இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுவதை தடுக்க வேண்டும்: ஒன்றிய அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

சென்னை: இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுவதை தடுக்க வேண்டும் என்று ஒன்றிய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று கடிதம் எழுதியுள்ளார். ஒன்றிய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: விசைப்படகில் மீன்பிடிக்க சென்ற தமிழ்நாட்டை சேர்ந்த 10 மீனவர்கள் நேற்று இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் வேதனை அளிப்பதாக உள்ளது.

2024ம் ஆண்டில் மட்டும் இலங்கை கடற்படையினரால் இதுவரை 203 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 27 படகுகள் சிறைபிடிக்கப்பட்டுள்ளது. இலங்கை கடற்படையினரால் இந்திய மீனவர்கள் இதுபோன்று அடிக்கடி கைது செய்யப்படுவது, தமிழ்நாட்டின் மீனவ சமுதாயத்தினரிடையே ஒரு பாதுகாப்பற்ற சூழ்நிலையை ஏற்படுத்தியுள்ளது.

எனவே, இந்த விஷயத்தில் ஒன்றிய வெளியுறவு துறை அமைச்சர் உடனடியாக தலையிட்டு, தமிழ்நாட்டை சேர்ந்த மீனவர்கள் தொடர்ந்து இதுபோன்று கைது செய்யப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்போது இலங்கை வசமுள்ள 47 மீனவர்களையும், 166 மீன்பிடி படகுகளையும் விடுவித்திடவும், கூட்டுப் பணிக்குழு கூட்டத்தை கூட்டுவதற்கு தேவையான நடவடிக்கையை விரைந்து எடுத்திட வேண்டும். இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதத்தில் கூறியுள்ளார்.

Related posts

பல்கலை துணைவேந்தர் பதவி நீட்டிப்பு ஊழல்வாதிக்கு ஆளுநர் துணைபோவதா? ஜவாஹிருல்லா கேள்வி

69% இட ஒதுக்கீட்டை பாதுகாப்பதற்கு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த அன்புமணி வலியுறுத்தல்

ஐக்கிய அரபு அமீரகத்தில் தச்சர், பிளம்பர், பிட்டர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்: அயல் நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் தகவல்