மாணவர்களின் பெற்றோர்களை தொடர்பு கொண்டு ஸ்காலர்ஷிப் பெற்று தருவதாக ரூ.7 லட்சம் நூதன மோசடி: நாமக்கல்லை சேர்ந்த 5 பேர் கைது

கோவை: மாணவர்களின் பெற்றோர்களை தொடர்பு கொண்டு ஸ்காலர்ஷிப் பெற்று தருவதாக ரூ.7 லட்சம் நூதன மோசடி செய்த நாமக்கல்லை சேர்ந்த 5 பேரை போலீசார் கைது செய்தனர். கோவையில் 10 மற்றும் பிளஸ் 2 படிக்கும் மாணவர்களின் பெற்றோர் விவரங்களை ஆன்லைன் மூலமாக சேகரித்த கும்பல், அவர்களை செல்போன் மற்றும் வாட்ஸ் அப் மூலம் தொடர்பு கொண்டு உங்களது மகன், மகளுக்கு ஸ்காலர்ஷிப் கிடைத்துள்ளது என அரசு அலுவலர்கள் போல் பேசி உள்ளனர். அந்த கும்பல் வாட்ஸ் அப் ப்ரோபைலில் தமிழ்நாடு அரசின் லோகோவை வைத்துள்ளனர். தொடர்ந்து வாட்ஸ் அப்பில் கியூ.ஆர்.கோடு அனுப்பி உங்களுக்கு ஸ்காலர்ஷிப் பணம் அனுப்பி வைக்கப்பட்டதாக போட்டோ எடுத்து அனுப்பி உள்ளனர்.

இதனை உண்மை என நம்பி கியூஆர் கோடை அழுத்தியவுடன் அவர்கள் வங்கிக்கணக்கில் உள்ள மொத்த பணமும் மர்ம நபர்களின் வங்கிக் கணக்கிற்கு மாற்றப்பட்டது. இதேபோல், கோவையில் 7 பேரிடம் ரூ.7 லட்சத்திற்கும் மேல் மோசடி நடைபெற்றுள்ளது. புகாரின்பேரில் மாநகர சைபர் க்ரைம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில், தமிழகம் முழுவதும் 500க்கும் மேற்பட்டோர் ஏமாற்றப்பட்டது தெரிய வந்தது. அவர்கள் பேசிய செல்போன் எண்ணை வைத்து ஆய்வு செய்தபோது நாமக்கல் மாவட்டத்தில் பதுங்கி இருப்பது தெரிய வந்தது. இதனையடுத்து, போலீசார் நேற்று முன்தினம் நாமக்கல் சவுரிபாளையத்தை சேர்ந்த டேவிட் (32), லாரன்ஸ் (28), ஜேம்ஸ் (30), எட்வின் சகாயராஜ் (31), மாணிக்கம் (34). ஆகிய 5 பேரை கைது செய்தனர்.

அவர்களிடமிருந்து 44 செல்போன்கள், ஏழு வங்கி புத்தகம், 22 சிம் கார்டுகள், 1 லேப்டாப் 1 செக் புத்தகம், 7 ஏடிஎம்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இவர்களது உறவினர் டெல்லியில் இருப்பதாகவும், அவரிடம் நூதன மோசடி பற்றி பயிற்சி பெற்றதாகவும் கூறியுள்ளனர். இது குறித்து கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் கூறுகையில், ஏழை மக்களை குறிவைத்து இந்த மோசடி நடைபெற்றுள்ளது. இதேபோல், லாட்டரி மோசடி, ரிவார்டு பெற்று தருவதாக மோசடி, செல்போன் டவர் அமைக்க பணம் தருவதாக மோசடி என பல்வேறு ரூபங்களில் மோசடி நடைபெற்று வருகிறது. எனவே, பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என தெரிவித்தார்.

Related posts

கிராமச்சாலைகள். தேசிய நெடுஞ்சாலைகள். சென்னை பெருநகரச்சாலைப்பணிகள். திட்டங்கள் அலகு ஆகியவற்றின் பணிகளை இரண்டாவது நாளாக அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு

அதிமுக முன்னாள் அமைச்சர் மீதான வழக்கை ரத்து செய்ய ஐகோர்ட் மறுப்பு..!!

மேட்டூர் அணை நீர்வரத்து 70,000 கன அடியாக சரிவு..!!