பலத்த காற்றுடன் பெய்த மழை ஊட்டி ஏரியில் விழுந்து கிடக்கும் மரங்களை அகற்ற கோரிக்கை

ஊட்டி : அண்மையில் பலத்த காற்றுடன் கூடிய மழை காரணமாக ஊட்டி ஏரியில் ஏராளமான கற்பூர மரங்கள் விழுந்துள்ளன. இவற்றை அகற்ற வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
மலைகளின் அரசி என்று அழைக்கப்படும் சுற்றுலா மாவட்டமான நீலகிரிக்கு ஆண்டு முழுவதும் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். குறிப்பாக, சீசன் சமயங்களில் கூட்டம் அலைமோதும். குளு குளு நகரமான ஊட்டி வர கூடிய சுற்றுலா பயணிகள் படகு இல்லத்தில் இருந்து ஊட்டி ஏரியில் படகு சவாரி செய்ய தவறுவதில்லை.

சுற்றுலா பயணிகள் படகு சவாரி செய்ய வசதியாக மோட்டார் படகுகள், துடுப்பு படகுகள், மிதி படகுகள் உள்ளன. இவற்றை பயன்படுத்தி உற்சாகமாக படகு சவாரி செய்து மகிழ்கின்றனர். ஏரி கரையோரம் அமர்ந்திருந்து ஓய்வு எடுக்கும் புள்ளி மூக்கு வாத்துகளையும் கண்டு ரசிக்கின்றனர். இதேபோல் ஏரியின் மறு கரையில் உள்ள தேனிலவு படகு இல்லத்தில் இருந்தும் படகு சவாரி செய்கின்றனர்.

இந்நிலையில், கடந்த இரு வாரங்களாக ஊட்டியில் பலத்த காற்றுடன் கூடிய தொடர் மழை காரணமாக ஏரி கரையோரம் இருந்த 5க்கும் மேற்பட்ட ராட்சத கற்பூர மரங்கள் ஏரியில் விழுந்துள்ளன. இவை மரங்கள் அகற்றப்படாமல் அப்படியே கிடக்கிறது.

இதன் காரணமாக, வெளி மாநிலம் மற்றும் வெளி மாவட்ட சுற்றுலா பயணிகள் சவாரி செய்யும்போது எதிர்பாராத விதமாக தண்ணீரில் மிதக்கும் மரக்கிளைகளில் படகு மோதி விபத்து ஏற்படும் நிலை உள்ளது. மேலும் படகுகளும் சேதமடையும் அபாயமும் உள்ளது. எனவே ஊட்டி ஏரியில் விழுந்து கிடக்கும் மரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

Related posts

சிதம்பரம் நடராஜர் கோவிலுக்குச் சொந்தமான 2,000 ஏக்கர் நிலத்தை தீட்சிதர்கள் விற்றுவிட்டதாக அறநிலையத் துறை குற்றச்சாட்டு!

பாறைக்கால் மடத்தில் பழைய பாலம் இடிப்பு: மழைவெள்ளம் குடியிருப்பு பகுதிகளில் புகாது

ஒன்றிய அரசு நிதி வழங்காததால் ‘நைந்து’ போன நெசவுப் பூங்கா திட்டம்