ஸ்ரீவைகுண்டத்துக்கு மீட்பு, நிவாரண குழு சென்றுள்ளது; 10 ஹெலிகாப்டர்கள் மூலம் உணவு விநியோகம்: தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா பேட்டி

சென்னை: ஸ்ரீவைகுண்டம் பகுதிக்கு மீட்புக் குழுவினர், அதிகாரிகள் சென்றுவிட்டனர். மீட்பு, நிவாரணப்பணிகளை விரைவுபடுத்த முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார் என்று தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா தெரிவித்துள்ளார்.

வெள்ள பாதிப்பு குறித்து முதலமைச்சர் ஆலோசனை:

வெள்ள பாதிப்பு குறித்து 4 மாவட்ட சிறப்பு அதிகாரிகள், ஆட்கியர்களுடன் காணொளியில் முதல்வர் ஆலோசனை நடத்தினார். சென்னை எழும்பூர் எழிலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு மையத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை செய்தார். அவசரகால கட்டுப்பாட்டு அறையில் இருந்து மீட்பு, நிவாரணப் பணிகளை கண்காணித்தார். தாமிரபரணி ஆறு, அணைகளின் நீர்மட்டம், நீர்வரத்து போன்றவை குறித்து முதலமைச்சர் கேட்டறிந்தார். 4 மாவட்டங்களில் மேற்கொள்ளப்படும் நிவாரணப் பணிகள் குறித்து தலைமைச் செயலாளர் எடுத்துரைத்தார். பின்னர் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர்,

மீட்பு, நிவாரணப் பணிகளை விரைவுபடுத்த முதல்வர் ஆணை:

வெள்ள பாதிப்பு தொடர்பாக மூத்த அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஆலோசனை நடத்தினார். நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் மீட்பு, நிவாரணப்பணிகளை விரைவுபடுத்த முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். மின்விநியோகம், மேற்கொள்ள வேண்டிய நிவாரணப்பணிகள் குறித்து முதலமைச்சர் கேட்டறிந்தார் என்றார்.

மீட்கப்பட்டவர்களுடன் முதல்வர் பேசினார்:

பாதிக்கப்பட்ட மாவட்டங்களை சேர்ந்த ஆட்சியர்களுடன் காணொளி வாயிலாக முதலமைச்சர் ஆலோசனை நடத்தினார். வெள்ள பாதிப்பு, மீட்பு, நிவாரணப் பணிகள் குறித்து அதிகாரிகளிடம் முதல்வர் கேட்டறிந்தார். பால் விநியோகம், மருத்துவ வசதி உள்ளிட்டவை குறித்து முதலமைச்சர் கேட்டறிந்தார். நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களுடன் முதல்வர் நேரடியாக பேசி அவங்களின் நிலை குறித்து கேட்டறிந்தார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு தடையின்றி உணவு, குடிநீர், மருத்துவ உதவிகள் கிடைக்க முதல்வர் அறிவுறுத்தியுள்ளார் என்று தலைமை செயலாளர் தெரிவித்தார்.

ஸ்ரீவைகுண்டத்துக்கு மீட்பு, நிவாரண குழு சென்றுள்ளது:

ஸ்ரீவைகுண்டம் பகுதிக்கு மீட்புக் குழுவினர், அதிகாரிகள் சென்றுவிட்டனர். ஸ்ரீவைகுண்டத்திலேயே உணவு சமைத்து பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவு வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஸ்ரீவைகுண்டத்தில் போர்க்கால அடிப்படையில் மீட்புப் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தண்ணீர் தேங்கியுள்ள பகுதிகளில் விரைவாக மின்விநியோகம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என தலைமை செயலாளர் கூறினார்.

10 ஹெலிகாப்டர்கள் மூலம் உணவு விநியோகம்:

தூத்துக்குடியில் ஹெலிகாப்டர் மூலம் இதுவரை 27 டன் உணவுப் பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. 10 ஹெலிகாப்டர்கள் மூலம் உணவு, நிவாரணப் பொருட்கள் வழங்கப்படுகின்றன. உணவுப்பொருட் தயாரித்து குறிப்பிட்ட அளவில் பொட்டலம் செய்து ஹெலிகாப்டர் மூலம் வழங்கியுள்ளோம் என்று தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா தெரிவித்துள்ளார்.

Related posts

பிக்-அப் பாயிண்ட் திடீர் மாற்றம், இருசக்கர வாகனங்கள் நுழைய தடை: அல்லல்படும் சென்னை விமான நிலைய பயணிகள்

தவெக மாநாடு தொண்டர்களுக்கு விஜய் திடீர் கட்டுப்பாடு

ரேஸ் கிளப் தொடர்ந்த வழக்கை அவசரமாக விசாரிக்க கோரி மனு: சென்னை ஐகோர்ட்டில் தீர்ப்பு ஒத்திவைப்பு