வலிமையான இந்தியா

உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடுகளில் ஒன்றான இந்தியாவில் ஆளப்போவது யார்? என்று தீர்மானிப்பது மக்களே. நாட்டின் தலைவரை தேர்ந்தெடுக்கும் பொறுப்பும், கடமையும், உரிமையும் இங்கு மக்களுக்கு மட்டுமே உண்டு. தேர்தல் நமக்கு புதிதல்ல. பண்டைய தமிழகத்தில் கிராமங்களை ஆளும் முக்கிய பதவிகளுக்கு தேர்தல் முறையிலேயே நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அதற்கு கல்வெட்டு ஆதாரங்கள் உள்ளன. ‘தேர்தல்’ என்ற நடைமுறையை உலகம் அறிந்திராத காலக்கட்டத்தில், அதாவது, சுமார் 1,100 ஆண்டுகளுக்கு முன்பு ‘குடவோலை’ முறை மூலம் மக்கள் பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்கும் முறை நம் மண்ணில் அமலில் இருந்தது. அதற்கான சாட்சியாக நிற்கிறது, காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் வைகுண்ட பெருமாள் கோயிலில் உள்ள கல்வெட்டு.

அமெரிக்கா சுதந்திரம் பெற்ற பிறகு, அனைவருக்கும் வாக்குரிமை கிடைப்பதற்கு 150 ஆண்டுகள் ஆகின. ஆனால், சுதந்திர இந்தியாவில் 1951ம் ஆண்டில் நடத்தப்பட்ட முதல் தேர்தலிலேயே அது சாத்தியமாகிவிட்டது. அதேபோல், அமெரிக்கா, பிரிட்டன், சுவிட்சர்லாந்து உள்ளிட்ட நாடுகளில் பெண்களுக்கு வாக்குரிமை மிக தாமதமாகவே வழங்கப்பட்டன. ஆனால், இந்தியா குடியரசாக உருவானபோதே, பெண்களும் வாக்குரிமை பெற்றனர். தற்போது, இந்தியாவின் 18வது நாடாளுமன்ற தேர்தல் திருவிழா நாடு முழுவதும் களைகட்டி உள்ளது. முதல்கட்டமாக, தமிழ்நாடு, புதுவையில் 40 தொகுதிகள் உள்பட மொத்தம் 102 இடங்களுக்கு நேற்று வாக்குப்பதிவு நிறைவுபெற்றது.

வருகிற ஜூன் 1ம் தேதி வரை இன்னும் 6 கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதல்கட்ட வாக்குப்பதிவில், தமிழ்நாட்டு மக்கள், நேற்று காலையில் இருந்தே விறுவிறுப்புடன் வாக்களித்தனர். ஆண்களும், பெண்களும் உற்சாகமாக வந்து தங்கள் வாக்குகளை பதிவு செய்தனர். இளம் வாக்காளர்களோடு இணையாக வயதான வாக்காளர்களும் தங்கள் ஜனநாயக கடமையை ஆற்றினர். தமிழ்நாட்டில் எந்த பகுதியிலும் சட்டம்-ஒழுங்கு பிரச்னை எழாமல், மிக அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. வாக்குப்பதிவு முடிவில் தமிழ்நாட்டில் 72.09 சதவீதம் வாக்குகள் பதிவானது. அதிகபட்சமாக கள்ளக்குறிச்சியில் 75.67 சதவீதமும், குறைந்த பட்சமாக மத்திய சென்னையில் 67.35 சதவீதமும் வாக்குகள் பதிவாகியுள்ளன.

கடந்த 2014ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் 73.74 சதவீதம் வாக்குகள் பதிவானது. 2019ம் ஆண்டு 72.44 சதவீதம் வாக்குகள் பதிவாகி இருந்தது. வாக்களிக்கும் உரிமை பெற்ற 18 வயதான அனைவரையும் தேர்தலில் பங்கேற்க செய்து 100 சதவீத வாக்குப்பதிவை எட்டிவிட வேண்டும் என இந்திய தேர்தல் ஆணையம் தீவிர முயற்சி மேற்கொண்டது. ஆனால் அந்த இலக்கு எட்டப்படவில்லை. அதற்கான காரணங்களை ஆராய்ந்து அந்த இலக்கை எட்டுவதை நோக்கிய பயணம் இன்னும் தொடரட்டும். அந்த இலக்கு எட்டப்பட்டால், இந்தியா இன்னும் வலிமையான நாடாக மாறும்.

Related posts

2வது மனைவியை ஆள் வைத்து கடத்திய பாஜ வர்த்தகர் அணி தலைவர் உட்பட 9 பேர் மீது வழக்கு: பெண் நிர்வாகியுடன் தொடர்பில் இருப்பது அம்பலம்

தாய்லாந்துக்கு தப்பிச்செல்ல முயன்ற கேரள தலைமறைவு குற்றவாளி கைது

புளியந்தோப்பு சரகத்தில் ஒரேநாளில் 13 ரவுடிகள் கைது