அதிமுக மாஜி எம்எல்ஏ காரில் ரூ.50ஆயிரம் திருட்டு

அரியலூர்: அரியலூர் மாவட்டம் திருமானூர் அடுத்த அன்னிமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் இளவழகன் (57). அதிமுக முன்னாள் எம்எல்ஏவான இவர், அரியலூர் அழகப்பா நகரில் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இந்நிலையில் இவர் கடந்த 14ம் தேதி அரியலூரிலுள்ள தனியார் வங்கியில் இருந்து ரூ.50 ஆயிரத்தை எடுத்து வந்து தனது காரின் பின்புறம் உள்ள சீட்டில் வைத்துவிட்டு வீட்டுக்கு சென்றார்.

பின்னர் மீண்டும் அவர் வந்து பார்த்த போது காரில் வைத்திருந்த ரூ.50 ஆயிரம் மாயமானது கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுதொடர்பாக அரியலூர் காவல் நிலையத்தில் இளவழகன் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டதில், இந்த சம்பவத்தில் ஈடுபட்டது செந்துறை சாலையிலுள்ள ஒரு பெட்ரோல் பங்கில் வேலை செய்து வரும் ஆந்திர மாநிலம், நெல்லூரை சேர்ந்த மோசா (33) என்பதும், இளவழகன் வங்கியில் பணம் எடுத்து வருவதை நோட்டமிட்டதோடு அவரை பின் தொடர்ந்து வந்து இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டிருந்ததும் தெரிய வந்தது.

இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து மோசாவை நேற்றுமுன்தினம் கைது செய்தனர். பின்னர் அவரிடமிருந்து பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். அரியலூர் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட மோசா அரியலூர் சிறையில் அடைக்கப்பட்டார்.

Related posts

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜூலை 12-ம் தேதி வரை நீதிமன்றக் காவல்!

திருப்பதி மலைப்பாதையில் 7 யானைகள் நடமாட்டம்

நடுவழியில் பஸ்சை நிறுத்திவிட்டு போதையில் படுத்து தூங்கிய கண்டக்டர் அதிரடி சஸ்பெண்ட்