நம்பி ஏமாந்து நடுவீதியில் நிற்கிறேன் என புலம்பும் தாமரை கட்சி பெண் பொறுப்பாளரை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

‘‘நம்பி ஏமாந்து நடுவீதியில் நிற்கிறேன் என்று தாமரை கட்சியின் மாநில பொறுப்பாளரான ஆசிரியை புலம்புகிறாராமே..’’ என்று சுவாரஸ்யமாக கேள்வி எழுப்பினார் பீட்டர் மாமா.
‘‘தாமரை கட்சியில் தென்கோடி மாவட்டத்தில் இளைஞர் பிரிவில் மாவட்ட பொறுப்பில் இருக்கின்ற திருமணமானவர், மாநில பொறுப்பில் இருக்கின்ற ஆசிரியையான திருமணமாகாதவரை மணம்புரிவதாக வாக்குறுதி அளித்து இருவரும் ஒன்றிணைந்தார்களாம். ஆனா, கடைசியில் திருமணம் நடைபெறவில்லையாம். இதனால் விரக்தியின் உச்சத்தில் சென்ற மாநில பொறுப்பாளர் ‘நம்பி ஏமாந்து நடுவீதியில் நிற்கும் நிலைக்கு ஆளானேன், எனது வாழ்க்கையை அழித்துவிட்டு….’ என்று தனது சமூக வலைதள பக்கத்தில் கடுமையாக திட்டித்தீர்த்து பதிவிட்டுள்ளாராம். இதனை அறிந்த கட்சி மேலிடம் இருவரிடம் இருந்தும் ராஜினாமா கடிதத்தை முன்தேதியிட்டு வாங்கி வைத்துள்ளதாம். ஆனா கட்சிபணிகளை இருவரும் தொடர்ந்து செய்துட்டுதான் இருக்காங்களாம். தற்போது தனது சமூக வலைதள பக்கத்தை மூடி வைத்துள்ள மாநில பொறுப்பாளர் போன் உரையாடல் உள்ளிட்ட ஆதாரத்தை வைத்து பொருமியும் புலம்பியும் வருகிறாராம். விவகாரம் எப்போது வேண்டுமானாலும் படாரென வெடிக்கும் என்கிறாங்க, விபரமறிந்தவங்க’’ என்று விலாவாரியாக சொன்னார் விக்கியானந்தா.

‘‘புதுசா நடந்த நிர்வாகிகள் நியமனத்துனால குழப்பம்னு பேசிக்கிறாங்களே.. விஷயத்தை முழுசா சொல்லு..’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.
‘‘குயின்பேட்டை மாவட்டத்துல இலை கட்சியில புதுசா டிஸ்டிரிக் செக்ரட்ரிய நியமிச்சாங்க, அவருக்கு தடபுடலா வரவேற்பு ெகாடுத்தாங்க. அதுக்கு அப்புறமா, மாவட்டத்துல புதுசா நிர்வாகிகளுக்கு பதவி வழங்குனாங்களாம். இதுலத்தான் இப்ப சலசலப்பு ஏற்பட்டிருக்குதாம். குறிப்பா சொல்லணும்னா, டிஸ்ட்ரிக் ஸ்டூடண்ட் செக்ரட்ரி பதவிய, அங்குள்ள ஒருத்தருக்கு கொடுத்திருக்காங்க. இந்த பொறுப்பை ஏற்கனவே வச்சிருந்த செக்ரட்ரி, என் மீது என்ன தவறு? எதுக்காக என்னை நீக்கி வேறொருத்தருக்கு பதவி கொடுத்தீங்கன்னு காரசாரமா வாதம் பண்ணியிருக்காராம். இந்த மேட்டர் தலைமை வரைக்கும் போயிடுச்சாம். இது தொடர்பா சமீபத்துல நடந்த இலை கட்சிக்காரரோட, வீட்டு விசேஷத்துல வீரமான மாஜி மந்திரி சமாதானம் செஞ்சி வெச்சாராம்.

இப்படி இவர் மட்டுமில்லாம, கட்சியில பதவி போட்டதுல எதிர்பார்த்த பதவி கிடைக்கலையேன்னு புலம்பல் சத்தம் அதிகரிச்சுகிட்டே இருக்குதாம். பல ஆண்டா நேர்மையா உழைச்சவங்களுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கலியாம். அவங்கள தலைமையும் கண்டுக்கிறது இல்லையாம். அம்மா இருந்தப்போ கட்சிக்காக உழைச்சவங்கள பதவி தேடி வந்தது. இப்ேபா தலைகீழா மாறிவிட்டதாம். இதனால இவங்களோட அதிருப்தி ஒலிக்க வேண்டிய நேரத்துல ஸ்ட்ராங்கா ஒலிக்கும்னு ரத்தத்தின் ரத்தங்களே பேசிக்கிறாங்க’’ என்றார் விக்கியானந்தா.

‘‘பெண் வாரிசை தயார்படுத்துறாராமே இலை கட்சி மாஜி..’’ என்று பூடகமா ஒரு கேள்வியை கேட்டார் பீட்டர் மாமா.
‘‘நாகர்கோயில் கொண்டுள்ள ஊரில் இருக்கும், ஒரு மண்டலத்துக்குட்பட்ட பகுதியில் இலை கட்சி சார்பில் பூத் கமிட்டி கூட்டம் போட்டு இருக்காங்க. முன்னாள் எம்.எல்.ஏ.வின் பெண் வாரிசு தான், இந்த மண்டலத்துக்கு செயலாளராம். அவர் பொறுப்பேற்ற பின் முதல் கூட்டம் என்பதால், பெண் வாரிசுக்காக முன்னாள் எம்.எல்.ஏ.வும் பணத்தை தண்ணீரா வாரி இரைச்சாராம். பூத் கமிட்டி கூட்டமே மாநாடு போல் பெரிய மண்டபத்தில் தான் நடந்திருக்கு. தடபுடலான வரவேற்போடு நிறுத்தாமல் கூட்டத்தில் பங்கேற்ற ரத்தத்தின் ரத்தங்களுக்கு கமகமவென மட்டன் பிரியாணியும் கொடுத்து அசத்திட்டாங்களாம். இதை பார்த்த மற்ற மண்டல பொறுப்பாளருங்க கலக்கத்தில் இருக்கிறாங்களாம். நாமும் இப்படி நடத்தினாதான் கட்சிக்காரங்க மதிப்பாங்க என்ற நிலையில் உள்ளார்களாம். அடுத்த சட்டமன்ற தேர்தலில் எப்படியும் தொகுதியில் இலை கட்சி வேட்பாளரா பெண் வாரிசை நிறுத்திடனும்கிற ஆசையிலதான், மாஜி எம்.எல்.ஏ. இப்படி செயல்படுகிறார் என்றும் பேசிக்கிறாங்க’’ என்றார் விக்கியானந்தா.

‘‘பக்கத்து மாநிலத்தில நீக்கப்பட்டவருக்கே மீண்டும் அமைச்சர் பதவி தரப்போறதா சொல்லுறாங்களே, உண்மையா இருக்குமா’’ என்று அடுத்த சந்தேகத்தை கிளப்பினார் பீட்டர் மாமா.
லேசாக சிரித்தபடி விக்கியானந்தா ஆரம்பித்தார். ‘‘புதுச்சேரி தேஜ கூட்டணியில அமைச்சர் பொறுப்பு வகித்து வந்த நிலாவை திடீரென பதவியில் இருந்து தூக்கி அடிச்சாரு புல்லட்சாமி. சும்மா இருக்காம, புல்லட்சாமி மீது மறைமுகமாக அடுக்கான புகார்களை தட்டிவிட்டு காரைக்காலுக்கு பறந்தோடினார் அந்த மாஜி பெண் அமைச்சர். அதன்பிறகு தலைமை செயலகம் பக்கம் தலைகாட்டவில்லை. கடந்த இருவாரங்களுக்கு முன் புல்லட்சாமியை மீண்டும் சந்தித்து, என்னை அரசியல் ரீதியாக புறக்கணித்து விடாதீங்க, ஏதாவது தப்பு செஞ்சிருந்தா மன்னிச்சுடுங்க, எங்கப்பா மாதிரி நீங்கன்னு கண்ணுல தண்ணிவிட்டு கலங்கியிருக்காங்க. ஆனாலும் புல்லட்சாமியிடம் இருந்து வழக்கம்போல் நோ ரியாக்‌ஷன்தான் இருந்திருக்கு. ஒன்லி ஆசிர்வாதம் மட்டும்தானாம். இந்த செய்தி வெளியானவுடன், நான் எதற்காக அழப்போறேன், தொகுதியில் உள்ள கோயில் பூஜை செலவுக்கு செக் வாங்க போனேன் என மறுத்துவிட்டாராம் அந்த அம்மா. வெளியில அப்படி சொன்னாலும் இரண்டாவது முறையா புல்லட்சாமியை அவங்க சந்திச்சிருக்காங்க. அப்பவும் கடந்த முறை வந்தபோது செக் ரெடியாகலை, இப்போது அதை பெறப்போனதாத்தான் மாஜி பெண் அமைச்சர் தரப்பு சொல்லியிருக்கு. இந்த சந்திப்பை பயன்படுத்தி மீண்டும் அமைச்சராக போகிறார் என பக்கத்து தொகுதி எதிராளி கடுப்பாகட்டும் என அவருக்கும் தெரியும் வகையில் மாஜி அமைச்சரின் ஆதரவாளர்கள் பதிவு போடுறாங்களாம்.

டிசம்பர் மாதம் சனிப்பெயர்ச்சிக்கு பிறகு அமைச்சராகிறார் என சமூக வலைதளங்களில் பதிவுகளை போட்டு தெறிக்க விடுகிறார்களாம். ஆனா இதெல்லாம் புல்லட்சாமியிடம் எடுபடாது என்பதெல்லாம் அரசியல் தெரிந்தவர்களுக்கு நன்கு தெரியும். ஒரு முறை புல்லசாமி ரிஜெக்ட் செய்துவிட்டால், மீண்டும் வாய்ப்பெல்லாம் எப்போதைக்கும் இல்லை என்பது பதிவுகளை போட்டவர்களுக்கு தெரியாமல் போனதுதான் விந்தை’’ என்று முற்றுப்புள்ளி வைத்தார் விக்கியானந்தா.

Related posts

அமெரிக்க பயணம் முடித்து சென்னை திரும்பினார் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு: 19 நிறுவனங்களுடன் ரூ.7,616 கோடி ஒப்பந்தம்; 11,516 பேருக்கு வேலை; தமிழக மக்களுக்கான சாதனை பயணமாக அமைந்தது என பெருமிதம்

புதிய அத்தியாயம்

79 பேர் இடமாற்ற விவகாரம் டான்ஜெட்கோ உத்தரவை எதிர்த்த தொழிற்சங்க வழக்கு தள்ளுபடி: உயர்நீதிமன்றம் உத்தரவு