இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களுக்கு ரூ.10 கோடி அபராதம்: நீதிமன்ற உத்தரவால் அதிர்ச்சி

ராமேஸ்வரம்: இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 45 பேருக்கு ரூ.10 கோடி அபராதம் விதித்து புத்தளம் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளது. ராமேஸ்வரம் அருகே பாம்பன் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடந்த ஆக. 8ம் தேதி அலெக்ஸ், ரஞ்சன், சார்லஸ், சூசை மார்ட்டின் ஆகியோருக்கு சொந்தமான நாட்டுப்படகுகளில் மீனவர்கள் கடலுக்கு சென்றனர். மீன் பிடித்து கொண்டிருந்தபோது 4 படகுகளில் இருந்த 35 மீனவர்களை, இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். மீனவர்களின் மீது பல்வேறு வழக்குகள் போடப்பட்டு 35 மீனவர்களும் புத்தளம் மாவட்டம் வாரியாபொல சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். மீனவர்களின் காவல் முடிந்ததால் நேற்று 35 மீனவர்களும் புத்தளம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

வழக்கை விசாரித்த நீதிபதி விமலரத்னா, நீளமான ஒரு நாட்டுப்படகில் இருந்த 12 மீனவர்களுக்கு இலங்கை மதிப்பில் தலா ரூ.35 லட்சம் அபராதமும், மற்ற மூன்று நாட்டுப்படகில் இருந்த 23 மீனவர்களுக்கு தலா ரூ.10 லட்சம் அபராதம் விதித்தார். அபராதத்தை கட்டத் தவறினால், மூன்று மாதம் சிறை தண்டனை விதித்து புத்தளம் நீதிமன்றம் உத்தரவிட்டது. தூத்துக்குடி மாவட்டம் தருவைகுளத்தில் இருந்து 2 விசைப்படகுகளில் மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் 22 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். இவர்களில் 12 பேருக்கு கடந்த 3ம் தேதி நீதிபதி அயோனா விமலரத்ன, தலா ரூ.42 லட்சம் (இலங்கை பணம் ரூ.1.5 கோடி) அபராதம் விதித்து தீர்ப்பு கூறினார்.

மீதி 10 பேர் மீதான வழக்கு விசாரணையின் போது, தூத்துக்குடியில் உள்ள படகு உரிமையாளரையும் சேர்க்க வேண்டும் என்று இலங்கை மீன்வளத்துறை பரிந்துரைத்தது. இதையடுத்து ஒத்திவைக்கப்பட்ட இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அவர்களுக்கு தலா ரூ.35 லட்சம் (மொத்தம் ரூ.3.5 கோடி) அபராதம் விதித்து நீதிபதி உத்தரவிட்டார். தீர்ப்பை ஏற்க மறுத்த தருவைகுளம் மீனவர்கள் 10 பேரும் நீதிமன்ற வாயிலில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து புத்தளம் போலீசார் அவர்களை எச்சரித்து மீண்டும் வாரியாபொல சிறைச்சாலையில் அடைத்துள்ளனர். அவர்களை அபராதம் இன்றி விடுவிக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள், மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related posts

சாம்சங் தொழிலாளர்களுக்கு கொரியா தொழிலாளர் சங்கம் ஆதரவு

விரிவாக்க பணிகள் விரைவில் தொடங்க முடிவு வடசேரி பஸ் நிலையத்தில் காய்கறி சந்தைக்கான இடம் ஆய்வு: உழவர் சந்தை நிலத்தை வாடகைக்கு பெற திட்டம்

கொலீஜியம் பரிந்துரை செய்தும் நீதிபதிகள் நியமன தாமதத்திற்கு வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளதா?.. ஒன்றிய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் சரமாரி கேள்வி