தன்பாலின ஈர்ப்பால் விபரீதம் காதலை ஏற்க மறுத்த மாணவனை கத்தியால் குத்திய சக மாணவன்: ஓடும் கல்லூரி வேனில் பரபரப்பு

குளித்தலை: குளித்தலை அருகே தன்பாலின காதலை ஏற்க மறுத்த இன்ஜினியரிங் மாணவனை கத்தியால் குத்திய சக மாணவனை போலீசார் கைது செய்தனர். கரூர் மாவட்டம் குளித்தலை அருகே அய்யர்மலை புலியூர் பகுதியில் தனியார் பொறியியல் கல்லூரி உள்ளது. இங்கு படிக்கும் மாணவர்களை ஏற்றிகொண்டு குளித்தலை வழியாக அய்யர்மலை சாலையில் நேற்று கல்லூரி வேன் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது வேனில் இருந்த மாணவர்கள் அண்ணாமலை, நிதிஷ்குமார் இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த அண்ணாமலை தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் நிதிஷ்குமாரின் கழுத்து பகுதியில் சரமாரியாக குத்தினார்.

இதை பார்த்து அதிர்ச்சியடைந்த வேன் ஓட்டுனர் உடனடியாக குளித்தலை அரசு மருத்துவமனைக்கு வேனை ஓட்டி சென்றார். அங்கு நிதிஷ்குமார் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு கழுத்து பகுதியில் 12 தையல் போடப்பட்ட நிலையில், தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். தகவல் அறிந்து வந்த போலீசார் அண்ணாமலையை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தனர். இதில் திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.

இதுகுறித்து போலீசார் கூறியதாவது: திருச்சி மாவட்டம் தொட்டியம் கவுத்தரசநல்லூரை சேர்ந்தவர் அண்ணாமலை (21). இவர் இன்ஜினியரிங் கல்லூரியில் எம்பிஏ முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இதே கல்லூரியில் நிதிஷ்குமார் பி.இ மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். இவர்கள் இருவரும் ஒரே கல்லூரி வேனியில் வரும்போது பழக்கம் ஏற்பட்டுள்ளது. மேலும் அவர்கள் 2 பேரும் பல இடங்களுக்கு சென்று வீடியோ எடுத்து அதனை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வந்துள்ளனர். இந்த பழக்கம் நாளடைவில் நிதிஷ்குமார் மீது அண்ணாமலைக்கு காதல் ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் மேலும் நிதிஷ்குமாரிடம் நெருங்கி பழகி வந்துள்ளார். இதனை பிடிக்காத நிதிஷ்குமார் அவருடன் பழகுவதை நிறுத்தி உள்ளார்.

நிதிஷ்குமார் தன்னுடன் பேசாததாலும், செல்போனிலும் பேச மறுத்ததாலும் அண்ணாமலை மனஉளைச்சலில் இருந்து வந்துள்ளார். இதனால், 25ம்தேதி நித்தீஷ்குமார் வீட்டிற்கு அவர் சென்றுள்ளார். அப்போது நித்தீஷ்குமாரின் பெற்றோர், இனிமேல் நிதீஷ்குமாரிடம் பழகக்கூடாது என்றும் வீட்டிற்கும் தேடி வரக்கூடாது எனக்கூறி அண்ணாமலையை அனுப்பி உள்ளனர். இதனால் மனஉளைச்சலில் இருந்த அண்ணாமலை இன்று (நேற்று) காலை கல்லூரி வேனில் வைத்து கத்தியால் குத்தியுள்ளார். இவ்வாறு போலீசார் தெரிவித்தனர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் அண்ணாமலையை கைது செய்தனர்.

Related posts

வருமான வரித்துறை அலுவலகத்துக்கு மின்னஞ்சலில் வெடிகுண்டு மிரட்டல்!

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்; வாக்குப்பதிவு இயந்திரத்தில் வேட்பாளர் பெயர் சின்னம் பொருத்தும் பணி துவங்கியது!

மெரினாவில் ரேபிடோ ஓட்டுநரிடம் போலீஸ் எனக்கூறி, ரூ.500, செல்போன் பறித்த ஒருவர் கைது!