ஸ்ரீவைகுண்டம் வட்டத்தில் திருச்செந்தூர், ஏரல் பகுதிகளில் சேதமடைந்த வீடுகளை கணக்கெடுக்கும் பணி தொடங்கியது..!!

தூத்துக்குடி: ஸ்ரீவைகுண்டம் வட்டத்தில் திருச்செந்தூர், ஏரல் பகுதிகளில் சேதமடைந்த வீடுகளை கணக்கெடுக்கும் பணி தொடங்கியது. தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் பெய்த கனமழை காரணமாக தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. தாமிரபரணி ஆற்றிலும், அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதால் ஸ்ரீவைகுண்டம், தூத்துக்குடி நகரங்களில் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. தூத்துக்குடியில் மழை இல்லை என்றாலும் சில இடங்களில் தேங்கி நின்ற வெள்ளம் இன்னும் வடியவில்லை.

வெள்ளத்தில் சில வீடுகள் இடிந்து விழுந்திருக்கின்றன. பைக்குகள், கார்கள், பேருந்துகள் என அனைத்து வகை வாகனங்களும் கடுமையாக சேதமடைந்துள்ளன. வீடுகளை இழந்து மக்கள் பரிதவித்து வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டத்தில் ஸ்ரீவைகுண்டம் வட்டத்தில் பெய்த கனமழை காரணமாக பல இடங்களில் மழைநீர் தேங்கியது. ரயில் பயணிகள் 800 பேர் ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்திலேயே சிக்கிக்கொண்ட நிலையில், அவர்கள் பல்வேறு மீட்பு நடவடிக்கைகளுக்கு பிறகு மீட்கப்பட்டனர். இந்த மழை கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவு என்று சொல்லப்படுகிறது.

ஆயிரக்கணக்கான வீடுகள் சேதமடைந்த நிலையில், அரசினுடைய நிவாரணத்தை எதிர்பார்த்து பல குடும்பங்கள் காத்திருக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனிடையே, தூத்துக்குடியில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா நேரில் ஆய்வு மேற்கொண்டார். மறவன்மடம், அந்தோணியார்புரம், குறிஞ்சி நகர், முத்தம்மாள் காலனி உள்ளிட்ட இடங்களில் தலைமைச் செயலாளர் ஆய்வு நடத்தினார்.

இந்நிலையில், ஸ்ரீவைகுண்டம் வட்டத்தில் திருச்செந்தூர், ஏரல் பகுதிகளில் சேதமடைந்த வீடுகளை கணக்கெடுக்கும் பணி தொடங்கியிருப்பது அப்பகுதி மக்களுக்கு சற்று ஆறுதல் கொடுத்துள்ளது. வட்டாட்சியர் தலைமையிலான வருவாய்த்துறை அலுவலர்கள் கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பகுதியாக சேதமடைந்த வீடுகள், முழுமையாக சேதமடைந்த வீடுகளை கணக்கெடுக்கும் பணி தொடங்கியுள்ளது.

Related posts

இலங்கை அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது

ரூ.27 கோடி லஞ்சம்: முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் மீது வழக்குப்பதிவு

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்