மாணவி கூட்டு பலாத்கார புகாரில் உண்மையில்லை: திண்டுக்கல் எஸ்பி பேட்டி

திண்டுக்கல்: தேனி மாவட்டத்தை சேர்ந்த மாணவி ஒருவர், தனியார் நர்சிங் கல்லூரியில் 2ம் ஆண்டு படித்து வருகிறார். இவர், திண்டுக்கல் ரயில்நிலைய பாதுகாப்பு பணி போலீசாரை நேற்று முன்தினம் காலை சந்தித்து, தன்னை தேனி பழைய பஸ் நிலையம் அருகே அடையாளம் தெரியாத மர்மநபர்கள் காரில் கடத்தி சென்று கூட்டு பலாத்காரம் செய்ததாகவும், பின்னர் திண்டுக்கல் ரயில் நிலையத்தில் இறக்கி விட்டு சென்றதாகவும் தெரிவித்திருந்தார்.

தகவலறிந்து வந்த திண்டுக்கல் மகளிர் போலீசார், மாணவியை மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு திண்டுக்கல் எஸ்பி பிரதீப் நேரில் வந்து விசாரித்தார். இதுபற்றி திண்டுக்கல் மகளிர் காவல் நிலையத்தில் 2 பிரிவுகளில் வழக்கு பதிந்தனர். பின்னர் வழக்கு தேனி டவுன் போலீசாருக்கு மாற்றப்பட்டது. இரண்டு மாவட்ட போலீசாரும் சிசிடிவி பதிவுகளை கைப்பற்றி ஆய்வு செய்ததில் மாணவி தனியாக நடந்து செல்லும் காட்சிகள் மட்டுமே கிடைத்தன.

யாரும் காரில் கடத்துவது போன்ற காட்சிகள் கிடைக்கவில்லை. இதனால், போலீசார் குழப்பமடைந்தனர். இதுகுறித்து திண்டுக்கல் மாவட்ட எஸ்பி பிரதீப் நேற்று செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘‘கூட்டு பலாத்கார புகார் கொடுத்த நர்சிங் மாணவியை விசாரணை செய்ததில் அவர் கூறியது போல எந்தவொரு கடத்தல் மற்றும் பலாத்கார சம்பவங்களும் நடைபெறவில்லை. அந்த மாணவி மன அழுத்தம் காரணமாக தவறான புகார் அளித்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது’’ என்றார்.

Related posts

மேட்டூர் அணைக்கு நீர் வரத்து சற்று அதிகரிப்பு

ஆந்திராவில் அனைத்து கோயில்களின் பிரசாதங்களையும் ஆய்வுசெய்ய ஒன்றிய அரசு முடிவு

உளுந்தூர்பேட்டை அருகே கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையோர மரத்தில் மோதியதில் 6 பேர் உயிரிழப்பு: திருச்செந்தூர் சென்று திரும்பிய நிலையில் சோகம்