Thursday, September 19, 2024
Home » இலங்கை சிறையில் வாடும் மீனவ குடும்பங்களுக்கு வழங்கப்படும் தின உதவி தொகை ரூ.350ஆக உயர்த்தி முதலமைச்சர் உத்தரவு

இலங்கை சிறையில் வாடும் மீனவ குடும்பங்களுக்கு வழங்கப்படும் தின உதவி தொகை ரூ.350ஆக உயர்த்தி முதலமைச்சர் உத்தரவு

by Suresh

சென்னை: இலங்கை சிறையில் வாடும் மீனவ குடும்பங்களுக்கு வழங்கப்படும் தின உதவி தொகை 250 ரூபாய் என்பதை 350 ரூபாயாக உயர்த்தி வழங்கி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். மேலும் இலங்கை கடற்படையால் பறிமுதல் செய்யப்பட்ட விசைப் படகுகளின் உரிமையாளர்களுக்கான நிவாரணம் ரூ.6 லட்சமாகவும், நாட்டுப் படகு உரிமையாளர்களுக்கு வழங்கப்படும் நிவாரணத் தொகை ரூ.2 லட்சமாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

தமிழ்நாடு முதல்வரை 26.07.2024 அன்று தலைமைச்செயலகத்தில், இராமநாதபுரம், புதுக்கோட்டைதஞ்சாவூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்ட மீனவ சங்கப் பிரதிநிதிகள் சந்தித்துப் பேசினர். இச்சந்திப்பின் போது, தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தொடர்ந்து கைது செய்யப்படும் நிகழ்வு குறித்தும், அவர்களது படகுகள் பறிமுதல் செய்யப்படுவதும் குறித்தும், இதனால் அவர்களுக்கு ஏற்படும் இன்னல்களை எடுத்துரைத்தும், தங்களது கோரிக்கைகளை பரிசீலனை செய்து நிறைவேற்றி தருமாறு கேட்டுக் கொண்டனர்.

இந்தச் சந்திப்பின்போது, மீனவ சங்கப் பிரதிதிகள் பாம்பன் தூக்குப்பாலம் அருகே கால்வாய் தூர்வாரவேண்டும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களிடம் கோரிக்கை விடுத்தனர். மேலும், இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள 87 மீனவர்களையும், கைப்பற்றப்பட்டுள்ள 175 படகுகளையும் மீட்டுத்தர தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களை மீனவசங்க பிரதிநிதிகள் கேட்டுக்கொண்டனர்.

மீனவர் சங்கப் பிரதிநிதிகளின் கோரிக்கைகளை பரிவுடன் பரிசீலித்து, இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு அங்கு சிறையில் இருக்கும் மீனவர்களின் குடும்பங்களுக்கு தின உதவி தொகையாக தற்போது நாளொன்றுக்கு 250 ரூபாய் வழங்கப்பட்டு வரும் நிலையில், அவர்களது குடும்பங்களின் வாழ்வாதாரத்தினை பாதுகாத்திட தின உதவித் தொகையினை நாளொன்றுக்கு 350 ரூபாயாக உயர்த்தி வழங்கிட தமிழ்நாடு முதலமைச்சர் ஆணையிட்டுள்ளார்.

ஏற்கனவே இலங்கை கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்ட படகுகளின் உரிமையாளர்கள் நலன் கருதி, முதலமைச்சர் கடந்த 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில் இரு தவணைகளில் 151 படகுகளின் உரிமையாளர்களுக்கு நிவாரண உதவி வழங்க ஆணையிட்டார்கள். அதனடிப்படையில் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியியிலிருந்து விசைப்படகுகளுக்கு தலா 5 இலட்சம் ரூபாய் மற்றும் நாட்டுப் படகுகளுக்கு தலா 1.5 இலட்சம் ரூபாய் என மொத்தம் 6.74 கோடி ரூபாய் நிவாரணமாக வழங்கப்பட்டது.

இந்த நிலையில் தற்போது, இலங்கை கடற்படையினரால் 2018 முதல் 2023 ஆம் ஆண்டு வரை கைப்பற்றப்பட்டு அங்கு நெடுங்காலமாக உள்ள 127 மீட்க இயலாத படகுகளுக்கு கடந்த ஆண்டுகளில் வழங்கிய நிவாரண தொகையினை விசைப்படகுகளுக்கு ரூ.5 லட்சத்திலிருந்து ரூ.6 லட்சமாக உயர்த்தியும், நாட்டுப்படகுகளுக்கு வழங்கப்பட்டு வந்த 1.5 இலட்ச ரூபாயை 2 இலட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்கிட தமிழ்நாடு முதலமைச்சர் ஆணையிட்டுள்ளார். இதனால் மீனவர்கள் ரூ.6.82 கோடி அளவிற்கு பயனடைவார்கள்.

மேலும் பாம்பன் தூக்குப்பாலம் அருகே தூர்வாரும் கோரிக்கையினை ஏற்று தேவையான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு விரிவானதிட்ட அறிக்கை தயார் செய்து அதன் அடிப்படையில் தக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளவும் முதலமைச்சர் ஆணையிட்டுள்ளார். இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள 87 மீனவர்களையும், கைப்பற்றப்பட்டுள்ள 175 படகுகளை நேரடியான நிலையான தூதரக நடவடிக்கை மூலமாக மீட்டுத்தரவும், கைப்பற்றப்பட்டுள்ள படகுகளை ஆய்வு செய்ய குழுவினரை அனுமதிக்கவும், இலங்கை சிறையில் வாடும் தமிழக மீனவர்களை, மீனவச் சங்கப் பிரதிநிதிகள் சந்திக்கவும், கூட்டுப் பணிக்குழு கூட்டத்தினை நடத்திடவும் முதலமைச்சர் இந்தியப் பிரதமர் அவர்களையும், ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சர் அவர்களையும் தொடர்ந்து வலியுறுத்திவருகிறார்.

எனவே, இந்த சூழ்நிலையின் தீவிரத் தன்மையை கருத்தில் கொண்டு, நாடாளுமன்றத்தில் இப்பொருள் குறித்து பேசிடவும், தமிழ்நாட்டைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடங்கியகுழு, விரைவில் ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சர் அவர்களை நேரில் சந்தித்தும் இப்பிரச்சனைக்கு நிரந்தர தீர்வுகாண வலியுறுத்துமாறு தமிழ்நாடு முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.

மீனவர்களுடான சந்திப்பின் போது, எஸ். ரகுபதி. சட்டத்துறை அமைச்சர், அனிதாஆர்.இராதாகிருஷ்ணன், மீன்வளம்- மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர், இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் காதர்பாஷா முத்துராமலிங்கம், தலைமைச்செயலாளர் சிவ்தாஸ்மீனா. கால்நடைபராமரிப்பு, பால்வளம் மற்றும் மீன்வளம், மீனவர்நலத்துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் டாக்டர் கே. கோபால், தமிழ்நாடு மீன் வளர்ச்சிக் கழகத்தின் தலைவர் ந. கௌதமன். மீன்வளத்துறை இயக்குநர் ஆர். கஜலட்சுமி. மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.

You may also like

Leave a Comment

18 − 5 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi