ஸ்டாக் மார்க்கெட் முதலீட்டில் அதிக லாபம் என தனியார் நிறுவன ஊழியரிடம் ரூ.57.44 லட்சம் மோசடி: பெண் உட்பட இருவர் கைது

ஆவடி: ஸ்டாக் மார்க்கெட் டிரேடிங்கில் முதலீடு செய்தால், அதிக லாபம் கிடைக்கும் என ஆசை வார்த்தை கூறி தனியார் நிறுவன ஊழியரிடம் ரூ. 57.44 லட்சம் மோசடியில் ஈடுபட்ட பெண் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அம்பத்தூர் அடுத்த கொரட்டூர் பகுதியைச் சேர்ந்தவர் ரவீந்தர் பரீக்(53). இவர், அம்பத்தூர் எஸ்டேட்டில், தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ஸ்டாக் மார்க்கெட் டிரேடிங் குறித்த விளம்பரம் ஒன்று வந்துள்ளது. இதனை தொடர்ந்து ரவீந்தர் பரீக், அதில் குறிப்பிட்ட எண்ணில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அப்போது, ஸ்டாக் மார்க்கெட் டிரேடிங்கில் முதலீடு செய்தால் நல்ல லாபம் கிடைக்கும் என மர்ம நபர்கள் ஆசை வார்த்தை கூறினர். அவர்களது பேச்சில் மயங்கியவர், மர்ம நபர்கள் கொடுத்த வங்கி கணக்கில், 57 லட்சத்து 44 ஆயிரம் ரூபாய் வரை டெபாசிட் செய்துள்ளார்.

இதையடுத்து, முதலீடு செய்த பணம் மற்றும் கமிஷன் தொகையை தராமல் காலம் தாழ்த்தி வந்துள்ளனர். இறுதியில், தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த ரவீந்தர் பரீக், இது குறித்து ஆவடி மத்திய சைபர் கிரைம் போலீசில் கடந்த மே மாதம் புகார் அளித்தார். போலீசார் நடத்திய விசாரணைக்கு பின், மோசடி கும்பலுக்கு ஏஜென்டாக செயல்பட்ட பெரம்பூரைச் சேர்ந்த பரிதா(38) மற்றும் கோடம்பாக்கத்தைச் சேர்ந்த கண்ணன்(54) ஆகியோரை நேற்றுமுன்தினம் போலீசார் கைது செய்தனர். பின்னர், பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த கும்பல், பல மாநிலங்களைச் சேர்ந்த பலரை ஏமாற்றி, பல கோடி ரூபாய் சுருட்டியது விசாரணையில் தெரிய வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related posts

திமுக பவளவிழாவை ஒட்டி, கட்சியினர் இல்லங்கள், அலுவலகங்களில் கட்சிக்கொடி பறக்கட்டும்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

திருப்பூர் மாவட்டம் கொடுவாய் அருகே சொத்துத் தகராறில் துப்பக்கிச்சூடு: 2 பேர் உயிரிழப்பு

கல்வி, சமூக நலத்திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தும் மாநிலங்களுக்கு நிதி தர மறுப்பதா?: ஒன்றிய அரசுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்