வீட்டில் இருந்து திருடிய ஏடிஎம் கார்டு மூலம் ரூ.70 ஆயிரம் அபேஸ்

தாம்பரம்: குரேம்பேட்டையில் வீட்டின் பூட்டை உடைத்து திருடிய ஏடிஎம் கார்டை பயன்படுத்தி ₹70 ஆயிரத்தை அபேஸ் செய்த மர்ம நபர்களை, போலீசார் தேடி வருகின்றனர். குரோம்பேட்டை, நாகப்பா நகரை சேர்ந்தவர் சுப்பிரமணியன் (82). தனியார் நிறுவன ஓய்வுபெற்ற ஊழியர். இவர், கடந்த 27ம் தேதி பம்மலில் உள்ள தனியார் மருத்துவமனையில் கண் அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு, பின்னர் அவரது மகள் வீட்டிற்கு குடும்பத்துடன் சென்று தங்கியிருந்தார்.

இவரது வங்கி கணக்கில் இருந்து ஏடிஎம் கார்டு மூலம் ₹70 ஆயிரம் எடுக்கப்பட்டதாக, நேற்று அவரது செல்போன் எண்ணிற்கு எஸ்எம்எஸ் வந்துள்ளது. இதனைகண்டு, அதிர்ச்சியடைந்த அவர், வீட்டில் வைக்கப்பட்டிருந்த ஏடிஎம் கார்டை பார்ப்பதற்காக சென்றுள்ளார். அப்போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு பீரோவில் நகை, பணம் எதுவும் இல்லாததால் அங்கிருந்த 2 ஏடிஎம் கார்டுகளை கொள்ளையர்கள் எடுத்துச்சென்றதும், ஏடிஎம் கார்டு பின்னால் எழுதி வைக்கப்பட்டிருந்த ரகசிய குறியீட்டு எண்ணை பயன்படுத்தி வங்கி கணக்கில் இருந்த ₹70 ஆயிரத்தை அபேஸ் செய்ததும் தெரியவந்தது.

இதுகுறித்து சுப்ரமணியன், குரோம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை சேகரித்து, கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

Related posts

பிரிட்டன் நாடாளுமன்ற தேர்தல் – தொழிலாளர் கட்சி முன்னிலை

விக்கிரவாண்டியில் திமுகவை வெற்றிபெற செய்யுங்கள்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

ஜூலை-05: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை