மாநிலங்களுக்கு வரி பகிர்வு; உத்தரப்பிரதேசத்திற்கு ரூ.13,088 கோடி தமிழ்நாட்டுக்கு ரூ.2,976 கோடி ஒதுக்கீடு: ஒன்றிய நிதி அமைச்சகம் அறிவிப்பு

புதுடெல்லி: தமிழ்நாடு உட்பட பல்வேறு மாநிலங்களுக்கு வருவாய் பற்றாக்குறை மானியம் உட்பட பல்வேறு வகையான நிதிகளை ஒன்றிய அரசு ஒதுக்கீடு செய்து வருகிறது. இந்த நிலையில் ஒன்றிய நிதி அமைச்சகத்தின் தரப்பில் நேற்று ஒரு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்து ஒன்றிய நிதியமைச்சகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: வரவிருக்கும் பண்டிகைகள் மற்றும் புத்தாண்டைக் கருத்தில் கொண்டு, பல்வேறு சமூக நல நடவடிக்கைகள் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டங்களுக்கு நிதியளிப்பதற்காக ரூ.72,961.21 கோடி மதிப்புள்ள கூடுதல் தவணை வரிப் பகிர்வை விடுவிக்க ஒன்றிய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

இந்தத் தவணை அடுத்த ஆண்டு ஜனவரி 10ம் தேதியன்று மாநிலங்களுக்கு செலுத்த வேண்டிய வரிப் பகிர்வு தவணையாகும். இதில், தமிழ்நாட்டுக்கு ரூ. 2976.10 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது. அதிகப்பட்சமாக உத்தரப்பிரதேசத்திற்கு ரூ.13,088.51 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதேபோன்று மகாராஷ்டிராவுக்கு ரூ.4,608.96 கோடி, ஆந்திராவுக்கு ரூ.2,952.74 கோடி, கேரளாவுக்கு ரூ.1,404.50 கோடி, தெலங்கானாவுக்கு ரூ.1,533.64 கோடி, குஜராத்துக்கு ரூ.2,537.59 கோடி, மத்திய பிரதேசத்துக்கு ரூ.5,727.44 கோடி, கர்நாடகாவுக்கு ரூ.2,660.88 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது, என குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜிஎஸ்டி அமல்படுத்திய பிறகு மாநிலங்களுக்கு வரி வருவாய் பெருமளவில் குறைந்து விட்டது. இதனால், பல்வேறு நலத்திட்டங்களுக்கு ஒன்றிய அரசிடம் கேட்க வேண்டிய நிலை உள்ளது. இந்நிலையில், ஒன்றிய அரசிடம் இருந்து பெறப்படும் வரிப்பகிர்வு, மாநில நிதித் தேவைக்கு அத்தியாவசியமாக உள்ளது. ஒன்றிய அரசின் மொத்த வரி வருவாயில் 41 சதவீதம் மாநிலங்களுக்கு வரி பகிர்வாக வழங்கப்படுகிறது. மாநிலங்களின் மக்கள் தொகை, காடுகளின் பரப்பளவு, தனிநபர் வருவாய் ஆகியவற்றுக்கு ஏற்ப இது கணக்கிடப்படுகிறது.

Related posts

காலிஸ்தான் ஆதரவு தலைவர் மக்களவை எம்.பி.யாக பதவியேற்க 4 நாட்கள் பரோல் விடுப்பு

கேபினட் குழுக்களை அறிவித்தது தேசிய ஜனநாயக கூட்டணி அரசு

மேயர்கள் அடுத்தடுத்து ராஜினாமா.! கோவை மேயரை தொடர்ந்து நெல்லை மாநகராட்சி மேயர் சரவணன் ராஜினாமா