இலங்கைக்கு இந்தியா கொடுத்த நெருக்கடியால் மாலத்தீவை நோக்கி பயணிக்கும் சீன ஆராய்ச்சி கப்பல்: மாலத்தீவு உடனான உறவுகள் பாதித்த நிலையில் திருப்பம்

புதுடெல்லி: கடந்த நவம்பரில் மாலத்தீவு அதிபராக முகம்மது முய்சு பதவியேற்ற பிறகு இந்தியாவுக்கும் மாலத்தீவுக்கும் இடையிலான உறவு மோசமடைந்தது. மாலத்தீவில் பணியாற்றும் 88 இந்திய வீரர்களை மார்ச் 15ம் தேதிக்குள் இந்தியா திரும்பப் பெற வேண்டும் என்று மாலத்தீவு அரசு கேட்டுக் கொண்டுள்ளது. இந்திய பிரதமர் மோடிக்கு எதிராக மாலத்தீவு அமைச்சர்கள் தெரிவித்த கருத்தும் சர்ச்சையானது. இதையடுத்து அவர்களை அதிபர் முகம்மது முய்சு சஸ்பெண்ட் செய்தார். இவ்விகாரங்களுக்கு மத்தியில் இந்தியாவுக்கும் மாலத்தீவுக்கும் இடையிலான தூதரக உறவுகள் மோசமடைந்துள்ள நிலையில், சீன நாட்டின் ஆராய்ச்சிக் கப்பல் ஒன்று இந்தியப் பெருங்கடல் வழியாக மாலத்தீவுக்கு செல்வதாக கூறப்படுகிறது.

மாலத்தீவு செல்வதற்காக ‘சியாங் யாங் ஹாங் 03’ என்ற கப்பல், இந்திய பெருங்கடல் பகுதிக்குள் நுழைவதாகவும், இந்தக் கப்பல் வரும் 30ஆம் தேதி மாலத்தீவின் தலைநகர் மாலேவை வந்தடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சீன கப்பலை தனது துறைமுக எல்லையில் அனுமதிப்பதற்கு இலங்கை தடை விதித்தது. சமீபகாலமாக சீன கப்பல் இலங்கையின் கடற்பகுதியில் ஆய்வு நடத்துவதற்கு இந்தியா அரசு எதிர்ப்பு தெரிவித்து வந்தது. அதன் தொடர்ச்சியாக ‘சியாங் யாங் ஹாங் 03’ என்ற கப்பல் இந்திய பெருங்கடலின் சர்வதேச எல்லையின் வழியாக மாலத்தீவு செல்வதாக உளவுத்துறை ஆராய்ச்சியாளர் டாமியன் சைமனை மேற்கோள் காட்டி செய்தி வெளியாகி உள்ளது. இந்த தகவலை இந்திய ராணுவ அதிகாரி ஒருவர் உறுதி செய்துள்ளதாக கூறப்படுகிறது. இருந்தாலும் சீன கப்பலின் பாதை கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், மாலத்தீவு அதிபர் அலுவலகம், இந்தியாவின் வெளியுறவு அமைச்சகம் மற்றும் சீனாவின் பாதுகாப்பு அமைச்சகம் இந்த விவகாரம் குறித்து இதுவரை பதிலளிக்கவில்லை என்று ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. சீன கப்பல் மூலம் சேகரிக்கப்பட்ட தரவுகளானது, அந்நாட்டின் ராணுவ நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படலாம் என்று இந்திய பாதுகாப்பு அதிகாரியை மேற்கோள் காட்டி ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. இந்தியா பாதுகாப்புக் கவலைகளை முன்வைத்ததை அடுத்து, 2022ம் ஆண்டு முதல் இலங்கை துறைமுகங்களுக்குள் சீன கப்பல்கள் நுழைவதற்கு அந்நாடு அனுமதி மறுத்துள்ளது. முன்னதாக கடந்த 2019ம் ஆண்டில் சர்வதேச பொருளாதார மண்டலத்தில் அனுமதியின்றி நுழைந்த சீன ஆராய்ச்சிக் கப்பலை இந்தியா வெளியேற்றியது என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

பீகாரில் கொட்டும் கனமழையால் 10 நாளில் 4 பாலம் இடிந்து விழுந்தது: எதிர்கட்சிகள் கடும் கண்டனம்

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு வழக்கில் ஜார்க்கண்டில் மேலும் 2 பேரை சி.பி.ஐ. கைது செய்துள்ளது

மதுவிலக்கு திருத்தச்சட்டம் நாளை சட்டப்பேரவையில் அறிமுகம் செய்யப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு