ராமேஸ்வரத்தில் பலத்த சூறைக்காற்று; கடலுக்கு செல்ல மீனவர்களுக்கு தடை: தனுஷ்கோடியில் கடல் சீற்றம்

ராமேஸ்வரம்: ராமேஸ்வரத்தில் பலத்த சூறைக்காற்று வீசியதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டது. தனுஷ்கோடியில் கடல் சீற்றத்துடன் காணப்பட்டது. ராமேஸ்வரம் தீவு பகுதியில் நேற்று காலை முதல் பலத்த காற்று வீசியது. பகல் 12 மணிக்கு மேல் காற்றின் வேகம் அதிகரித்த நிலையில் ராமேஸ்வரம் நகர் பகுதியில் சூறைக்காற்று வீசியது. சாலையோரத்தில் இருக்கும் மணலும், குப்பைகளும் சேர்ந்து புழுதிப்புயல் போல் வீசியது. இதனால் வாகன ஓட்டிகள், இருசக்கர வாகனத்தில் சென்றவர்கள் சிரமப்பட்டனர். சாலையோரம் வைக்கப்பட்டிருந்த விளம்பர பலகைகள், கடைகள் முன்பு போடப்பட்டிருந்த நிழல் பந்தல்கள் அடித்த காற்றுக்கு கீழே விழுந்து சேதமடைந்தன.

தனுஷ்கோடி அரிச்சல்முனை கடற்கரை பகுதியில் வீசிய பலத்த காற்றினால் சாலையில் மணல் சேரத் துவங்கியது. காற்றின் வேகத்தில் கடலும் பலத்த சீற்றத்துடன் காணப்பட்டது. பலத்த காற்றினால் பொதுமக்கள், சுற்றுலாப்பயணிகள் சாலையில் நடந்து செல்வதற்கே சிரமப்பட்டனர். பலத்த காற்றினால் மீனவர்கள் கடலுக்கு செல்ல மீன்வளத்துறை நிர்வாகம் தடை விதித்தது. கடலில் அதிகபட்சமாக மணிக்கு 65 கிமீ வேகத்தில் காற்று வீசக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்த நிலையில், ராமேஸ்வரம், பாம்பன், தனுஷ்கோடி மீனவர்கள் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை உதவி இயக்குநர் அறிவித்துள்ளார்.

Related posts

9 ஆயிரம் ஏக்கரில் உப்பு உற்பத்தி தீவிரம்

அதிகாரிகள் முறையாக கண்காணிப்பதில்லை 100 நாள் வேலை திட்டம் கொள்ளையடிக்கும் திட்டம்: நீதிபதிகள் காட்டம்

திருச்சியில் ரூ.315 கோடியில் டைடல் பூங்காவுக்கு டெண்டர்:18 மாதத்தில் கட்டி முடிக்க திட்டம், 5 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு