வத்திராயிருப்பு அருகே மலையில் மாடு மேய்த்தவர் கைது: விடுவிக்க கோரி வனத்துறை அலுவலகம் முற்றுகை

வத்திராயிருப்பு: வத்திராயிருப்பு அருகே, மலையில் மாடு மேய்த்தவரை வனத்துறையினர் கைது செய்தனர். அவரை விடுவிக்கக்கோரி, வனத்துறை அலுவலகத்தை மலைமாடு உரிமையாளர்கள் மற்றும் மாடு மேய்ப்பவர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் உள்ள கூமாப்பட்டி, கான்சாபுரம், நெடுங்குளம், கொடிக்குளம் ஆகிய பகுதிகளில் சுமார் 5,000க்கும் மேற்பட்ட மலைமாடுகள் உள்ளன. இவைகளை மலைப்பகுதியில் மேய்ச்சலுக்கு விடுவர். திருவில்லிபுத்தூர் பகுதியில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலை புலிகள் சரணலாயமாக அறிவிக்கப்பட்டுள்ளதால், மலைப்பகுதியில் மாடு மேய்க்க வனத்துறை தடை விதித்துள்ளது.

இந்த நிலையில் கோயிலாறு அணைப்பகுதியில் நேற்று அனுமதியின்றி மலை மாடுகளை மேய்த்ததாக எஸ்.கொடிக்குளம் பகுதியைச் சேர்ந்த குமரன் என்பவரை வனத்துறையினர் கைது செய்தனர். மேலும், அவரை எஸ்.கொடிக்குளத்தில் உள்ள வனத்துறை அலுவலகத்துக்கு நேற்று இரவு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.  இதையறிந்த மலை மாடு உரிமையாளர்கள் மற்றும் மாடு மேய்ப்போர் 30க்கும் மேற்பட்டோர் குமரனை விடுவிக்கக்கோரி, வனத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இவர்களுடன் வனத்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தியும் சமாதானம் ஏற்படவில்லை. இதையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.

Related posts

விஷச் சாராயத்தில் 29.7% மெத்தனால் கலப்பு – அரசு அறிக்கை

நெகிழி ஒழிப்பு விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவிகளுக்கு மஞ்சள் பை வழங்கப்பட்டது

பழைய குற்றால அருவியில் இரவு 8 மணி வரை குளிக்கலாம்