இலங்கைக்கு எதிரான 2வது டி20 போட்டி இந்திய அணி அபார வெற்றி

பல்லெகெலே: இலங்கை அணிக்கு எதிரான 2வது டி20 போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது. பல்லெகெலே சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நேற்று இரவு நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் சூரியகுமார் யாதவ் முதலில் பந்துவீச முடிவு செய்தார். இந்திய அணியில் தசைப்பிடிப்பால் அவதிப்படும் கில்லுக்கு பதிலாக சஞ்சு சாம்சன் சேர்க்கப்பட்டார். இலங்கை அணியில் தில்ஷன் மதுஷங்கா நீக்கப்பட்டு, ஆல் ரவுண்டர் ரமேஷ் மெண்டிஸ் இடம் பெற்றார்.

மழை காரணமாக 45 நிமிட தாமதத்துக்குப் பிறகு, பதும் நிசங்கா – குசால் மெண்டிஸ் இணைந்து இலங்கை இன்னிங்சை தொடங்கினர். குசால் மெண்டிஸ் 10 ரன்னில் வெளியேற, நிசங்கா – குசால் பெரேரா ஜோடி 2வது விக்கெட்டுக்கு 54 ரன் சேர்த்தது. நிசங்கா 32 ரன் எடுத்து பிஷ்னோய் பந்துவீச்சில் எல்பிடபுள்யு ஆனார். அடுத்து பெரேரா – கமிந்து மெண்டிஸ் இணைந்து 3வது விக்கெட்டுக்கு 50 ரன் சேர்த்தனர்.

கமிந்து 26 ரன், குசால் பெரேரா 53 ரன் (34 பந்து, 6 பவுண்டரி, 2 சிக்சர்) விளாசி ஹர்திக் பாண்டியா வேகத்தில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். தசுன் ஷனகா, வனிந்து ஹசரங்கா இருவரும் ரவி பிஷ்னோய் சுழலில் அடுத்தடுத்து டக் அவுட்டாக, இலங்கை திடீர் சரிவை சந்தித்தது. கேப்டன் சரித் அசலங்கா 14, ரமேஷ் மெண்டிஸ் 12 ரன்னில் வெளியேற, மஹீஷ் தீக்‌ஷனா 2 ரன் எடுத்து அக்சர் படேல் சுழலில் கிளீன் போல்டானார்.
இலங்கை அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 161 ரன் குவித்தது. மதீஷா பதிராணா 1 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இந்திய பந்துவீச்சில் ரவி பிஷ்னோய் 4 ஓவரில் 26 ரன் விட்டுக்கொடுத்து 3 விக்கெட் கைப்பற்றினார். ஹர்திக் பாண்டியா, அர்ஷ்தீப் சிங், அக்சர் படேல் தலா 2 விக்கெட் வீழ்த்தினர். இதைத் தொடர்ந்து, 20 ஓவரில் 162 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களமிறங்கியது. ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன் ஆட்டத்தை தொடங்கினர். 3 பந்துகள் மட்டும் வீசிய நிலையில் மழை மீண்டும் பெய்தது. இதனால், ஆட்டம் நிறுத்தப்பட்டது. தொடர்ந்து மழை பெய்ததால் டிஎல்எஸ் விதிப்படி ஆட்டம் 7 ஓவர்களாக குறைக்கப்பட்டு 78 ரன்கள் இந்திய அணிக்கு வெற்றி இலக்காக நிர்ணயக்கப்பட்டது. பின்னர் ஆடிய இந்திய அணி 6.3 ஓவர்களில் 3 விக்கெட்களை இழந்து 82 ரன்களை எடுத்து வெற்றிபெற்றது.

Related posts

பாரா ஒலிம்பிக்கில் இன்றிரவு நிறைவு விழா; 29 பதக்கத்துடன் இந்தியா16வது இடம்; ஈட்டி எறிதலில் தங்கம் வென்ற நவ்தீப் சிங்

வெளிநாடு சென்று இந்தியா திரும்விய இளைஞர் ஒருவருக்கு குரங்கம்மை பாதுப்புக்கான அறிகுறி இருப்பது கண்டுபிடிப்பு

விக்கிரவாண்டியில் விஜய் கட்சி மாநாடு நடத்த காவல் துறை அனுமதி