எண்ணூரில் உர தொழிற்சாலையை மூடக்கோரி 81 நாட்களாக நடைபெற்று வந்த போராட்டம் முடிவுக்கு வந்தது: தேர்தல் நடத்தை விதி அமல் எதிரொலி

திருவொற்றியூர்: எண்ணூரில் உள்ள தனியார் உரத் தொழிற்சாலையில் கடந்த டிசம்பர் மாதம் 26ம் தேதி அமோனியா வாயு கசிந்ததால் அப்பகுதியைச் சுற்றியுள்ள பொது மக்கள் மூச்சுத் திணறல், வாந்தி மயக்கம் உள்ளிட்ட உபாதைகளால் பாதிக்கப்பட்டனர். இதையடுத்து தொழிற்சாலையை நிரந்தரமாக மூட வேண்டும் என்று கோரிக்கை விடுத்து எண்ணூரைச் சுற்றியுள்ள 33 மீனவ கிராம மக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். அவர்களது போராட்டம் 81வது நாளாக நேற்று முன்தினம் வரை நீடித்தது.

இந்நிலையில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது. நேற்று தொழிற்சாலை முன்பு கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட வந்தனர். அப்போது அவர்களிடம் எண்ணூர் உதவி போலீஸ் கமிஷனர் வீரக்குமார் தலைமையிலான போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். நாடாளுமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால் முழு கட்டுப்பாடும் தேர்தல் ஆணையத்துக்கு மட்டுமே உள்ளது. எங்களது கட்டுப்பாட்டில் எதுவும் இல்லை. மேலும் பொது இடத்தில் 4 நபர்கள் மேல் கூடினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கும் சூழ்நிலை உள்ளது.

இதனால் போராட்டத்தை கைவிட்டு கலைந்து செல்லுங்கள் என்று போராட்டம் நடத்த வந்தவர்களிடம் போலீசார் கூறினர். இதனையடுத்து எண்ணூர் மக்கள் பாதுகாப்புக்குழு சார்பாக தொழிற்சாலை முன்பு நடைபெற்று வந்த போராட்டம் நேற்று முடிவுக்கு வந்தது. போராட்டம் முடிவுக்கு வந்ததைத் தொடர்ந்து அங்கு போடப்பட்டுள்ள பந்தல்களை அவர்களே அகற்றினர். ஆனாலும் தொழிற்சாலை நிரந்தரமாக மூடும் வரை வீட்டில் இருந்தபடியே எதிர்ப்பு தெரிவிக்கப்படும் என்றும், ஒவ்வொரு நாளும் வீடுகள் முன்பு கருப்புக்கொடி ஏற்றி, மூச்சுத் திணறல் போன்ற ஸ்டிக்கர்களை ஒட்டி தங்களது எதிர்ப்புகளை தெரிவிப்போம் என்றும் கிராம மக்கள் தெரிவித்தனர்.

Related posts

அரசின் தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் தாயார் மறைவு: முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

சொல்லிட்டாங்க…

சொந்த மாவட்டத்திலேயே தலைமறைவு வாழ்க்கை வாழும் மாஜி மந்திரியை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா