Sunday, June 30, 2024
Home » மன அழுத்தம் முதல் ஆட்டிசம் வரை… தீர்வு… PrTMS சிகிச்சை!

மன அழுத்தம் முதல் ஆட்டிசம் வரை… தீர்வு… PrTMS சிகிச்சை!

by Nithya

நன்றி குங்குமம் டாக்டர்

நம் உடலின் அத்தனை இயக்கங்களுக்கும் மூளைதான் மூலகாரணி. மூளை செயல்பாட்டில் சிறிது மாறுதல் உண்டானாலும் நம் உடலின் மற்ற பாகங்களின் செயல்பாடுகளில் நிச்சயம் குறைபாடுகளோ, குழப்பங்களோ உண்டாகும். பசி முதல் பயம் வரை என அனைத்துக்கும் மூளைதான் அடிப்படை என்பதாலேயே எப்படிப்பட்ட விபத்துகள் நடந்தாலும் முதலில் தலையில் ஏதேனும் அடிப்பட்டுள்ளதா என மருத்துவர்கள் ஆராய்வார்கள்.

எத்தனையோ சிகிச்சைகள் மூளை நரம்பியல் மருத்துவத்தில் இருப்பினும் இன்னும் மருத்துவர்களுக்கே புலப்படாத உறுப்பு மூளைதான். ஆட்டிசம், மனச்சோர்வு, மனப்பிறழ்வு, மன அழுத்தம், கண் குறைபாடுகள், நரம்பு சார் பிரச்னைகள் என இவைகளுக்கெல்லாம் முழுமையான சிகிச்சை முறைகள் இல்லாமல் இருந்தன. ஆனால், மருத்துவ வளர்ச்சி அதற்கும் தற்போது வழி வகுத்துவிட்டது. அந்தச் சிகிச்சை முறைதான் பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட டிரான்ஸ்கிரானியல் காந்தத் தூண்டுதல் PrTMS (Personalized repetitive Transcranial Magnetic Stimulation). PrTMS சிகிச்சை குறித்து முழுமையான தகவல்கள் கொடுக்கிறார் மனநல மருத்துவர் கீர்த்தி சுந்தர்.

PrTMS என்றால் என்ன?

‘முதலில் PrTMS குறித்து தெரிந்துகொள்ளும் முன் நம் மூளை செயல்பாடு குறித்து தெரிந்துகொள்ள வேண்டும். பொதுவாகவே, மூளையின் செயல்பாடுகளை ஒலி அலைகளைக் கணக்கிடும் ஹெர்ட்ஸ் (Hertz(Hz) அலகைக் கொண்டுதான் அளவிடுவோம். அதாவது மூளைக்குள் ஒலியை அனுப்பி அதன் அதிர்வெண்களைப் பொருத்து டெல்டா (0-3Hz) , தீடா (4 -7 Hz), ஆல்பா (8-12Hz), பீட்டா(13-30Hz), காமா(31-100Hz), என அதிர்வெண் அலைகளால் அளவிடுவோம். உதாரணத்திற்கு டெல்டா அளவில் மூளை செயல்பட்டால் நீங்கள் தூக்கநிலைக்குச் சென்றுவிடுவீர்கள். இப்படி ஒவ்வொரு அளவீடுக்கும் ஒவ்வொரு செயல்பாடு உங்கள் உடலில் உண்டாகும்.

PrTMS… தலையில் பொருத்தப்படும் சின்ன சப்போர்டுடன் இணைந்த இயந்திரம். அதனுடன் ஒரு சிகிச்சைக் காயில், தலைக்கான சப்போர்ட் சிஸ்டம், சிகிச்சைக்கான நாற்காலி, மூளையின் செயல்பாட்டைக் காட்டும் திரை(Display), மொபைல் கன்சோல். இவைகள் அடங்கியதுதான் PrTMS இயந்திரம். தலையில் பொருத்தப்படும் சப்போர்ட் மற்றும் காயில்கள் மூலம் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் காந்த அலைகளை மண்டைஓட்டினுள் அனுப்பப்பட்டு மூளைக்குள் செலுத்தி அதன் மூலம் எலெக்ட்ரோ காந்த அலைகளாக மாற்றி அதன் மூலம் மூளையின் செயல்பாடுகள் கண்டறியப்பட்டு, மூளையின் செயல்திறன்கள் மற்றும் அதில் குறைபாடுகள் இருப்பின் சரி செய்யும் சிகிச்சை முறைதான் PrTMS சிகிச்சை.

இந்த சிகிச்சை மூலம் எந்தெந்த மூளை சார்ந்த குறைபாடுகளை சரி செய்யலாம்?

அமெரிக்க FDA 2008ம் ஆண்டு இந்த சிகிச்சையை அங்கீகரித்து மருத்துவ உலகிற்குள் கொண்டு வந்தது. இந்த PrTMS முறையை இரண்டு விதமாகப் பயன்படுத்தலாம். ஒன்று நோய்க்கு மருத்துவமாகவும், மற்றொன்று தெரபியாகவும் பயன்படுத்தலாம். ஆட்டிஸம், மனச்சிதைவு எனப்படும் ஸ்கீஸோஃபிர்னியா, மன அழுத்தம், மனப் போராட்டம், OCD (obsessive-compulsive disorder), குடி, போதை, உள்ளிட்ட பழக்கங்கள், குழந்தைகளில் காணப்படும் கவனக் குறைபாடுகள் மற்றும் செயல்திறன்களின் கட்டுப்பாடுகளின்மையாகக் காணப்படும் ADHD, ஸ்டிரோக், உள்ளிட்ட நரம்பு சார் பிரச்னைகள் அனைத்திற்கும் இந்தச் சிகிச்சை மூலம் தீர்வு கிடைக்கும். சிகிச்சைப் பலனாக சிலர் கண்பார்வை தெளிவுபெற்றதாகக்கூட பதிவு செய்துள்ளனர்.

குடி, போதைப் பழக்கத்தைக் கூட PrTMS மூலம் சரி செய்ய இயலுமா?

முடியும். ஒரு குறிப்பிட்ட விஷயத்தின் மீது ஆர்வம் தூண்டப்படுவதும், அதற்கு அடிமையாவது, அது குறித்த எண்ணங்களை உண்டாக்குவதும் கூட மூளையின் வேலைதான். PrTMS முறையில் குடிப்பழக்கம் மீதான ஆர்வம் உண்டாகாத வகையில் அவர்களின் மூளையின் செயலை மாற்ற முடியும். ஆனால் அதற்காக இது ஒரு மனிதனை முழுமையாக கட்டுப்படுத்தி AI போல் செயல்படுமா என்றால் அதெல்லாம் இல்லை. கிட்டத்தட்ட யோகா, மூச்சுப் பயிற்சி, மன அமைதிக்கான தியானப் பயிற்சிகள் போல் இதுவும் நவீன முறையிலான சிகிச்சை அல்லது தெரபி. சிலருக்கு ஒற்றைத்தலைவலி பிரச்னைகள் கூட இருக்கும். அதற்கும் இதில் தீர்வு கிடைக்கும்.

இந்த சிகிச்சைக்கு எவ்வளவு காலம் தேவைப்படும்?

உங்கள் மூளையை ஒரு ஆர்கெஸ்ட்ரா இசைக்குழு போல நினைத்துக்கொள்ளுங்கள். ஒரே சமயத்தில் அத்தனை இசைக்கருவிகளும் ஒன்றிணைந்து ஒலி எழுப்பும் போது அழகிய இசை நம் காதுகளுக்குக் கிடைக்கும். அதில் ஏதேனும் ஒரு வாத்தியம் தவறு செய்தாலும் கூட மொத்த இசைக்கச்சேரியும் குளறுபடியாகும். அதே போலத்தான் மூளையின் அத்தனை நரம்பு அமைப்புகளும் ஒன்றிணைந்து செயல்படும்போது தினந்தோறுமான செயல்பாடுகள் அத்தனையும் நம் உடலில் தடையின்றி நிகழும்.

அதில் ஏதேனும் ஒரு பகுதி மூளையில் பிரச்னை செய்தாலும் மொத்த உடல் இயக்கத்திலும் மாறுதல்கள் உண்டாகும். அதைத்தான் சரி செய்கிறது PrTMS சிகிச்சை. ஒவ்வொருவர் பிரச்னைக்கு ஏற்ப கால அளவுகள் மாறுபடும். ஒரு சிறிய மாற்றம் வேண்டும், தினம் தினம் வேலை, அவசர வாழ்க்கை என ஓடிக்கொண்டிருக்கிறேன், என் மூளைக்கு சிறிது ஓய்வும், கிட்டத்தட்ட மூளை மசாஜ் தேவை எனில் ஒரு முறை இந்தத் தெரபி எடுத்துக்கொள்ளலாம். மற்ற மூளை சார்ந்த தீவிரப் பிரச்னைகளுக்கு 4 முதல் 7 வாரங்கள் வரை இந்தச் சிகிச்சை தேவைப்படும்.

இந்த PrTMS சிகிச்சைக்கு வயது வரம்புகள் உண்டா?

நாங்கள் 90 வயதில் இருக்கும் நபர்களுக்குக் கூட சிகிச்சை அளிக்கிறோம். எனவே எவ்வித வயது வரம்புகளும் இந்த சிகிச்சைக்குக் கிடையாது. சுமார் 60% முதல் 80% வரையிலும் ஆட்டிசம் மற்றும் போதைப் பழக்கப் பிரச்னைகளால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த சிகிச்சையால் உலகம் முழுக்க பலனடைந்துள்ளனர். பொதுவாக குழந்தைகளில் மூளை சார்ந்த பிரச்னைகள் இருப்பது அவர்களின் இரண்டு வயது வரை சரிவரத் தெரியாது.

அதனால் அதன்பின்னர்தான் நமக்குக் கொஞ்சம் கொஞ்சமாக புலப்படும். அவ்வேளையில் ஆரம்பநிலையிலேயே இதனைக் குணப்படுத்தலாம். அதே போல் வலிப்புப் பிரச்னைகள் உள்ளோர் மற்றும் தலையில் விபத்துக் காரணமாக பிளேட் வைத்தவர்கள், இந்தச் சிகிச்சை எடுத்துக்கொள்ள முடியாது. காரணம் காந்த அலைகள் உலோகத்துடன் எதிர்வினை புரியும் என்பதால் அவர்கள் இந்தத் தெரபியோ, சிகிச்சையோ எடுத்துக்கொள்ள முடியாது.

இதற்கு ஆகும் செலவு மற்ற மூளை சார்ந்த சிகிச்சைகளைக் காட்டிலும் அதிகம் தான்.ஆனாலும் ஒருமுறை செலவு என்றாலும் வாழ்நாள் முழுமைக்கும் தீர்வாக அமையும். ஒரு லட்சத்தில் துவங்கி சிகிச்சைகள் உள்ளன. நம் இந்தியா, சென்னையிலேயே தற்போது இந்த சிகிச்சைகள் நவீன முறையில் உள்ளன.

தொகுப்பு: ஷாலினி நியூட்டன்

You may also like

Leave a Comment

1 + 10 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi