இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.108 கோடி போதைப்பொருள் தனுஷ்கோடி கடலில் பறிமுதல்: 4 பேர் கைது

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் அருகே மண்டபம் மற்றும் பாம்பனில் இருந்து மன்னார் வளைகுடா கடல் வழியாக படகில் போதைப்பொருள் கடத்த உள்ளதாக மத்திய வருவாய் புலனாய்வுத்துறை சென்னை மண்டல அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து மண்டபத்தில் உள்ள இந்திய கடலோர காவல் படையினருடன் கப்பலில் நேற்று முன்தினம் இரவு, மன்னார் வளைகுடா கடல் பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். நள்ளிரவில் தனுஷ்கோடி தென்பகுதி மன்னார் வளைகுடா கடலில் சந்தேகப்படும்படி இலங்கையை நோக்கி சென்ற நாட்டுப்படகை துரத்தி பிடித்தனர்.

படகை சோதனை செய்து படகின் அடியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 சாக்கு பைகளில் உள்ளே 111 பாக்கெட்களில் 99 கிலோ பழுப்பு நிறத்தில் பசை போன்ற ஹாசிஸ் (கஞ்சா ஆயில்) போதைப்பொருள் இருந்தது. அதை பறிமுதல் செய்த போலீசார் படகில் இருந்த 3 பேரிடம் விசாரித்தனர். அதில், போதைப்பொருளை பாம்பனில் இருந்து படகில் கடத்திச் சென்றதாகவும், நடுக்கடலில் இலங்கையில் இருந்து படகில் வரும் நபர்களிடம் கொடுப்பதற்கு திட்டமிட்டு இருந்ததாகவும் அவர்கள் தெரிவித்தனர். அவர்கள் கொடுத்த தகவலின்பேரில் நேற்று காலை பாம்பன் அக்காள்மடம் சேதுபதி நகரை சேர்ந்த கடத்தல் நாட்டுப்படகு உரிமையாளர் ரெமிஸ்டன் (32) வீட்டில் சோதனை செய்தனர். விசாரணையில் இவர், இங்கிருந்து இலங்கைக்கு போதைப்பொருள் கடத்துவதில் முக்கிய நபர் என்பதும் தெரியவந்தது. தொடர்ந்து ரெமிஸ்டன் மற்றும் படகில் பிடிபட்ட 3 பேர் என 4 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

Related posts

மக்களுக்கு சேவையாற்றுவோரை கவுரவிக்கும் வகையில் விஜயகாந்த், ஜி.விஸ்வநாதன் உள்ளிட்ட 9 பேருக்கு விருது: எஸ்டிபிஐ கட்சி அறிவிப்பு

பாடப்புத்தகத்தில் நாகப்ப படையாட்சியின் வரலாறு இடம்பெற நடவடிக்கை எடுக்க கோரிக்கை

அன்புமணி கோரிக்கை ஆன்லைன் சூதாட்டத்திற்கு அரசு தடை பெற வேண்டும்