்