திடீர் முடிவு

பிரதமர் மோடி மீண்டும் 3வது முறையாக தொடர்வாரா அல்லது இந்தியா கூட்டணி ஆட்சியை கைப்பற்றுமா என்ற கேள்விகளுக்கு பதில் ஜூன் 4ம் தேதி பகல் 12 மணிக்குள் முன்னணி நிலவரம் தெரிந்து விடும். இவை எல்லாம் தெரிய இன்னும் ஒருவாரம் கூட இல்லை. ஆனால் மோடி தலைமையிலான ஒன்றிய அரசு அடுத்தடுத்து எடுத்து வரும் நடவடிக்கைகள் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளன. மக்களவை தேர்தல் தேதியை தேர்தல் கமிஷன் அறிவித்த உடனேயே நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துவிடும்.

அதன்பின் எந்த மாநிலத்திலும் அதிகாரிகளை இடமாற்றம் செய்ய முடியாது. அவசர தேவை என்றால் தேர்தல் கமிஷன் ஒப்புதல் பெற வேண்டும். ஆனால் மோடி தலைமையிலான ஒன்றிய அரசில் அனைத்து துறை செயலாளர்களும் இந்த 7 கட்ட தேர்தல் நேரத்தில் தாறுமாறாக மாற்றப்பட்டு வந்தனர். இதைப்பற்றி தேர்தல் கமிஷன் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பியும் பதில் அளிக்கவில்லை.

ஆனால் தற்போது இந்திய ராணுவ தலைமை தளபதிக்கு திடீரென ஒரு மாதம் பணி நீட்டிப்பு வழங்கி மோடி தலைமையிலான ஒன்றிய அரசு உத்தரவிட்டு இருப்பது பலத்த சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. நமது நாட்டின் ராணுவ தலைமை தளபதியாக இருப்பவர் மனோஜ் பாண்டே. கடந்த 2022ம் ஆண்டு ஏப்ரல் 30ம் தேதி ராணுவத்தின் தலைமை தளபதியாக மனோஜ் பாண்டே பதவியேற்றார். அவரது பதவிக்காலம் வரும் மே 31ம் தேதி நிறைவடைகிறது.

தற்போது மக்களவை தேர்தல் நடைபெறுவதால் புதிய அரசு பதவியேற்ற பிறகு ராணுவத்தின் புதிய தலைமை தளபதி நியமிக்கப்படுவார். ஆனால் ஜூன் 4ம் தேதி ரிசல்ட் வரும் வரை பொறுக்காத மோடி அரசு, ராணுவ தலைமை தளபதி மனோஜ் பாண்டேவின் பதவிக் காலத்தை திடீரென மேலும் ஒரு மாதம் நீட்டித்து உத்தரவிட்டு உள்ளது. இதன்படி வரும் ஜூன் 30ம் தேதி அவர் ஓய்வு பெறுவார். இதற்கான உத்தரவை ஒன்றிய பாதுகாப்புத் துறை வெளியிட்டு உள்ளது.

இந்திய ராணுவ வரலாற்றில் கடந்த 50 ஆண்டுகளில் பதவி நீட்டிப்பு வழங்கப்படும் இரண்டாவது ராணுவ தளபதி மனோஜ் பாண்டே ஆவார். இதற்கு முன்பு 1975ம் ஆண்டு, அப்போதைய ராணுவ தளபதியான ஜி.ஜி.பீவூருக்கு ஓராண்டு காலம் பதவி நீட்டிப்பு வழங்கியது இந்திரா காந்தி அரசு. இந்த முடிவால் ராணுவ தளபதி பிவூருக்கு அடுத்த நிலையில் இருந்த பி.எஸ்.பகத்துக்கு ராணுவ தளபதியாகும் வாய்ப்பு மறுக்கப்பட்டது. இது தொடர்பான விவாதங்கள் அப்போது ராணுவ அதிகாரிகள் மத்தியில் தீவிரமாக விவாதிக்கப்பட்டது.

தற்போது மனோஜ் பாண்டேவுக்கும் அதேபோல் மோடி அரசு பதவி நீட்டிப்பு வழங்கி உள்ளது. இதனால் அவருக்கு அடுத்த நிலையில் உள்ள மூத்த அதிகாரிகள் ராணுவ துணை தளபதி உபேந்திர திவிவேதி, தென் இந்திய ராணுவ தளபதி ஏ.கே.சிங் ஆகியோருக்கு ராணுவ தலைமை தளபதி பதவியை பெற முடியாத சூழல் உருவாகி இருக்கிறது. இந்த முடிவு எதிர்க்கட்சிகளால் கடுமையாக விமர்சனம் செய்யப்பட்டுள்ளது.

நாட்டின் பாதுகாப்பு தொடர்பான விஷயங்களில் மோடி அரசு இப்படி நடவடிக்கை எடுப்பது சரியல்ல என்று அனைத்து தரப்பினரும் விமர்சனம் செய்துள்ளனர். மக்களவை தேர்தல் இன்னும் நிறைவடையாத நிலையில், ராணுவ தளபதிவுக்கு அவசர அவசரமாக ஒன்றிய அரசு பதவி நீட்டிப்பு வழங்கியது ஏன் என்ற கேள்வியும், இதை தேர்தல் ஆணையம் கண்டும் காணாமல் இருப்பது ஏன் என்ற கேள்வியும் எழுந்து உள்ளது. இதற்கு இருதரப்பில் இருந்தும் உரிய பதில் இதுவரை வரவில்லை என்பதுதான் வேதனை.

Related posts

பண்ருட்டி அருகே 2000 லிட்டர் மெத்தனால் பதுக்கல்: பெட்ரோல் பங்க்-கிற்கு சீல்; சிபிசிஐடி அதிரடி

டிஜிட்டல் பண பரிவர்த்தனை ஊக்குவித்தால் பரிசு

சென்னையில் மாநகரப் பேருந்து கண்ணாடி உடைப்பு