முன்னேற முயற்சி செய்… வெற்றி வசப்படும்!

ஒரு கிராமத்து மனிதர் தினந்தோறும் தன் ஊருக்குச் சற்றுத் தொலைவில் உள்ள காட்டிற்கு சென்று அங்கே சிதறிக் கிடக்கும் மரக்கிளைகளையும், குச்சிகளையும் சேகரித்துச் செல்வார். தான் சேகரித்துச் சென்றதை விற்று அதில் வரும் பணத்தில் தனது குடும்பத்துக்குத் தேவையானவற்றை அவர் வாங்கிச் செல்வார். இந்தக் கிராமவாசி ஒவ்வொரு நாளும் காலையில் காட்டுக்குள் வருவதையும், விறகுகளைச் சேகரித்துச் செல்வதையும் பல காலமாக கவனித்துவந்தார் ஒரு முனிவர். அந்த முனிவர் காட்டில் ஒரு குடிசையில் வாழ்ந்துவந்தார். அவ்வப்போது ஊருக்குள் சென்று மக்களைச் சந்திப்பார். பின்பு மீண்டும் தனது குடிசைக்கு வந்து தியானம் செய்வார். ஒருநாள் நண்பகல் வேளையில் விறகுக்கட்டைகளைச் சுமந்துகொண்டு, வியர்வை சிந்த அந்தக் கிராமத்து மனிதர் நடந்து வருவதை கவனித்தார் அந்த முனிவர்.

பல ஆண்டுகளாக இந்த மனிதன் இப்படிக் கஷ்டப்படுகிறான் என்று எண்ணிய முனிவர் அந்த மனிதனை அழைத்தார். அந்த ஏழை மனிதர் வேகமாக வந்து முனிவரை வணங்கினார். அப்போது முனிவர் அந்த மனிதரிடம் ‘‘நீ தினமும் இந்த இடத்தில்தான் காய்ந்த விறகுகளைச் சேகரிக்கின்றாய். இந்த இடத்தை விட்டு நீ சற்று அதிக தூரம் சென்று நான் பார்த்ததில்லையே?’’ என்று கேட்டார்.

அந்தக் கிராமத்துவாசி ‘‘ஆமாம், சாமி இந்த இடம் என் ஊருக்கு அருகில் உள்ளது.மேலும் இங்கு கிடைக்கும் விறகுகள் என் குடும்பத்துக்குத் தேவையான பணத்துக்குப் போதுமானதாக உள்ளது. ஆனாலும் சில காலங்கள் ஒன்றுமே கிடைக்காமலும் போகின்றது’’ என்று கூறினார். முனிவர் அந்த மனிதரைப் பார்த்து நீ நாளை முதல் இங்கு வருகின்ற போது இன்னும் கொஞ்சம் தூரம் முன்னேறிச் சென்று விறகுகளைத் தேடு,உனக்கு நல்லது நடக்கும் என்று கூறிவிட்டுச் சென்றுவிட்டார்.

அடுத்த நாள் காட்டுக்குள் சென்ற அந்த மனிதரின் காதுகளில் முனிவர் கூறிய ‘‘இன்னும் கொஞ்ச தூரம் முன்னேறி செல், உனக்கு நல்லது நடக்கும்” என்ற வார்த்தைகள் ஒலித்துக் கொண்டிருந்தது. அந்தக் கிராமத்து மனிதர் கொஞ்ச தூரம் முன்னேறிச் சென்றபோது ஏராளமான, மிகவும் தரமான விறகுகள் இருப்பதைக் கண்டார். முன்னர் எடுத்துச்சென்ற விறகுகளைவிட இவை பல மடங்கு பணத்தைத் தந்தன. எனவே, சில காலம்் ஓய்வெடுக்கவும் அந்த மனிதருக்கு நேரம் கிடைத்தது. தன் குடும்பத்துடன் மகிழ்வோடு இருக்கவும் அவகாசம் கிடைத்தது.

தன் வாழ்க்கையில் மாற்றம் ஏற்பட்டதை உணர்ந்து கொண்ட அந்த மனிதர், காட்டுக்குத் தொடர்ந்து சென்றபோது மேலும் மேலும் கொஞ்ச தூரம் முன்னேறிச் செல்ல ஆரம்பித்தார். அப்போது சந்தன மரக்காடுகளைக் கண்டார். ஒரு சந்தனக்கட்டையே குடும்பத்தின் பல நாட்கள் தேவையைப் பூர்த்தி செய்தது. எனவே, நற்காரியங்கள் செய்வதில் ஈடுபட்டார். வாழ்க்கை அவருக்கு மேலும் அர்த்தமுள்ளதாக அமைந்தது. அவரது ‘‘இன்னும் கொஞ்சம் தூரம் முன்னேறி செல்லுதல்” என்ற பயணம் தொடர்ந்தது. ஒவ்வொரு முன்னேற்றத்திலும் வாழ்க்கை முன்பை விட ருசித்தது. உண்மையைச் சொல்ல வேண்டுமானால் இப்போதுதான், தான் வாழ்வதற்காக அவர் உணரத் தொடங்கினார். ‘முன்னேறிச் செல்லுதல்’ என்பது தன் வாழ்க்கையை வாழ்வதின் அடையாளம்.

ஆனால் இந்த வாழ்க்கை எதற்காக என்று நீங்கள் நினைத்துப் பார்த்ததுண்டா? அப்படி வாழ வேண்டும்,இப்படி வாழ வேண்டும் என்ற கனவு பலருக்கும் உண்டு.ஆனால் அந்தக் கனவை எட்டிப் பிடிக்கும் தகுதி சிலருக்குத் தான் அமைகிறது. அந்தச் சிலரில் நீங்கள் ஒருவரா? உங்களைப் பற்றி எப்போதாவது எடை போட்டு பார்த்திருக்கிறீர்களா? உங்கள் பலம் பலவீனம் எது என்று புரிந்து வைத்திருக்கிறீர்களா? அது தெரியாத நிலையில் நீங்கள் உங்கள் கனவை எவ்வாறு நனவாக்க முடியும்? தன்னைப்பற்றிச் சிந்திக்காதவர்களின் கனவுகள் கானகத்தில் காயும் நிலவொளிபோல் பயனற்றுப் போகிறது.

தன்னைப்பற்றிச் சரியாக எடைபோடத் தெரிந்தவர்கள் தங்கள் கனவை தேடிக் கண்டடைகிறார்கள். எடை போடத் தெரியாதவர்கள் தான் தங்கள் கனவிலேயே தொலைந்துபோகிறார்கள். தங்களிடம் திறமை இருந்தும் முயற்சி செய்யாமலே பலர் அல்லும் பகலும் தெருக்கல்லாய் இருந்துவிட்டு, அதிர்ஷ்டம் இல்லை என்று அலட்டிக் கொள்கிறார்கள். நம்பிக்கை தான் சாதனைக்கு அடிப்படை என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். இதற்கு உதாரணமாக இந்தச் சாதனை மனிதரைச் சொல்லலாம்.

மனம் தளராத தொடர் முயற்சிக்கு வெற்றி வந்தே தீரும் என்பதற்கு இன்போசிஸ் நிறுவனர் நாராயணமூர்த்தி ஓர் உதாரணம். இன்போசிஸ் நிறுவனம் 1981ஆம் ஆண்டு ஆறு நபர்களுடன் ரூபாய் 10 ஆயிரம் முதலீட்டில் ஆரம்பிக்கப்பட்டது. அந்தத் தொகையை நாராயணமூர்த்தி தனது மனைவியிடம் கடனாகப் பெற்று நிறுவனத்தை ஆரம்பித்தார். 40 ஆண்டுகளுக்கு மேல் கடந்துவிட்டன. அந்த நிறுவனத்தில் இப்போது 50க்கும் மேற்பட்ட நாடுகளைச்் சேர்ந்த மூன்று லட்சத்திற்கும் மேலான ஊழியர்கள் பணிபுரிகிறார்கள். பல மில்லியன் அமெரிக்க டாலர்கள் வருமானம்.

சாதாரண ஏழை ஆசிரியர் மகனாகப் பிறந்து, பணத்திற்குச் சிரமப்பட்டாலும் விடாமுயற்சியுடன் படித்து, சில நிறுவனங்களில் வேலையில் இருந்து பலவிதமான அனுபவங்களைப் பெற்ற பின், அதை விட்டு வெளியே வந்து நண்பர்களுடன் சேர்ந்து தொழில் தொடங்கி அதில் வெற்றி பெற்று மிகப் பெரிய நிறுவனத்தை உருவாக்கியவர் நாராயண மூர்த்தி.

அது மட்டுமல்ல தனது நிறுவனத்தை 40 ஆண்டுகளுக்கு மேல் நேர்மையாக நடத்தி மிகச்சிறந்த நிறுவனமாக உருவாக்கியதில் அவருடைய தலைமைப் பண்புதான் பெரிதாகப் பார்க்கப்படுகின்றது. அதனால்தான் உலகில் சிறப்பாக நடத்தப்படும் நிறுவனங்களில் முதல் 25 நிறுவனங்களில் இன்போசிஸ் ஒன்றாகத் தேர்வு செய்யப்பட்டது.

2014 இல் CNBC இன் 25 உலகளாவிய வணிகத் தலைவர்களில் 13வது இடத்தைப் பிடித்தார். 2012 இல் பார்ச்சூன் இதழின் ‘நமது காலத்தின் 12 சிறந்த தொழில் முனைவோர்’ பட்டியலில் பட்டியலிடப்பட்டார் . அவர் பிரான்சில் இருந்து Legion d’honneur, பிரிட்டனில் இருந்து CBE, இந்தியாவில் இருந்து பத்ம விபூஷன் ஆகிய விருதுகளைப் பெற்றுள்ளார். 2005 ஆம் ஆண்டில் தி எகானமிஸ்ட் அவரை மிகவும் போற்றப்படும் 10 உலகளாவிய வணிகத் தலைவர்களில் ஒருவராகத் தரவரிசைப்படுத்தியது.

மார்ச் 2015இல் வெளியிடப்பட்ட ‘‘தொழில்நுட்பத்தில் வணிக முன்னோடிகளின்” முதல் 10 ஃபைனான்சியல் டைம்ஸ் பட்டியலில் நாராயணமூர்த்தி இடம்பெற்றார். இப்படி அவரின் சாதனைகள் நீண்டு கொண்டேபோகும். இன்றளவும் மென்பொருள் தொழில்துறையில் தவிர்க்க முடியாதவராக உள்ளார் நாராயணமூர்த்தி. இவ்வளவு பெரிய நிலையினை அடைந்த பிறகும் கூட இன்னும் மிக எளிமையான மனிதராக வாழ்கிறார் இன்போசிஸ் நாராயண மூர்த்தி.
முன்னேறி செல்வதே வெற்றியை வசப்படுத்தும் என்பதைப் புரிந்து கொண்டு அவருடைய சக்தி முழுவதையும் நிறுவனத்தின் வளர்ச்சிக்காகவே தொடர்ந்து முன்னேறி முயற்சித்து செலவிட்டதால்தான் இன்போசிஸ் நாராயணமூர்த்திக்கு வெற்றி சாத்தியமானது.

Related posts

சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் வெடிவிபத்து..!!

லெபனானில் பேஜர்கள் தொடர்ந்து வாக்கி டாக்கிகள் வெடிப்பு : போர் நடவடிக்கைகளின் தொடக்கப்புள்ளி என ஐ.நா. எச்சரிக்கை

தமிழ்நாட்டில் பொன்னை அணையில் 10 செ.மீ மழை பதிவு: திடீரென்று மாறியது பருவநிலை