பொதட்டூர்பேட்டையில் ஆய்வு அரசு போக்குவரத்து பணிமனை மேம்படுத்தப்படும்: எஸ்.சந்திரன் எம்எல்ஏ தகவல்

பள்ளிப்பட்டு: பொதட்டூர்பேட்டை அரசு போக்குவரத்து பணிமனையினை ஆய்வு செய்து, இப்பணிமனை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று எஸ்.சந்திரன் எம்எல்ஏ தெரிவித்தார். பள்ளிப்பட்டு அருகே பொதட்டூர்பேட்டையில் கடந்த 2010ம் ஆண்டு திமுக ஆட்சியில் அரசு பேருந்து பணிமனை கொண்டுவரப்பட்டது. இருப்பினும் முறையாக வசதிகள் செய்து தரப்படாத நிலையில் பெயரளவில் பணிமனையாக செயல்பட்டு வருகின்றது.

பொதட்டூர்பேட்டை போக்குவரத்து பணிமனை மேம்படுத்தி அனைத்து வசதிகளும் செய்துத்தர வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்களின் நீண்டகால கோரிக்கை ஏற்று எஸ்.சந்திரன் எம்எல்ஏ நேற்று ஆய்வு செய்தார். பணிமனை முழுமையாக இயங்க தேவைகள் குறித்து போக்குவரத்து தொழிலாளர்களிடம் கேட்டறிந்தார்.

இதனையடுத்து, போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கரை செல்போனில் தொடர்புகொண்டு, திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட பணிமனையில் கிளை உதவி மேலாளர் பணி அமர்த்தி, பணியாளர்கள், கணினி இயக்குபவர்கள், அலுவலக மேலாண்மை அலுவலர்கள் நியமிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். இக்கோரிக்கையை ஏற்று, உடனடியாக செய்து தரப்படும் என்று அமைச்சர் சிவசங்கர் கூறியதாக தெரிவித்தார். மேலும், டீசல் டேங்க் மற்றும் பணிமனைக்கு சுற்றுச்சுவர் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்து தரப்படும் என்று உறுதியளித்தார்.

நிகழ்வின்போது, பொதட்டூர்பேட்டை பேரூர் திமுக செயலாளர் டி.ஆர்.கே.பாபு, மாவட்ட நெசவாளரணி அமைப்பாளர் இ.கே.உதயசூரியன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் டி.எம்.சுகுமாரன், முன்னாள் பேரூராட்சி துணை தலைவர் டி.ஆர்.கே.ரவி, மாவட்ட பிரதிநிதி ஜெ.டி.சஞ்சய் காந்தி, திருத்தணி போக்குவரத்து பணிமனை கிளை மேலாளர் தேவன், தொ.மு.ச காஞ்சிபுரம் மண்டல துணை தலைவர் முனிரத்தினம், பள்ளிப்பட்டு வடக்கு ஒன்றிய நிர்வாகி கொளத்தூர் கோபி, நிர்வாகிகள் மோகன், சத்தியா, வாசு, மீசை வெங்கடேசன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Related posts

அமீர் உள்பட 12 பேர் மீது குற்றப்பத்திரிகை; ஜாபர் சாதிக் வழக்கில் திடீர் திருப்பம்: அமலாக்கத்துறை அதிரடி

ராமன்பிள்ளை தெருவில் பள்ளங்கள் சீரமைக்கப்படுமா?

திருவள்ளுவர் பிறந்தநாள் குறித்து எந்த ஆதாரமும் இல்லாமல் அரசுக்கு உத்தரவிட முடியாது: ஐகோர்ட் திட்டவட்டம்!!