ஸ்ரீபெரும்புதூர் ராமானுஜர் மணிமண்டபம் விரைவில் பயன்பாட்டுக்கு வரும்: அமைச்சர் சேகர்பாபு தகவல்

சென்னை: ஸ்ரீபெரும்புதூர் ராமானுஜர் மணிமண்டபத்தினை விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார். ஸ்ரீபெரும்புதூர் ஆதிகேசவ பெருமாள் மற்றும் பாஷ்யகார சுவாமி (ராமானுஜர்) கோயில் மற்றும் ராமானுஜர் மணிமண்டபத்தினை அமைச்சர்கள் சேகர்பாபு மற்றும் தா.மோ.அன்பரசன் நேற்று ஆய்வு செய்தனர், மணிமண்டபத்தினை விரைவில் பக்தர்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினர்.

பின்னர் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு நிருபர்களிடம் கூறியதாவது: ஓம் நமோ நாராயணா என்ற மூல மந்திரத்தை எடுத்து அனைத்து தரப்பட்ட மக்களுக்கும் கொண்டு சேர்த்த சமூக நீதியின் காவலர் ராமானுஜர் என்பதால் தான் கலைஞர், ராமானுஜர் பற்றிய தொடர் எழுதி அதனை தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்தார். ராமானுஜர் மணிமண்டபத்தினை முழுமையான பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கையை அமைச்சரும், சட்டப்பேரவை உறுப்பினரும் முதல்வரிடம் வைத்தனர். அதற்கு ஏற்ப இந்த இடத்தை முழுமையாக ஆய்வு செய்துள்ளோம்.

முதல் கட்டமாக இந்த இடத்தில் அர்ச்சகர் பயிற்சி பள்ளி தொடங்கிட ஏற்கனவே இரண்டு முறை விளம்பரம் தந்தோம். இதுவரை யாரும் விண்ணப்பிக்கவில்லை. ராமானுஜர் மணி மண்டபத்தில் அவரது வரலாற்றை சித்தரிக்கின்ற வகையில் புகைப்பட கண்காட்சியுடன், ஒலி ஒளி காட்சியோடு ஏற்பாடு செய்வதற்கு கோரிக்கை வைத்திருக்கிறார்கள். அது தொடர்பாக தனியார் ஆலோசகர் மூலம் 15 நாளில் வரைபடங்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இது தொடர்பாக 15 நாளில் இங்கு வருகை தந்து ஆய்வு செய்வேன்.

400 ஆண்டுகள் நடைபெறாமல் இருந்த திருவெட்டாறு ஆதிகேசவ பெருமாள் கோயில், 100 ஆண்டுகளுக்கு மேல் குடமுழுக்கு நடைபெறாமல் இருந்த 16 கோயில்களில் குடமுழுக்கை கூட நடத்திக் காட்டினார் முதல்வர் மு.க.ஸ்டாலின். இதுவரை 866 கோயில்களுக்கு குடமுழுக்கு நடத்தி ஒரு ஆன்மீகப் புரட்சியை ஏற்படுத்தி உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார். இந்த ஆய்வின்போது ஸ்ரீபெரும்புதூர் எம்எல்ஏ செல்வப்பெருந்தகை, காஞ்சிபுரம் டிஆர்ஓ வெங்கடேசன், அறநிலையத்துறை மண்டல இணை ஆணையர் வான்மதி, உதவி ஆணையர் லட்சுமிகாந்த பாரதிதாசன் உள்பட அலுவலர்கள் உடனிருந்தனர்.

Related posts

செங்கல்பட்டு அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் 10 பேர் காயம்

குமரி: போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம் வாபஸ்

போலி சான்றுகள் விற்ற வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்