மாயமான மாணவ, மாணவி தடாகத்தில் சடலமாக மிதந்தனர்: கேரளாவில் பரபரப்பு

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் கொல்லம் அருகே உள்ள பூயப்பள்ளி என்ற பகுதியைச் சேர்ந்தவர் தேவநந்தா (17). இவர் அருகே ஓடானவட்டம் பகுதியிலுள்ள ஒரு பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தார். அம்பலம்குன்னு பகுதியைச் சேர்ந்தவர் ஷெபின் ஷா (16). இவர் கொட்டாரக்கரையில் உள்ள ஒரு பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தார். இருவரும் பக்கத்து ஊரை சேர்ந்தவர்கள் என்பதால் நெருங்கிப்பழகி வந்துள்ளனர். இருவரும் காதலித்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் பள்ளிக்கு சென்ற இவர்கள் இருவரும் பின்னர் வீடு திரும்பவில்லை.

இதுகுறித்து இவர்களது பெற்றோர் பூயப்பள்ளி போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய போலீசார் தேவநந்தா மற்றும் ஷெபின் ஷாவை தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று அப்பகுதியில் உள்ள சாஸ்தாம்கோட்டை தடாகத்தில் தேவநந்தா மற்றும் ஷெபின் ஷா ஆகிய இருவரும் சடலமாக மிதந்தனர். இதுகுறித்து அறிந்த போலீசார் அங்கு விரைந்து சென்று இருவரது உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கொல்லம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தேவநந்தாவும், ஷெபின் ஷாவும் அங்கு சென்றபோது தவறுதலாக தண்ணீரில் மூழ்கி இறந்தார்களா? அல்லது தற்கொலையா? அல்லது வேறு எதுவும் காரணமா? என்பது குறித்து பல்வேறு கோணங்களில் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

காஞ்சிபுரத்தில் நடைபெற்ற திமுக பவள விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை

திமுக பவளவிழா பொதுக்கூட்டத்தில் திமுக கூட்டணி கட்சி தலைவர்கள் உரை

சுற்றுலா பஸ் கவிழ்ந்து 15 மாணவ, மாணவியர் காயம்