உணவு சாப்பிட்ட மாணவி திடீரென சுருண்டு விழுந்து பலி: மார்த்தாண்டம் அருகே பரபரப்பு

மார்த்தாண்டம்: கன்னியாகுமரி மாவட்டம் முளங்குழி அடுத்த சென்னி தோட்டம் பகுதியை சேர்ந்தவர் சிவகுமார். எல்ஐசி ஏஜென்ட். திருமணமாகி மனைவி மற்றும் 2 பெண் குழந்தைகள் உள்ளனர். மூத்த மகள் நிவீதா (18) கோவையில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் பயோ மெடிக்கல் இன்ஜினியரிங் படித்து வந்தார். இந்நிலையில் நிவீதாவுக்கு அம்மை போட்டுள்ளது. அதனால் சொந்த ஊருக்கு வந்தார். அம்மைநோய் சரியான நிலையில் கல்லூரிக்கு செல்ல நிவீதா தயாரானார். நேற்றிரவு வழக்கம்போல் வீட்டில் குடும்பத்தாருடன் உணவு சாப்பிட்டு கொண்டிருந்தார். அப்போது திடீரென நிவீதாவுக்கு விக்கல் எடுத்தது. உடனே பெற்றோர் தண்ணீர் கொடுக்க முயன்றுள்ளனர்.

திடீரென கண்கள் சொறுகிய நிலையில் நீவிதா அப்படியே சாய்ந்து விட்டார். அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர், உடனடியாக நிவீதாவை குழித்துறை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பரிசோதனையில், நிவீதா ஏற்கனவே இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதைக்கேட்டு பெற்றோர் கதறி துடித்தனர். புகாரின்பேரில் மார்த்தாண்டம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நிவீதாவின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட உள்ளது. இதன் முடிவில்தான், தொண்டையில் உணவு சிக்கி உயிரிழந்தாரா? அல்லது உணவு ஒவ்வாமை மற்றும் வேறு எதுவும் காரணமா? என்பது குறித்து தெரியவரும். இச்சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

Related posts

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்!

மருதாநதி, குண்டேரிப்பள்ளம் நீர்த்தேக்கத்திலிருந்து தண்ணீர் திறந்துவிட தமிழக அரசு உத்தரவு

வங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் முடிவில் 339 ரன்களை குவித்தது இந்தியா