‘நாட்டாமை’ தான் இணைந்தாரு.. தொண்டர்கள் இல்ல… கட்சியில் சேர விரும்பாத சமக நிர்வாகிகள் வீடுகளுக்கு படையெடுக்கும் பாஜவினர்: ஈரோட்டில் சந்திசிரிக்கும் சம்பவம்

வருகிற நாடாளுமன்ற தேர்தலில் பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்து போட்டியிட உள்ளதாக அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார் சமீபத்தில் கூறியிருந்தார். இதையடுத்து கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் யாரும் எதிர்பார்க்காத நிலையில் சமாகவை பாஜவுடன் இணைத்து அனைவருக்கும் அதிர்ச்சி கொடுத்தார் சரத்குமார். கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு நாள் நள்ளிரவில் மனைவி ராதிகாவிடம் ஆலோசனை நடத்தி கட்சியை இணைத்ததாக நல்ல காரணத்தையும் கூறியிருந்தார் ‘நாட்டமை’. ஆனால் அவரின் இந்த முடிவுக்கு கட்சியின் நிர்வாகிகள், தொண்டர்கள் கடும் எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர்.

சமகவை இணைத்த பிறகு அந்த கட்சியின் மாவட்ட செயலாளர், நகர, ஒன்றிய நிர்வாகிகள் தங்களது கட்சியில் வந்து இணைவார்கள் என்று பாஜவினர் கடந்த 4 நாட்களாக காத்திருந்தனர். ஆனால் ஒருவர் கூட வராததால் பாஜவினர் ஏமாற்றமடைந்ததுதான் மிச்சம். இந்தநிலையில் வேறுவழியின்றி நேற்று முன்தினம் ஈரோடு தெற்கு மாவட்ட பாஜ மாவட்ட தலைவர் வேதானந்தம் தலைமையில் பாஜ நிர்வாகிகள், சமத்துவ மக்கள் கட்சியின் மாநகர செயலாளர் சின்னச்சாமியின் வீட்டிற்கு நேரடியாக சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் வழக்கம் போல ‘மிஸ்டு கால்’ கொடுத்து சின்னச்சாமியை கட்சியில் இணைத்துக்கொண்டனர். அவரை வைத்து மற்ற நிர்வாகிகளை வளைத்து போடலாம் என்று பாஜவினர் கருதினர். ஆனால் வேறு யாரும் பாஜவில் இணையாததால் பாஜவினர் ஏமாற்றமடைந்தனர்.

இது குறித்து சமத்துவ மக்கள் கட்சியின் மாஜி நிர்வாகிகள் கூறுகையில், ‘பாஜவுடன் கூட்டணி வைப்பதில் எங்களுக்கு ஆட்சேபனை இல்லை. ஆனால் திடீரென்று கட்சியை இணைத்துவிட்டதாக கூறுவதை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. பாஜவில் இணைந்து பயணிக்கவும் விருப்பமில்லை. திமுக, அதிமுக போன்ற கட்சிகளில் இருந்து எங்களுக்கு நிறைய அழைப்புகள் வருகின்றது. எனவே நிர்வாகிகளுக்குள் கூட்டம் நடத்தி விரைவில் ஒரு முடிவு எடுப்போம்,’ என்றனர்.

* தோழமை கட்சியினருக்கும் எங்க பலத்த நிரூபிக்கனும்: பாஜவை எல்லாரும் சாதாரணமா கருதுறாங்க… கே.பி. ராமலிங்கம் ‘விர்ர்’
சேலத்தில் நேற்று பாஜ மாநில துணைத்தலைவர் கே.பி.ராமலிங்கம் நிருபர்களிடம் கூறியதாவது: 543 தொகுதிகளிலும் போட்டியிடும் தகுதி பெற்றது பாஜ மட்டுமே. இதனை விமர்சிக்க சிறு கட்சிகளுக்கு எந்த அருகதையும் இல்லை. வலிமையான பாரதத்தை பிரதமரால் மட்டுமே தர முடியும். 2047 வரை இந்தியாவை வழி நடத்தும் வல்லமை பெற்ற கட்சி பாஜ தான். அதனால் நேர்மையற்ற சிறு கட்சிகளுக்கு நாங்கள் பதில் அளிக்கத் தேவையில்லை. சேலம் பொதுக்கூட்டத்தில் பாஜ தலைவர்கள் மட்டுமே பங்கேற்பார்கள். இது முழுக்க முழுக்க பாஜவின் வலிமையை பறைசாற்றும் கூட்டமாக அமையும். தோழமை கட்சிகளை நாங்கள் அழைக்கவில்லை.

பாஜவை எல்லோரும் சாதாரணமாக கருதுகிறார்கள். தோழமை கட்சிகளுக்கும் எங்க பலத்தை நிரூபிக்க வேண்டியிருக்கு. இந்த கூட்டத்திற்கு அவர்களை அழைத்தால், அவங்க எங்க கட்சிக்காரங்கதான் அதிகமாக வந்தார்கள் என்று சொல்வார்கள். அதனால் அவர்களை அழைக்காமல் எங்க பலத்தை காட்டப் போறோம். ஆனா தோழமை கட்சியினரை தேர்தலில் ஜெயிக்க வைப்போம். பாஜ எந்த இடத்தில் இருக்கிறது என்று நாட்டிற்கு தெரிய வேண்டாமா? எங்க தலைவருக்கும் தெரிய வேண்டாமா? தொண்டர்களின் உழைப்பு தெரிய வேண்டுமல்லவா?. தோழமை கட்சியினர் பொதுக்கூட்டத்திற்கு வரட்டும், வந்து பார்க்கட்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Related posts

அமெரிக்க பயணம் முடித்து சென்னை திரும்பினார் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு: 19 நிறுவனங்களுடன் ரூ.7,616 கோடி ஒப்பந்தம்; 11,516 பேருக்கு வேலை; தமிழக மக்களுக்கான சாதனை பயணமாக அமைந்தது என பெருமிதம்

புதிய அத்தியாயம்

79 பேர் இடமாற்ற விவகாரம் டான்ஜெட்கோ உத்தரவை எதிர்த்த தொழிற்சங்க வழக்கு தள்ளுபடி: உயர்நீதிமன்றம் உத்தரவு