பஸ் படிக்கட்டில் மாணவர்கள் ஆபத்தான பயணம்

*விழிப்புணர்வு ஏற்படுத்த வலியுறுத்தல்

சேத்தியாத்தோப்பு : சேத்தியாத்தோப்பில் அரசு பஸ் படிக்கட்டில் மாணவர்கள் ஆபத்தான பயணம் செய்வதால் போதிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.சேத்தியாத்தோப்பு பேரூராட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள புதிய பேருந்து நிலையத்திற்குள் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் செல்லாமல் ராஜீவ்காந்தி சிலை பேருந்து நிறுத்த பகுதியோடு சென்று வந்தன.

இதுகுறித்து அரசு போக்குவரத்து துறை அதிகாரிகள் மற்றும் நேர காப்பாளர்களும் அனைத்து பேருந்துகளும் உள்ளே சென்று வர வலியுறுத்தியதன் பேரில், அனைத்து பேருந்துகளும் பேருந்து நிலையத்திற்குள் சென்று வருகின்றன. இந்நிலையில் ஒரு சில அரசு பேருந்துகள் இப்போதும் பேருந்து நிலையத்திற்குள் செல்லாமல் செல்கின்றன. குறிப்பாக நேற்று முன்தினம் பாளையங்கோட்டை செல்லும் அரசு பேருந்து ராஜீவ்காந்தி சிலை பேருந்து நிறுத்தத்தோடு திரும்பி சென்றது.

அப்போது அந்த பேருந்தில் 10க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கட்டில் தொங்கியவாறு ஆபத்தான முறையில் பயணம் மேற்கொண்டனர். ஏதேனும் அசம்பாவிதம் ஏற்படும் முன்பு போக்குவரத்து துறை அதிகாரிகள் பேருந்தின் படிக்கட்டில் மாணவர்கள் தொங்கியவாறு பயணிக்கும் வகையில் பஸ்சை இயக்க கூடாது என ஓட்டுனர், நடத்துனர்களை எச்சரிக்கை செய்ய வேண்டும். பேருந்து நிலையத்திற்குள் அரசு பேருந்துகள் சென்று வர உத்தரவிட வேண்டும். மேலும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் படிக்கட்டில் பயணம் செய்யும் மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டுமென சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Related posts

சென்னையில் சிறுவனை கடித்த தெருநாய்

மும்பை நகரில் வெள்ளப்பெருக்கு: பள்ளி, கல்லூரிகளுக்கு அரைநாள் விடுமுறை அறிவிப்பு

கூடங்குளம்: மீண்டும் மின் உற்பத்தி தொடக்கம்