புளியந்தோப்பு பகுதியில் மழைநீர் அகற்றும் பணி ஆணையர் நேரில் ஆய்வு: அதிகாரிகளுக்கு ஆலோசனை

பெரம்பூர்: புளியந்தோப்பு பகுதியில் தேங்கிய மழைநீரை அகற்றும் பணிகளை, மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் நேரில் ஆய்வு மேற்கொண்டார். தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைய தொடங்கியுள்ள நிலையில், மாநிலம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் கடந்த ஒரு வாரமாக விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது. இந்நிலையில், புளியந்தோப்பு பட்டாளத்தில் நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் கொட்டித் தீர்த்த மழையால் தாழ்வான பகுதிகளில் அதிக அளவில் தண்ணீர் தேங்கியது.

இதன் காரணமாக பட்டாளம் அங்களாம்மன் கோயில் தெருவில் உள்ள பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோயிலுக்குள் மழைநீர் தேங்கியதால், கோயிலுக்கு வரும் பக்தர்கள் பாதிக்கப்பட்டனர். இந்நிலையில் சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் பட்டாளம் பகுதியில் நேற்று காலை ஆய்வு மேற்கொண்டார். அப்போது மின் மோட்டார் மூலம் மழைநீர் அகற்றப்படுவதை பார்வையிட்டு அதிகாரிகளுக்கு ஆலோசனைகளை வழங்கினார்.

மேலும் ஓட்டேரி ஸ்டீபன்சன் சாலையில் உள்ள பம்பிங் அறை, டிம்லர்ஸ் ரோடு உள்ளிட்ட இடங்களில் உள்ள மின் மோட்டார்கள் இயங்கும் இடங்கள் மற்றும் பம்பிங் ஸ்டேஷன் உள்ளிட்ட இடங்களை ஆய்வு செய்தார். அதிக மழை பெய்தால் குறிப்பிட்ட இடங்களில் மேற்கொள்ளக்கூடிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும், மின் மோட்டார்களின் இயக்கம் குறித்தும் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். ஆய்வின்போது மத்திய வட்டார அலுவலர் பிரதீப் குமார், திருவிக நகர் மண்டல அதிகாரி முருகன், செயற்பொறியாளர் சரவணன் மற்றும் மாநகராட்சி ஊழியர்கள் உடனிருந்தனர்.

Related posts

மாநில கல்லூரியில் ரூ.21 கோடி மதிப்பீட்டில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு லிப்ட் வசதியுடன் பிரத்யேக விடுதி: விரைவில் பயன்பாட்டிற்கு வருகிறது

சென்னையில் வடகிழக்கு பருவ மழையின்போது மீட்பு பணிகளில் ஈடுபட 10,000 பேருக்கு பயிற்சி: பேரிடர் மேலாண்மை துறை திட்டம்

தூய்மை பணியாளர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம்: இ.கருணாநிதி எம்எல்ஏ தொடங்கி வைத்தார்