ஸ்ரீபெரும்புதூர் அரசு பள்ளி வளாகத்தில் தேங்கிய மழைநீர்: மாணவர்கள் அவதி

ஸ்ரீபெரும்புதூர்: ஸ்ரீபெரும்புதூர் அரசு நடுநிலைப்பள்ளி வளாகத்தில் தேங்கியுள்ள மழைநீரை அப்புறப்படுத்த மாணவர்களின் பெற்றோர் கோரிக்கை வைத்துள்ளனர். ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சி கட்சிப்பட்டு பகுதியில் ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டுப்பாட்டில் அரசு நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை 250க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு பெய்த கன மழை காரணமாக மழைநீருடன் கழிவுநீர் கலந்து நடுநிலைப்பள்ளி வளாகம் முழுவதும் சூழ்ந்துள்ளது.

பள்ளி வளாகத்தில் இருந்து மழைநீர் வெளியேற போதுமான வடிகால் வசதி இல்லாததால் குட்டைபோல ஆங்காங்கே தேங்கிநிற்கிறது. இதனால் வகுப்பு அறையில் இருந்து கழிவறைக்கு செல்லும் மாணவ, மாணவிகள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.

மேலும் தேங்கிநிற்கும் மழைநீரால் விஷஜந்துக்கள் பள்ளி வளாகத்துக்கு குடியேறுவதோடு, மாணவர்களுக்கு டெங்கு, மலேரியா போன்ற பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இருப்பதாக பெற்றோர்கள் அச்சப்படுகின்றனர். எனவே, பள்ளி வளாகத்தில் தேங்கியுள்ள மழைநீரை அப்புறப்படுத்த ஸ்ரீபெரும்புதூர் வட்டார வளர்ச்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டுமென கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து வட்டார வளர்ச்சி அலுவலர் பாலாஜியிடம் கேட்டபோது, அரசு பள்ளி வளாகத்தில் மழைநீர் தேங்கி நிற்பது குறித்து பேரூராட்சி நிர்வாகத்திடம் தகவலளித்துள்ளோம். மழைநீரை அகற்ற நடவடிக்கை எடுத்து வருகின்றனர்” என்றார்.

Related posts

பொங்கல் பண்டிகை: ரயில் டிக்கெட் முன்பதிவு செப்.12 முதல் தொடக்கம்

காற்று மாசை கட்டுப்படுத்துவதற்காக ஜனவரி 1ம் தேதி வரை அனைத்து வகை பட்டாசுகளுக்கும் டெல்லி அரசு தடை விதிப்பு

தமிழ்நாட்டில் ரூ.2,000 கோடி முதலீடு செய்கிறது ஜேபில் நிறுவனம்