எதிர்க்கட்சி மாநிலங்களுக்கு நிதி வழங்குவதில் பாரபட்சம் ஒன்றிய அரசுக்கு எதிராக அடுத்தடுத்து போராட்டம்: மேற்கு வங்கம், கேரளா, கர்நாடகா மாநிலங்கள் வரிசையாக போராட்டக் களத்தில் குதித்தன

சென்னை: எதிர்க்கட்சி மாநிலங்களுக்கு நிதி வழங்குவதில் பாரபட்சம் காட்டி வரும் ஒன்றிய பாஜ அரசுக்கு எதிராக அடுத்தடுத்து போராட்டங்கள் நடந்து வருகிறது. மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கொல்கத்தாவில் 3 நாள் போராட்டத்தை நடத்தி வருகிறார். இன்று மாலை வரை போராட்டம் நடைபெறுகிறது. கர்நாடகா காங்கிரஸ் அரசு சார்பில் 7ம் தேதியும், கேரள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அரசு சார்பில் 8ம் தேதியும் டெல்லியில் போராட்டம் நடத்தப்படுகிறது. டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் 8ம் தேதி திமுக எம். பி.க்கள் கருஞ்சட்டை ஆர்ப்பாட்டம் நடத்துகின்றனர். மாநிலங்களின் அடுத்தடுத்த போராட்ட அறிவிப்பால் ஒன்றிய அரசுக்கு எதிர்ப்பு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. ஒன்றிய அரசு மாநிலங்களுக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. குறிப்பாக நிதி ஒதுக்குவதில் பாரபட்சம், திட்டங்கள் அறிவிப்பதில் பாரபட்சம் காட்டுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. கடந்த 1ம் தேதி ஒன்றிய இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இந்த பட்ஜெட்டில் பல மாநிலங்கள் குறிப்பாக எதிர்க்கட்சிகள் ஆட்சி செய்யும் மாநிலங்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்தநிலையில், மேற்குவங்க மாநிலத்திற்கு பல்வேறு சமூக நலத் திட்டங்களுக்கு ஒன்றிய அரசு நிதியை வழங்கவில்லை. பலமுறை கேட்டுப்பார்த்தும் நிதி வழங்காததால் முதல்வர் மம்தா பானர்ஜி நேற்று முன்தினம் கொல்கத்தாவின் மையப்பகுதியில் அம்பேத்கர் சிலை முன் தனது கட்சி தலைவர்களுடன் திடீரென தர்ணா போராட்டத்தை தொடங்கினார். கடும் குளிரிலும் நேற்று முன்தினம் இரவு அவர் அங்கு போராட்டம் மேற்கொண்டார். நேற்று காலை அந்த பகுதியில் அவர் நடைபயிற்சி மேற்கொண்டார். மேற்குவங்க சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் திங்கள்கிழமை தொடங்க உள்ளதால் இன்று மாலைவரை அவர் போராட்டம் நடத்துவார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கிடையே மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி சட்டத்தின் கீழ் பணியாற்றும் 21 லட்சம் ஊழியர்களுக்கு ஒன்றிய அரசு வழங்க வேண்டிய நிதியை பிப்ரவரி 21ம் தேதிக்குள், அவர்களது வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்போவதாக மம்தா அறிவித்தார்.

ஒன்றிய பாஜ அரசின் மாற்றாந்தாய் கொள்கையால் கடந்த 5 ஆண்டுகளில் ரூ.62 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறி கர்நாடக காங்கிரஸ் அரசு சார்பில் வரும் 7ம் தேதி டெல்லியில் போராட்டம் நடத்தப்படும் என்று காங்கிரஸ் தலைவரும் துணை முதல்வருமான டி.கே. சிவகுமார் கூறியுள்ளார். 14வது நிதிக்குழுவின் பரிந்துரையின்படி கர்நாடக மாநிலத்திற்கு 4.71 சதவீதம் பங்கு வழங்கப்பட்டது. ஆனால் 15வது நிதிக்குழுவில் மாநிலத்தின் பங்கு 3.64 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. இதனால், ஐந்து ஆண்டுகளுக்கு ரூ.62 ஆயிரம் கோடி குறைவாக உள்ளது. எனவே ஒன்றிய அரசுக்கு எதிராக முதல்வர் சித்தராமையா தலைமையில் டெல்லியில் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. வரும் பிப்.7ல் நடைபெறும் இந்த போராட்டத்தில் முதல்வர் சித்தராமையா தலைமையில் நான் உட்பட மாநில அமைச்சர்கள், எம்பிக்கள், எம்எல்ஏக்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள் இதில் கலந்துகொள்கிறோம் என்றும் டி.கே.சிவகுமார் தெரிவித்தார். அதேபோல, கேரளாவுக்கு தேவையான நிதியை ஒதுக்காமல் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு ஒன்றிய அரசு முட்டுக்கட்டை போடுவதாக கேரளா நீண்ட காலமாக கூறி வருகிறது. இந்நிலையில் கேரளாவுக்கு நெருக்கடி கொடுத்து வரும் ஒன்றிய அரசை கண்டித்து டெல்லியில் வரும் 8ம் தேதி போராட்டம் நடத்தப் போவதாக முதல்வர் பினராயி விஜயன் அறிவித்தார். டெல்லி ஜந்தர் மந்தரில் நடைபெறும் இந்தப் போராட்டத்தில் முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் கேரள அமைச்சர்கள் அனைவரும் கலந்து கொள்கின்றனர். இந்தப் போராட்டத்தில் கேரள காங்கிரஸ் தலைவர்களும் கலந்து கொள்ள வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கேரள மாநில செயலாளர் கோவிந்தன் வலியுறுத்தியுள்ளார். டெல்லியில் திமுக எம்.பி.க்கள் போராட்டம்: டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் வரும் 8ம் தேதி திமுக எம். பி.க்கள் சார்பில் கருஞ்சட்டை ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என தி.மு.க. நாடாளுமன்றக்குழுத் தலைவர் டி.ஆர். பாலு அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: ஒன்றிய அரசின் இடைக்கால நிதி நிலை அறிக்கையில் தமிழ்நாட்டுக்கு புயல் வெள்ளநிவாரண நிதி உதவி மற்றும் வளர்ச்சித் திட்டங்களுக்கு உரிய நிதியை ஒதுக்கீடு செய்யாத ஓரவஞ்சனையைக் கண்டித்து பிப்ரவரி 8 காலை 10.00 மணிக்கு திமுக மற்றும் தோழமைக் எம்.பி.க்கள் டெல்லியில் நாடாளுமன்ற வளாகத்திலுள்ள காந்தி சிலை முன்பு கருஞ்சட்டை அணிந்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த தோழமைக் கட்சி எம்.பி.க்களும் கலந்து கொள்ள வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன். குடியரசு‌த் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது விவாதம் நேற்று நடைபெற்றது. குடியரசு‌த் தலைவர் தனது உரையில் அரசின் கொள்கைகளையும் திட்டங்களையும் தான் எடுத்துக் கூறி உள்ளார். தனது சொந்த கருத்துக்கள் எதையும் சொல்லவில்லை. அவரது உரை அரசு தயாரித்த உரை. அதனை குடியரசுத் தலைவர் முர்மு அச்சு பிறழாமல் கடைசி வார்த்தை வரை அப்படியே பேசி உள்ளார். அதுதான் மரபு. அதற்காக முர்முவுக்கு நன்றி கூறியே ஆக வேண்டும். அதற்காக அவரது உரையில் பிரதிபலிக்கப்பட்டுள்ள, திமுகவின் கொள்கை கோட்பாடுகளுக்கு எதிரான ஒன்றிய அரசின் கொள்கைகள் செயல்பாடுகள் அனைத்தையும் திமுக ஏற்பதாக பொருள் அல்ல. குடியரசுத் தலைவரைப் போல் அல்லாமல் பல ஆளுநர்கள் குறிப்பாக தமிழ்நாடு ஆளுநர் மாநில அரசு கொடுத்த உரையில் இல்லாத விஷயங்களைப் பேசினார்.சில ஆளுநர்கள் மாநில அரசு தங்கள் அரசு என்பதை மறந்து எதிர்க் கட்சித் தலைவர்களுடன் போட்டி போடும் வகையில் அரசுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்வதை வழக்கமாகவே வைத்துள்ளனர். அரசியலமைப்பு சட்டத்தை மதிக்காமல் கோடிக்கணக்கான மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளை மதிக்காமல் மக்கள் தீர்ப்பை காலடியில் போட்டு மிதிக்கும் விதத்தில் செயல்படுகிறார்கள். அத்தகைய ஆளுநர்களை கண்டித்து அரசியலமைப்புச் சட்டத்தின்படி பணியாற்ற வைக்க குடியரசுத் தலைவர் முன்வர வேண்டும். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார். தென் மாநிலங்கள் மற்றும் மேற்கு வங்கம் என ஒன்றிய அரசுக்கு எதிராக பல்வேறு மாநிலங்கள் அடுத்தடுத்த போராட்டத்தை அறிவித்துள்ளன. இதனால் மேலும் பல மாநிலங்கள் போராட்டத்தை அறிவிக்கலாம் என்று கூறப்படுவதால் பரபரப்பு எழுந்துள்ளது.

 

Related posts

மீனவர்கள் திடீர் மறியல்: மாமல்லபுரம் அருகே பரபரப்பு

சென்னை மெரினாவில் வான் சாகச நிகழ்ச்சியை காண்பதற்காக புறநகர் ரயில்களில் 3 லட்சம் பேர் பயணம்

பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் கூடிய கலைஞர் நூற்றாண்டு பூங்கா நாளை திறப்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்கள்!