மாநில வளர்ச்சி கடன் பத்திரங்களை 20 நாட்களுக்கு முன்பாகவே ஒப்படைக்க வேண்டும்: அரசு அறிவிப்பு


சென்னை: தமிழ்நாடு மாநில வளர்ச்சிக் கடன் பத்திரங்களை வைத்திருப்பவர்கள் 20 நாட்களுக்கு முன்னதாகவே, பொதுக்கடன் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்ட அறிக்கை: கடன் பத்திரங்களை பொறுத்தமட்டில், தொகை செலுத்தும் நோக்கத்திற்காக, நேர்விற்கேற்ப அசல் சந்தாதாரர் அல்லது இத்தகைய அரசு கடன் பத்திரங்களை வைத்திருப்பவர் வட்டித் தொகை செலுத்துவதற்காக முகப்பிடப்பட்டுள்ள, பதிவு செய்யப்பட்டுள்ள வங்கிக்கு அல்லது கருவூலத்திற்கு மற்றும் சார் கருவூலத்திற்கு அல்லது பாரத ஸ்டேட் வங்கியின் கிளைக்கு நேர்விற்கேற்ப அவர்களுடைய வங்கிக் கணக்கின் உரிய விவரங்களை அளிக்க வேண்டும்.

இருப்பினும், வங்கிக் கணக்கில் உரிய விவரங்கள் இல்லாத, மின்னணு மூலம் நிதிகளை வரவு வைப்பதற்கு ஆணை பிறப்பிக்கப்படாத நேர்வில், உரிய நாளில் தொகையை திருப்பிச் செலுத்துவதற்கு ஏதுவாக, 6.74% தமிழ்நாடு மாநில வளர்ச்சிக் கடன், 2024 தொடர்பான கடன் பத்திரங்களை வைத்திருப்பவர்கள், அவர்களுடைய கடன் பத்திரங்களை, 20 நாட்களுக்கு முன்னதாகவே, பொதுக் கடன் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும். கடன் தொகையை திருப்பிச் செலுத்துவதற்காக கொடுக்கப்படும் கடன் பத்திரங்களின் பின் பக்கத்தில், கீழே குறிப்பிடப்பட்டுள்ளவாறு உரியமுறையில் எழுதி கையொப்பமிட வேண்டும். சான்றிதழுக்குரிய அசல் தொகை பெறப்பட்டது. பாரத ஸ்டேட் வங்கியின் கிளை ஒன்றில் கருவூலப் பணிகள் மேற்கொள்ளப்படும் இடங்களில், இக்கடன் பத்திரங்கள், பங்கு முதல் சான்றிதழ்கள் வடிவில் இருக்குமாயின், சம்பந்தப்பட்ட வங்கியின் கிளையில் தான் ஒப்படைக்க வேண்டுமே தவிர கருவூலத்திலோ அல்லது சார் கருவூலத்திலோ ஒப்படைக்கக் கூடாது.

கடன் தொகை திருப்பிச் செலுத்தக் கோரி, கடன் பத்திரங்கள் முகப்பிடப்பட்டுள்ள இடங்கள் நீங்கலாக பிற இடங்களில் தொகையைப் பெற விரும்புவோர், கடன் பொறுப்பைத் தீர்க்கும் வாசகத்தை அப்பத்திரங்களின் பின்புறம் உரியவாறு எழுதி கையொப்பமிட்டு, சம்மந்தப்பட்ட பொதுக்கடன் அலுவலகத்திற்கு பதிவு அஞ்சல் மற்றும் காப்புறுதி அஞ்சல் மூலம் அனுப்ப வேண்டும். தமிழ்நாடு மாநிலத்தில், அரசு கருவூலகப் பணிகளை மேற்கொள்கின்ற யாதொரு கருவூலம், சார் கருவூலம் அல்லது பாரத ஸ்டேட் வங்கியின் கிளைகளில் செலுத்தத் தக்க கேட்புக் காசோலை ஒன்றை வழங்குவதன் மூலம், பொதுக் கடன் அலுவலகம், தொகை வழங்கும். இவ்வாறு அரசு வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related posts

பிரதமர் மோடியின் வருகையை ஒட்டி புவனேஸ்வரில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்தது ஒடிசா அரசு

கேரளாவில் நிபாவுக்கு கல்லூரி மாணவர் பலி: தீவிர கட்டுப்பாடுகள் அமல்

தாம்பரம் ரயில்நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.4 கோடி உரிமைக்கோரியவரின் பணமில்லை: சிபிசிஐடி போலீசார் விசாரணையில் தகவல்