இலங்கை அதிபர் தேர்தல் ரணில் விக்ரம சிங்கேவுக்கு ஆதரவளித்தால் ஒழுங்கு நடவடிக்கை: ராஜபக்சே கட்சி எச்சரிக்கை

கொழும்பு: இலங்கை அதிபர் தேர்தலில் ரணில் விக்ரம சிங்கேவுக்கு ஆதரவளிப்போர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என ராஜபக்சே கட்சி எச்சரித்துள்ளது. இலங்கையில் வரும் செப்டம்பர் 21ம் தேதி இலங்கை அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் அடுத்த மாதம் 15ம் தேதி தொடங்க உள்ளது. இந்த தேர்தலில் தற்போதைய அதிபர் ரணில் விக்ரம சிங்கே சுயேச்சை வேட்பாளராக மீண்டும் போட்டியிட உள்ளார். மேலும் ராணுவ முன்னாள் தலைமை தளபதி சரத் பொன்சேகா, எதிர்க்கட்சியான சமகி ஜன பலவேகய தலைவர் சஜித் பிரேமதாச, சுதந்திர கட்சி தலைவர் விஜயதாச ராஜபக்சே உள்ளிட்டோரும் அதிபர் தேர்தலில் போட்டியிடுகின்றனர்.

அதிபர் தேர்தலில் ரணில் விக்ரம சிங்கேவுக்கு ஆதரவளிக்க வேண்டும் என மகிந்த ராஜபக்சே தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனா கட்சி உறுப்பினர்கள் கட்சி தலைமைக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றனர். ஆனால், ரணில் விக்ரம சிங்கேவை ஆதரிக்க முடியாது. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனா கட்சி சார்பில் வேட்பாளர் விரைவில் அறிவிக்கப்படுவார் என அக்கட்சி திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. இதனிடையே ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனா கட்சி உறுப்பினர்கள் ரணில் விக்ரம சிங்கேவை அவரது அதிகாரப்பூர்வ இல்லத்தில் சந்தித்து பேசியதாக தகவல்கள் வௌியாகி உள்ளன. இதுகுறித்து ராஜபக்சே கட்சி பொதுசெயலாளர் சாகர கரியவம்சம், “ரணில் விக்ரம சிங்கேவுக்கு ஆதரவளிக்கும் உறுப்பினர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்” என எச்சரித்துள்ளார்.

Related posts

புரட்சி பாரதம் கட்சி தலைவராக பூவை எம்.ஜெகன் மூர்த்தி 22 ஆண்டுகள் நிறைவு: மாபெரும் கிரிக்கெட் போட்டி

வியாட்நாமில் யாகி புயல் தாக்கியதில் 14 பேர் பலி; 176 பேர் காயம்

குஜராத்தில் 4 குழந்தைகள் உட்பட 12 பேர் மர்ம காய்ச்சலால் பலி