புயல் எச்சரிக்கை, பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா ஆலோசனை..!!

டெல்லி: புயல் எச்சரிக்கை குறித்தும், பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா தலைமையில் ஆலோசனை நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டில் சென்னை உட்பட 14 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சி, திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், பெரம்பலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், தஞ்சை, அரியலூர், குமரி மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, 5ம் தேதி, தெற்கு ஆந்திராவின் நெல்லூர் – மசூலிபட்டினம் இடையே புயல் கரையை கடக்கும் என்று வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்நிலையில், புயல் எச்சரிக்கை குறித்தும், பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா தலைமையில் ஆலோசனை நடைபெற்று வருகிறது. கடலோர மாவட்டங்களைச் சேர்ந்த 14 மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா டெல்லியில் இருந்து காணொலி வாயிலாக ஆலோசனை நடத்தி வருகிறார்.

தலைமை செயலகத்தில் நடைபெறும் ஆலோசனையில் டிஜிபி சங்கர் ஜிவால், சென்னை மாநகர ஆணையர், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண் அதிகாரிகள், மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர்கள் பங்கேற்றுள்ளனர். மெட்ரோ வாட்டர், மின்சாரம், மீன்வளம், காவல்துறை மற்றும் தீயணைப்பு துறை உள்ளிட்ட துறை செயலாளர்களும் பங்கேற்றுள்ளனர். மேலும் வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரனும் ஆலோசனையில் பங்கெடுத்துள்ளார். பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை, பொதுமக்களுக்கு முன்னெச்சரிக்கை தகவல்கள் வழங்குவது உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்படுகிறது.

அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து செயல்படுவது உள்ளிட்ட அம்சங்கள் தொடர்பாகவும் ஆலோசனை நடைபெற்று வருகிறது. மேலும் புயல் அதிகளவில் பாதிக்கக்கூடிய பகுதிகள் எவை? அங்குள்ள மக்களை பாதுகாப்பாக நிவாரண முகாம்களுக்கு அழைத்து வருவது, நிவாரண முகாம்களில் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்வது உள்ளிட்டவை குறித்தும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இந்த கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டு அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவுள்ளது.

Related posts

சிதம்பரம் நடராஜர் கோவிலுக்குச் சொந்தமான 2,000 ஏக்கர் நிலத்தை தீட்சிதர்கள் விற்றுவிட்டதாக அறநிலையத் துறை குற்றச்சாட்டு!

பாறைக்கால் மடத்தில் பழைய பாலம் இடிப்பு: மழைவெள்ளம் குடியிருப்பு பகுதிகளில் புகாது

ஒன்றிய அரசு நிதி வழங்காததால் ‘நைந்து’ போன நெசவுப் பூங்கா திட்டம்