இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட மீனவர்களையும், படகுகளையும் உடனடியாக விடுவிக்க நடவடிக்கை: ஒன்றிய வெளியுறவு துறை அமைச்சருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்

சென்னை: இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட அனைத்து மீனவர்களையும், அவர்களது மீன்பிடி படகுகளையும் உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஒன்றிய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். ஒன்றிய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள கடிதம்: இலங்கை கடற்படையினரால் தமிழ்நாடு மீனவர்களும் அவர்களது மீன்பிடி படகுகளும் தொடர்ந்து சிறைபிடிக்கப்படுவது குறித்து ஆழ்ந்த வேதனையை தெரிவித்துக் கொள்கிறேன்.

நாகப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடந்த 13ம் தேதி கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற 10 மீனவர்களையும், அவர்களின் விசைப்படகையும் இலங்கை கடற்படையினர் 15ம் தேதி சிறைபிடித்தனர். மற்றொரு சம்பவத்தில் ராமநாதபுரம், பாம்பன் பகுதியை சேர்ந்த 18 மீனவர்களையும், அவர்களது 2 விசைப்படகுகளையும் கடந்த 16ம் தேதி (நேற்று முன்தினம்) இலங்கை கடற்படையினர் சிறைபிடித்துள்ள சம்பவம் கவலை அளிக்கிறது. கடந்த மூன்று நாட்களில் இலங்கை கடற்படையினர் தமிழ்நாடு மீனவர்களை அடுத்தடுத்து சிறைபிடித்துள்ளனர். இலங்கை கடற்படையினரின் இத்தகைய கைது நடவடிக்கைகள் மீன்பிடி தொழிலை மட்டுமே தங்கள் வாழ்வாதாரமாக நம்பியுள்ள மீனவ சமூதாயத்தினரிடையே பாதுகாப்பற்ற சூழலை உருவாக்கியுள்ளது.

இலங்கை கடற்படையினரின் சிறைபிடிப்பு நடவடிக்கைகளில் எந்த தளர்வும் இருப்பதாக தெரியவில்லை. அவர்களின், இத்தகைய தன்னிச்சையான கைது நடவடிக்கைகளை தடுத்திட இலங்கை அரசுக்கு வலியுறுத்த வேண்டும். இலங்கை கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து படகுகளையும் விடுவிக்க தெளிவான காலக்கெடுவை நிர்ணயிக்க வேண்டும். இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட அனைத்து மீனவர்களையும், அவர்களது மீன்பிடி படகுகளையும் உடனடியாக விடுவிக்க இலங்கை அரசுடன் இந்த விவகாரத்தை வலுவாக எடுத்துச் செல்ல வேண்டும். கடந்த மூன்று நாட்களில் இலங்கை கடற்படையினர் தமிழ்நாடு மீனவர்களை அடுத்தடுத்து சிறைபிடித்துள்ளனர்.

Related posts

கேரளாவில் நிபா வைரஸ் பரவல்: குமரி எல்லையில் மருத்துவ குழு தீவிர சோதனை

அமீர் உள்பட 12 பேர் மீது குற்றப்பத்திரிகை; ஜாபர் சாதிக் வழக்கில் திடீர் திருப்பம்: அமலாக்கத்துறை அதிரடி

ராமன்பிள்ளை தெருவில் பள்ளங்கள் சீரமைக்கப்படுமா?