பைக்கில் சென்று உரசி மாணவிகளிடம் சில்மிஷம்: வாலிபருக்கு தர்மஅடி

அருமனை: குமரி மாவட்டம் அருமனை சுற்றுவட்டார பகுதியில் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவிகளிடம் போதை வாலிபர்கள் சிலர் கிண்டல் செய்வதும், சில நேரங்களில் அத்துமீறுவதும் நடைபெறுகிறது. மேலும் இருசக்கர வாகனங்களில் சாகசம் செய்வது போல் மாணவிகளை உரசியபடி செல்வதிலும் பைக் வாலிபர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் அருமனை பகுதியில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகள் நேற்று மாலை வழக்கம்போல் பள்ளிமுடிந்து பனங்கரை சாலை வழியாக வீட்டுக்கு நடந்து சென்றுகொண்டிருந்தனர்.

அப்போது அந்த வழியாக குடிபோதையில் பைக்குகளில் சுற்றித்திரிந்த 5 வாலிபர்கள் மாணவிகளை கண்டதும் சில்மிஷம் செய்வதற்காக பைக் சாகசத்தில் ஈடுபட்டனர். ஒரு கட்டத்தில் மாணவிகளை வழிமறித்து அத்துமீற முயற்சித்தனர். இதனை அந்த வழியாக சென்ற பொதுமக்கள் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். அவர்களைப் பிடிக்க முயற்சித்தனர்.
இதையடுத்து 5 ரோமியோக்களும் பைக்கில் தப்பினர். ஆனால் பாவம், அதீத போதையில் இருந்த ஒரு வாலிபர் மட்டும் பொதுமக்களிடம் வசமாக சிக்கினார்.

பொதுமக்கள் அந்த வாலிபருக்கு தர்ம அடி கொடுத்தனர். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் பொதுமக்களின் பிடியில் இருந்த வாலிபரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரித்தனர். அதில், அவர் அருமனை தெற்றிவிளை பகுதியை சேர்ந்த பாபு என்பவரது மகன் ஷல் மோன் (21) என்பது தெரியவந்தது. அவரை கைது செய்த போலீசார் அவர் ஓட்டிவந்த டூவீலரையும் பறிமுதல் செய்தனர்.மேலும் தப்பியோடிய மற்ற வாலிபர்களைப் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சகோதரியாக நினைத்துதான்…
காவல் நிலையத்தில் போலீசாரிடம் ஷல் மோன் கூறுகையில், நான் எனது நண்பருடன் பைக்கில் சென்றபோது, மாணவிகளை கண்டதும் அவர்களை சகோதரி போல் நினைத்து பேச சென்றேன். அவர்கள் அனைவரும் என் சகோதரிகளே… என சினிமா வசனம் பேசி கதறி அழுதுள்ளார்.

Related posts

சென்னையில் ஜூலை 7இல் மகளிருக்கான கார் பேரணி..!!

ஜிம்பாப்வே டி20: இந்திய அணி வீரர்கள் மாற்றம்

தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இன்று முதல் 8ம் தேதி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்: வானிலை மையம்