சூடானில் இருந்து 3,400 பேர் தாயகம் திரும்ப இந்திய தூதரகத்தை தொடர்பு கொண்டுள்ளனர்: ஒன்றிய வெளியுறவுத் துறை செயலாளர் வினய் மோகன் குவாட்ரா தகவல்

டெல்லி: சூடானில் இருந்து 3,400 பேர் தாயகம் திரும்ப இந்திய தூதரகத்தை தொடர்பு கொண்டிருப்பதாக ஒன்றிய வெளியுறவுத் துறை செயலாளர் வினய் மோகன் குவாட்ரா தெரிவித்திருக்கிறார். உள்நாட்டு போரினால் பாதிக்கப்பட்டிருக்கும் சூடானில் இருக்கும் இந்தியர்களை மீட்க ஒன்றிய வெளியுறவு அமைச்சகம் ஆப்ரேஷன் காவேரி திட்டத்தின் மூலமாக நடவடிக்கை எடுத்து வருகிறது. இதுபற்றி டெல்லியில் செய்தியாளர்கள் மத்தியில் பேசிய ஒன்றிய வெளியுறவுத்துறை செயலாளர் வினய் மோகன், சூடானில் இருக்கும் இந்திய தூதரக கணக்கெடுப்பின்படி 3,500 இந்தியர்கள் மற்றும் இந்திய வம்சாவளியை சேர்ந்த 1000 பேர் இருப்பதாக கூறினார்.

இவர்களில் 3,400 பேர் இந்திய தூதரகத்தை தொடர்பு கொண்டு தாயகம் திரும்ப விருப்பம் தெரிவித்திருப்பதாகவும், இவர்களை மீட்பதற்காக இந்திய கடற்படைக்கு சொந்தமான 3 ஐஎன்எஸ் கப்பல்கள் சூடான் துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாக தெரிவித்தார். இதுகுறித்து பேசிய அவர், நேற்றிரவு சவூதி அரேபியாவில் இருந்து விமானம் மூலம் 360 பேர் நாடு திரும்பி உள்ளனர். 246 பேர் மகாராஷ்டிராவிற்கு அனுப்பப்பட்டுள்ளனர். ஏறத்தாழ 495 பேர் தற்போது ஜெட்டா சர்வதேச விமான நிலையத்தில் உள்ளனர்.

இவர்களில் பெரும்பாலானோர் இந்தியாவிற்கு வரவும், ஒரு சிலர் மீண்டும் சூடானுக்குத் திரும்பவும் விரும்புகின்றனர் என்றார். சூடான் தலைநகரான கார்டூன் நகரில் இருந்து இந்தியர்களை பாதுகாப்பாக சூடான் துறைமுக பகுதிக்கு அழைத்து வர பேருந்து வசதிகள் செய்யப்பட்டிருப்பதாகவும், சூடான் துறைமுகத்தில் இருந்து இந்திய போர்க்கப்பல்கள் மூலமாக சவூதி அரேபியாவின் ஜெட்டா பகுதிக்கு அழைத்துவரப்பட்டு அங்கிருந்து விமானம் மூலமாக இந்தியா அழைத்துவரப்பட இருப்பதாக அவர் கூறினார்.

Related posts

சிவகங்கை அருகே சகோதரர்கள் இருவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 4 பேர் நீதிமன்றத்தில் சரண்

சென்னை திருவல்லிக்கேணியில் பைக் ரேஸ் ஒட்டியதில் ஏற்பட்ட தகராறில் இளைஞருக்கு கத்திக்குத்து: 8 பேர் கைது..!!

என்சிஇஆர்டி அலட்சியம்; 6ம் வகுப்பு மாணவர்கள் தவிப்பு