பண்ருட்டி மருங்கூர் கிராமத்தில் தங்கையை போன்று அக்காவும் சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி

*கிராம மக்கள் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்

பண்ருட்டி : பண்ருட்டி அருகே தங்கையை தொடர்ந்து அக்காவும் ஐஏஎஸ் தேர்வில் வெற்றிப்பெற்று சாதனை படைத்துள்ளார். கிராம மக்கள் பட்டாசு வெடித்து வெற்றியை கொண்டாடினர்.
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த மருங்கூர் கிராமத்தை சேர்ந்தவர் ராமநாதன். முந்திரி விவசாயி. இவரது மனைவி இளவரசி கடலூர் கல்வி அலுவலகத்தில் மேற்பார்வையாளராக பணியாற்றி வருகிறார். இவர்களின் இளைய மகள் ஐஸ்வரியா கடந்த 2020ம் ஆண்டில் நடந்த இந்திய குடிமைப்பணி தேர்வில் ஐஏஎஸ் ஆக வெற்றி பெற்று மாநில அளவில் இரண்டாம் இடத்தை பிடித்தார். தற்போது பொன்னேரியில் சப்-கலெக்டராக பணியாற்றி வருகிறார்.

இதற்கிடையே இவரது அக்கா சுஷ்மிதா(26) தற்போது நடந்த இந்திய குடிமைப்பணி தேர்வில் கலந்து கொண்டு சிவில் சர்வீஸ் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார். இந்தியளவில் 528 இடத்தை பெற்றுள்ளார். ஒரே குடும்பத்தில் அக்கா -தங்கை என இருவரும் சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றிப்பெற்று சாதனை படைத்துள்ளனர். இதனை தொடர்ந்து, கிராம மக்கள் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடி வருகின்றனர். இது குறித்து சுஷ்மிதா கூறுகையில், ஐஏஎஸ் தேர்வின் வெற்றியை எனது தாய், தந்தைக்கு சமர்ப்பிக்கிறேன்.

நான் தான் முதன் முதலில் குடிமைப்பணி தேர்வு எழுத ஆரம்பித்தேன். அதன்பிறகே எனது சகோதரி எழுத ஆரம்பித்தார். ஆனால் அவர் எனக்கு முன்பாக தேர்வாகிவிட்டார். நான் தொடர்ந்து முயற்சி செய்து கொண்டே இருந்தேன். 6 வது முறையாக தேர்வு எழுதி ஐஏஎஸ் தேர்வில் வெற்றியடைந்துள்ளேன்.

கல்வியில் விடா முயற்சி, கடின உழைப்பு இருந்தால் சாதித்து விடலாம். நான் இதே போல்தான் கடுமையாக படித்து தான் தேர்வில் வெற்றியடைந்திருக்கிறேன். இதில் எனது தாய், தந்தை அளித்த ஊக்கம் மிக அதிகம், உன்னால் முடியும் என்று நம்பிக்கை கொடுத்து கொண்டே இருந்தனர். தேர்வு அறை வரை வந்து வழியனுப்புவார்கள். அந்த அளவுக்கு நிறைய நம்பிக்கையும், ஊக்குமும் தந்தனர். கல்வியால் தான் அனைத்தும் சாதிக்க முடியும். எல்லாத்துறைகளையும் மேம்படுத்தவும், வளர்ச்சியை கொண்டுவரமுடியும் என நான் உறுதியாக நம்புகிறேன். எனக்கு கொடுக்கப்படும் பணி மூலம் நாட்டு மக்களுக்காக அயராது பாடுபடுவேன், என்றார்.

Related posts

குரூப் -1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியானது

விவசாயம், பொதுமக்களுக்கு பயன்படும் பால்குளம் ரூ.90 லட்சம் செலவில் சீரமைப்பு

ஆடி மாதத்தில் புகழ்பெற்ற அம்மன் கோயில்களுக்கு மூத்த குடிமக்களுக்கான கட்டணமில்லா ஆன்மிகப் பயணம்: ஜூலை 17ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் அமைச்சர் சேகர்பாபு தகவல்