ஸ்ரீரங்கம், ராமேஸ்வரம் கோயில்களில் மோடி தரிசனம்: 22 தீர்த்தங்களில் புனித நீராடினார்; 5 அடுக்கு பாதுகாப்பு; பக்தர்களுக்கு அனுமதி இல்லை

திருச்சி: பிரதமர் நரேந்திர மோடி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் மற்றும் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில்களில் நேற்று சிறப்பு தரிசனம் செய்தார். 22 தீர்த்தங்களில் புனித நீராடினார். இதையொட்டி திருச்சி மற்றும் ராமேஸ்வரத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. மேலும் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடி தமிழ்நாட்டில் 3 நாள் சுற்றுப்பயணமாக நேற்று முன்தினம் சென்னை வந்தார். சென்னை நேரு விளையாட்டு அரங்கத்தில் நேற்று முன்தினம் மாலை தேசிய அளவிலான கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். பின்னர் இரவில் கிண்டி ஆளுநர் மாளிகையில் தங்கி ஓய்வெடுத்த பிரதமர், நேற்று காலை 9 மணிக்கு சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் 10.20 மணியளவில் திருச்சி விமான நிலையம் வந்தார்.

விமான நிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் ஸ்ரீரங்கம் யாத்ரி நிவாஸ் எதிரே பஞ்சக்கரை பகுதியில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக ஹெலிகாப்டர் இறங்கு தளத்துக்கு 10.45 மணிக்கு வந்தார். பின்னர் கார் மூலம் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலுக்கு சென்றார். அப்போது காரில் நின்றபடியே சென்ற மோடிக்கு சாலையின் இருபுறமும் திரண்டிருந்த மக்கள் பூக்கள் தூவி உற்சாக வரவேற்பு அளித்தனர். அவர்களை பார்த்து பிரதமர் கையசைத்தபடியே சென்றார்.

கோயிலுக்கு வந்ததும் வேட்டி, சட்டை என பாரம்பரிய உடை அணிந்து உள்ளே சென்றார். அவருக்கு ரங்கா ரங்கா கோபுரம் வாயிலில் அர்ச்சகர் சுந்தர் பட்டர் பூரண கும்ப மரியாதை அளித்து வரவேற்றார். பின்னர் ரங்கநாதர், தாயார், சக்கரத்தாழ்வார், ராமானுஜர், கருடாழ்வார் சன்னதிகளுக்கு சென்று பிரதமர் தரிசனம் செய்தார். தைத்திருவிழாவையொட்டி ரங்கவிலாச மண்டபத்தில் எழுந்தருளியிருந்த உற்சவர் நம்பெருமாளை தரிசித்த பிரதமருக்கு அர்ச்சகர் ஜடாரி மரியாதை வழங்கியதுடன் தீர்த்தம் அளித்தார். பின்னர் அங்கு, தமிழறிஞர்கள் கம்பராமாயணத்தை பாடினர்.

அதை மோடி கண்களை மூடி மனமுருக கேட்டார். 1.45 மணி நேரம் கோயிலில் வழிபாடு செய்தபின் பஞ்சக்கரை ஹெலிபேடுக்கு வந்து ஹெலிகாப்டர் மூலம் ராமேஸ்வரம் அமிர்தா வித்யாலயா மைதானத்திற்கு பிற்பகல் 2 மணிக்கு வந்தார். அங்கு கலெக்டர் விஷ்ணுசந்திரன், எஸ்பி சந்தீப் ஆகியோர் வரவேற்றனர். பின்னர் கார் மூலம் ராமகிருஷ்ண மடத்திற்கு பிரதமர் சென்றார். வழியில் பாஜவினர் மலர்தூவி வரவேற்பு அளித்தனர். அங்கு சிறிது நேரம் ஓய்வு எடுத்த மோடி, பிற்பகல் 3.20 மணிக்கு அக்னி தீர்த்தம் கடற்கரைக்கு சென்று தீர்த்தக் கடலில் புனித நீராடினார்.

அங்கிருந்து ஈர உடையுடன் பேட்டரி காரில் ராமநாத சுவாமி கோயிலுக்கு சென்றவர், 22 தீர்த்தங்களிலும் புனித நீராடினார். தொடர்ந்து ராமநாத சுவாமி – பர்வதவர்த்தனி அம்பாள் சன்னதிக்கு சென்று சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டார். பின்னர் கோயில் தெற்கு கோபுர வாயில் திருக்கல்யாண மண்டபத்தில் நடைபெற்ற ராமாயணம் வாசித்தல் நிகழ்ச்சிக்கு சென்றார். அங்கு தமிழ், தெலுங்கு, கன்னடம், குஜராத்தி, மராத்தி, இந்தி, சமஸ்கிருதம் உட்பட 9 மொழிகளில் பண்டிதர்களால் ராமாயணம் வாசிக்கப்பட்டது. தொடர்ந்து 5 மணிக்கு நடைபெற்ற பஜனை நிகழ்ச்சியிலும் பங்கேற்றார்.

பின் கோயில் திருக்கல்யாண மண்டபத்தில் இருந்து புறப்பட்டு ராமகிருஷ்ண மடத்திற்கு சென்றார். பிரதமர் மோடி வருகையையொட்டி திருச்சி விமான நிலையம் மற்றும் ஸ்ரீரங்கம் பகுதிகளில் 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. இதனால் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் நேற்று முன்தினம் மாலை 6 மணி முதல் நேற்று பிற்பகல் 2.30 மணி வரை பக்தர்கள் தரிசனத்துக்கு தடை விதிக்கப்பட்டது. சுமார் 3800 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அதேபோல், ராமநாத சுவாமி கோயில் முழுவதும் எஸ்பிஜி பாதுகாப்பு படையினர் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டது.

இதனால் அதிகலையில் கோயில் நடை திறந்தது முதல் காலை 8 மணி வரை மட்டுமே பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். கோயில் தெற்குவாயில் பகுதியில் மட்டுமே பக்தர்கள் செல்ல அனுமதிக்கப்பட்டனர். கோயிலுக்குள் குருக்கள், அலுவலர்கள், பணியாளர்கள் என குறிப்பிட்ட நபர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டது. நேற்று இரவு ராமகிருஷ்ண மடத்தில் தங்கிய பிரதமர் மோடி இன்று காலை 9 மணிக்கு தனுஷ்கோடி செல்கிறார். தனுஷ்கோடி அரிச்சல்முனை சேது தீர்த்தம் கடல் பகுதியில் புனித நீராடி புஷ்பாஞ்சலி செய்கிறார்.

பின் அங்கிருந்து புறப்பட்டு ராமேஸ்வரம் வரும் வழியில் அமைந்துள்ள விபீஷணர் பட்டாபிஷேகம் நடைபெற்றதாக அறியப்படும் கோதண்டராமர் கோயிலுக்கு சென்று சிறப்பு பூஜைகள் செய்து சுவாமி வழிபாடு செய்கிறார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு அமிர்தா வித்யாலயா ஹெலிபேட் சென்று காலை 11.20 மணிக்கு ஹெலிகாப்டரில் மதுரை விமான நிலையம் சென்றடைகிறார். இதையொட்டி இன்று காலை 6 மணி முதல் நண்பகல் 12 மணி வரை ராமேஸ்வரம் நகரில் பொது போக்குவரத்து நிறுத்தம் செய்யப்படுகிறது. மோடி தனுஷ்கோடி செல்வதை முன்னிட்டு நேற்று காலை முதல் இரவு பகலாக ஏராளமான ஆயுதம் ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

* யானை வாசித்த மவுத் ஆர்கனை ரசித்து கேட்டார்
ஸ்ரீரங்கம் கோயிலில் உள்ள ரங்கவிலாச மண்டபம் அருகே கோயில் யானை ஆண்டாளுக்கு பழம் வழங்கி மோடி ஆசி பெற்றார். இதைத்தொடர்ந்து பிரதமர் மோடி, யானையின் தும்பிக்கையை தடவி கொடுத்தார். அப்போது யானை ஆண்டாள், மவுத் ஆர்கனை சிறிது நேரம் வாசிக்க, பிரதமர் மெய் மறந்து ரசித்து கேட்டார்.

* பாதுகாப்பு வளையத்திற்குள் மதுரை விமான நிலையம்
ராமேஸ்வரத்தில் இருந்து இன்று ஹெலிகாப்டரில் புறப்படும் பிரதமர் மோடி பகல் 12.15 மணிக்கு மதுரை விமான நிலையம் வந்து, பகல் 12.35 மணியளவில் தனி விமானம் மூலம் டெல்லி செல்கிறார். அவரது வருகையை ஒட்டி 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் மதுரை நகர் போலீஸ் கமிஷனர் லோகநாதன் தலைமையில் இரு துணை கமிஷனர்கள் மற்றும் 500 போலீசார் விமான நிலையத்தை சுற்றி பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். விமான நிலையத்திற்கு வரும் வாகனங்கள் இன்று பகல் 1 மணி வரை தீவிர சோதனைக்கு பின்னர் அனுமதிக்கப்படும். பார்வையாளர் அனுமதி முழுவதுமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. மோப்ப நாய், வெடிகுண்டு கண்டறியும் நிபுணர்கள், அதி விரைவு படையினர் பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

3.5 நிமிடங்களுக்கு ஒரு மெட்ரோ இயக்கப்படுவதாக அறிவிப்பு

தமிழ்நாட்டில் 11 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை கதீட்ரல் சாலையில் கலைஞர் நூற்றாண்டு பூங்காவை நாளை திறந்து வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்