யார் ஆட்சியில் அரசு திட்டத்துக்கு ஸ்டிக்கர் ஒட்டினார்கள் என்பது மக்களுக்கு தெரியும்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதிலடி

ஆலந்தூர்: சென்னை சைதாப்பேட்டையில் உள்ள அரசு மருத்துவமனையில் ரோட்டரி கிளப் சார்பில், 10 ஆயிரம் பயனாளிகளுக்கு செயற்கை சிறுநீரக சுத்திகரிப்பு மருத்துவ உபகரணங்களை அர்ப்பணிக்கும் விழா புதிய மருத்துவமனை வளாகத்தில் இன்று நடைபெற்றது.

விழாவில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், மருத்துவ உபகரணங்களை பயனாளிகளுக்கு வழங்கி பேசியதாவது:
முதல்வர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின் படி மக்கள் நல்வாழ்வு துறையில் தினந்தோறும் பல்வேறு வகையான புதிய கட்டமைப்புகள் தொடர்ந்து செய்யப்பட்டு வருகிறது. பழமைவாய்ந்த இந்த மருத்துவமனை கடந்த ஆட்சியில் கண்டுகொள்ளாமல் இருந்தது. தற்போது இந்த மருத்துவமனையில் 6 தளங்களுடன் கூடிய ஒரு பிரமாண்டமான கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது.

முதல்வராக மு.க.ஸ்டாலின் ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் சைதாப்பேட்டை மருத்துவமனை, கொளத்தூர் புறநகர் மருத்துவமனை உள்ளிட்ட பல்வேறு மருத்துவமனைகளை மேம்படுத்தி புதிய கட்டிடங்களை தந்து அதிகளவில் படுக்கை வசதிகளை தந்துள்ளார். இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் மருத்துவ காப்பீட்டு திட்டம் மிகச் சிறப்பான வகையில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் பயன்பாட்டில் உள்ளது. தமிழ்நாடு முழுவதும் மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் மூலம் பயனடைந்த சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை 15 லட்சத்து 70 ஆயிரத்து 322 பேர்.

உலகம் முழுவதும் குரங்கம்மை பாதிப்பு இருப்பதாக சொல்லப்பட்டுள்ளது. ஒன்றிய மருத்துவத்துறை அமைச்சர் நட்டா இந்தியாவில் குரங்கம்மை இல்லை என்று அறிவித்திருக்கிறார். தமிழ்நாட்டில் குரங்கம்மை பாதிப்பு யாருக்கும் இல்லை. யாருக்காவது அந்த பாதிப்பு இருந்தால் உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்படுவார்கள். நாளை மறுநாள் நான் நேரடியாக விமான நிலையத்தில் ஆய்வு செய்ய உள்ளேன்.
அம்மா கிளினிக், பெரிய கட்டமைப்புடன் விளங்கியது போலவும் நூற்றுக்கணக்கான மருத்துவர்கள் அந்த மருத்துவமனையில் வேலை செய்தது போலவும் அம்மா கிளினிக்கை மூடிவிட்டதால் தமிழ்நாட்டில் மருத்துவ கட்டமைப்பு சிதைந்ததைப் போல எடப்பாடி பழனி சாமி பேசினார். அம்மா கிளினிக்கும் மக்கள் மருந்தகத்திற்கும் வித்தியாசம் தெரியாமல் அவர்கள் காலத்தில் வந்தது என பேசுகிறார் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்.

ஒரு புனித நோக்கத்தோடு, முதல்வர் இந்த திட்டத்தை அறிவித்திருக்கிறார். தைப்பொங்கல் அன்று 1000 இடங்களில் மக்கள் மருந்தகம் பயன்பாட்டிற்கு வரும். இந்தத் திட்டத்திற்கும் அம்மா மருந்தகம் என்ற பேருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. திமுக ஆட்சி காலத்தில் நிறைவேற்றப்பட்ட திட்டங்களைதான் ஜெயலலிதா திறந்து வைத்து கல்வெட்டு வைத்துக்கொண்டார். சென்னை மாநகராட்சியில் உள்ள அம்மா மாளிகை நான் இருந்தபோது 90 சதவீதம் முடிந்துவிட்டது. ஆட்சி மாறியவுடன் அதற்கு அம்மா மாளிகை என்று பெயர் வைத்துக்கொண்டார்கள். ஸ்டிக்கர் ஒட்டியது யார் என்று நாட்டுக்கு தெரியும். ஜெயக்குமாருக்கு தெரியாமல் இருப்பதுதான் வியப்பாக இருக்கிறது.

போலி மருத்துவர்கள் குறித்து தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. யாராவது சிக்கினால் கண்டிப்பாக சிறைக்கு செல்வார்கள். இவ்வாறு அமைச்சர் கூறினார். விழாவில் ரோட்டரி சங்க நிர்வாகிகள் குமரவேல், சீதாராமன், மண்டல குழு தலைவர் கிருஷ்ணமூர்த்தி கலந்துகொண்டனர்.

Related posts

மூடநம்பிக்கை பேச்சாளர் மகாவிஷ்ணுவை திருப்பூர் அழைத்துச் சென்று போலீசார் விசாரணை

மதுரை கட்ராபாளையத்தில் உள்ள விசாகா பெண்கள் விடுதியில் திடீர் தீ விபத்து: 2 பெண்கள் உயிரிழப்பு

பொங்கல் பண்டிகையையொட்டி ரயிலில் பயணம் செய்வதற்கான டிக்கெட் முன்பதிவு இன்று தொடக்கம்