ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே யானையை விரட்டச் சென்றபோது வனத்துறையினர் ஜீப்பை மறித்த காட்டெருமை


ஸ்ரீவில்லிபுத்தூர்:ஸ்ரீவில்லிபுத்தூரில் இன்று அதிகாலை யானையை விரட்ட சென்ற வனத்துறையினரின் ஜீப்பை காட்டெருமை மறித்து நின்றதால் பரபரப்பு ஏற்பட்டது. விருதுநகர் மாவட்டம் வில்லிபுத்தூர் அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் கடந்த 20 நாட்களுக்கும் மேலாக யானைகள் இரவு நேரத்தில் இறங்கி வருகின்றன. இந்த நிலையில் வில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பக துணை இயக்குனர் தேவராஜ் உத்தரவின்பேரில் ரேஞ்சர் செல்லமணி தலைமையில் வனத்துறையினர் யானைகளை மலையடிவாரத்திற்கு வரவிடாமல் இரவு முழுவதும் கண்காணித்து விரட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர். காட்டிற்குள் பட்டாசுகள் வெடித்தும், தகர டப்பாக்களை கொண்டு ஒலி எழுப்பியும், தீ மூட்டியும் யானைகளை விரட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் இன்று அதிகாலை சுமார் ஒரு மணி அளவில் அத்திதுண்டு பகுதியில் யானையை விரட்டும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டிருந்தனர். அவர்கள் ராஜபாளையம் சாலையில் சென்ற போது, திடீரென வனத்துறையினர் ஜீப்பின் குறுக்கே ஆண் காட்டெருமை மறித்து நின்றது. சுமார் 10 நிமிடங்களுக்கு வாகனத்தை நகர விடாமல் ஒரே இடத்திலேயே நின்று கொண்டது. இதனால் வனத்துறையினர் வேறுவழியின்றி வாகனத்திலேயே அமர்ந்திருந்தனர். பின்னர் காட்டெருமை அங்கிருந்து நகர்ந்து காட்டுப்பகுதிக்குள் சென்றது. இதனால் நிம்மதி அடைந்த மீண்டும் வனத்துறையினர் மீண்டும் யானை விரட்டும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டனர்.

Related posts

ஏரியில் குளிக்கும் போது சுழலில் சிக்கி 4 குழந்தைகள் உயிரிழந்த பரிதாப சம்பவம்!

லெபனான் நாட்டில் பேஜர்கள் மூலம் அடுத்தடுத்து நிகழ்த்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதல்: 8 பேர் பலி; 2,700-க்கும் மேற்பட்டோர் காயம்!

மின் கட்டண உயர்வை ரத்து செய்ய கோரி இந்தியா கூட்டணி கட்சிகள் புதுவையில் நாளை பந்த்