விவசாயிகளுக்கு மானிய விலையில் பண்ணைக் கருவிகள்: வேளாண்மை இணை இயக்குநர் தகவல்

திருவள்ளூர்: விவசாயிகளுக்கு மானிய விலையில் பண்ணைக் கருவிகள் வழங்கப்படும் என வேளாண்மை இணை இயக்குநர் தெரிவித்துள்ளார்.2023 – 2024ம் நிதியாண்டு வேளாண்மை நிதி நிலை அறிக்கையில் வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் மாநில வேளாண்மை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் சிறு, குறு விவசாயிகள் மற்றும் நிலமற்ற வேளாண் தொழிலாளர்கருக்கு மானியத்தில் வேளாண் பண்ணைக் கருவிகள் வழங்கப்படும் என அறிவித்திருந்தார். இது தொடர்பாக, திருவள்ளூர் மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் எல்.சுரேஷ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

சிறு, குறு விவசாயிகள் மற்றும் நிலமற்ற வேளாண் தொழிலாளர்கள், அன்றாட வேளாண் பணிகளில் பயன்படுத்தும் விதமாக கடப்பாரை, இரும்புச்சட்டி, களைக்கொத்து, மண்வெட்டி மற்றும் கதிர் அரிவாள் போன்ற வேளாண் கருவிகளை வழங்குவதன் மூலமாக வேளாண் பணிச்சுமை குறைக்கப்பட்டு செயல் திறன் அதிகரித்து வேளாண் உற்பத்தி மற்றும் உற்பத்தி திறன் அதிகரிக்கப்படும்.

கடப்பாரை, இரும்புச்சட்டி, களைக்கொத்து, மண்வெட்டி மற்றும் கதிர் அரிவாள் ஆகிய வேளாண் கருவிகள் அடங்கிய தொகுப்பு பொதுப்பிரிவு, ஆதிதிராவிட மற்றும் பழங்குடிமின சிறு குறு விவசாயிகளுக்கும், நிலமற்ற வேளாண் தொழிலாளர்களுக்கும் 50 சதவீத மானியத்தில் வழங்கப்படும். அதிகபட்சமாக தொகுப்பு ஒன்றிற்கு ரூ.1,500 மானியம் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் விவசாயிகள் உழவன் செயலி அல்லது அபிஸ்நெட் வலைதளத்தில் பதிவு செய்து பயன்பெறலாம். இதுகுறித்து தகவல் பெற தங்கள் வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தினை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related posts

தமிழ்நாட்டில் 18 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்

சிவகங்கை மாவட்டம் மதகுப்பட்டியில் நகைக்கடையில் 300 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் 2 பேர் கைது

மகளிர் டி20 உலகக்கோப்பை தொடர் இன்று முதல் தொடக்கம்