வலுக்கும் போராட்டம்

 

வே ளாண் விளை பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயம், விவசாயக் கடன் தள்ளுபடி, ஓய்வூதியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த மாதம் 13ம் தேதி முதல் விவசாயிகள் போராடி வருகிறார்கள். பஞ்சாப், அரியானா, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் கலந்து கொண்டுள்ளனர். குறைந்த பட்ச ஆதரவு விலை நிர்ணயம் கேட்டு விவசாயிகள் போராடுவது இந்தியாவில் மட்டும் தான். அனைவரின் வயிற்றுக்கு உணவு வழங்கும் விவசாயிகள் நடுரோட்டில் போராடுவது வெட்கக்கேடானது.

பணத்தை செலவு செய்தால் சாகுபடி செழிக்கும் என்பது அல்ல விவசாயம். விதைநெல், நடவு, களையெடுத்தல், பூச்சி தாக்காமல் பயிர் காப்பாற்றுதல், மழை வெள்ளத்தில் இருந்து தப்பித்து வந்தால் மட்டுமே விவசாயி செய்த முதலீட்டை கண்ணால் பார்க்க முடியும். புகையான் பூச்சி தாக்குதல், கடுமையான மழை, வெள்ளம் ஏற்பட்டால் விவசாயிகள் நிலைமை மோசமாகிவிடும்.

சாகுபடி செய்து கைக்கு காசு பார்க்கும் வரை விவசாயி, தனது வயிற்றில் நெருப்பை கட்டிக் கொண்டு வாழ்வான். அவனுக்கு இதைவிட்டால் வேறு வழியில்லை. உரம் மானியம், குறைந்த விலையில் விதை நெல் போன்று சலுகைகளை தாண்டி விவசாயிகள் கேட்பது, வயலில் இறங்கி கடுமையாக உழைக்கும் எங்களுக்கு குறைந்த பட்ச ஆதார விலை மட்டுமே. ஆனால் ஒன்றிய அரசிடம் எப்போதும் ஒன்வே. விவசாயிகளின் கோரிக்கைபடி நெல்மூட்டைகளை கொள்முதல் செய்தால் பல லட்சம் கோடி நஷ்டம் அரசுக்கு ஏற்படுமாம். இதனால் பல கட்ட பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை.

இதனால் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான விவசாயிகள் போராட்டத்தை கையில் எடுத்துள்ளனர். விவசாயிகள் டெல்லிக்குள் நுழைவதை தடுக்கும் விதமாக, எல்லை பகுதிகளில் சீல் வைத்து பல்வேறு தடைகளை போலீசார் ஏற்படுத்தி உள்ளனர். தடைகளை தகர்த்து டெல்லிக்குள் நுழைய முயன்ற விவசாயிகள் மீது போலீசார் டிரோன் மூலம் கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், தடியடி நடத்தியும், தண்ணீரை பீய்ச்சியடித்தும் விரட்டப்பட்டனர். விவசாயிகளின் போராட்டம் பற்றி ஒன்றிய அரசுக்கு கிஞ்சித்தும் கவலை இல்லை. டெல்லி நோக்கிய பேரணி முடிவை திரும்ப பெற போவதில்லை. எல்லையில் விவசாயிகளின் பலத்தை மேலும் அதிகரித்த பின்பு அடுத்த கட்ட நடவடிக்கை இருக்கும்.

மார்ச் 10ம் தேதி நாடு முழுவதும் மாபெரும் ரயில் மறியல் போராட்டம் நடைபெறும் என சம்யுக்தா கிஷான் மோர்ச்சா அமைப்பின் கீழ் வரும் அனைத்து விவசாய சங்கங்களும் நாடு முழுவதும் இந்த போராட்டத்தில் ஈடுபடுவார்கள் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி பஞ்சாப், ஹரியானா, டெல்லி மாநிலத்தில் விவசாயிகள் ரயில் தண்டவாளத்தில் படுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு உள்பட இந்தியா முழுவதும் பல்வேறு இடங்களில் விவசாயிகள் ரயில் மறியலில் ஈடுபட்டதால் கைது செய்யப்பட்டனர். அவர்களது போராட்டமும் வலுக்கிறது. நாடாளுமன்ற தேர்தலும் நெருங்குகிறது. கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என விவசாயிகள் உறுதியாக உள்ளனர். எனவே உழவனிடம் கணக்கு பார்க்காமல் ஒன்றிய அரசு, அவர்களது கோரிக்கைகளுக்கு செவி சாய்க்க வேண்டும். இல்லையென்றால் நிலைமை மோசமாகிவிடும் என்பதை வெகுவிரைவில் காலம் ஒன்றிய அரசுக்கு பாடம் சொல்லும்.

Related posts

இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

ரூ2000க்கு மேல் டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு 18% ஜிஎஸ்டி?.. நாளை நடக்கும் கூட்டத்தில் முடிவு

காஷ்மீரில் தேர்தல் விதிகள் மீறல்: 5 அரசு ஊழியர்கள் பணியிடை நீக்கம்