ஸ்ரீ கிருஷ்ண அமுதம் – 79 (பகவத்கீதை உரை)

நீதிபதியும் நானே, வக்கீலும் நானே!

யத்ஸாங்க்யை ப்ராப்யதே ஸ்தானம் தத்யோகைரபி கம்யதே
ஏகம் ஸாங்க்யம் ச யோகம் ச ய பச்யதி யபச்யதி (5:5)

‘‘அர்ஜுனா, ஞானயோகிகள் அடையும் பரதர்மத்தை, நிஷ்காம கர்மயோகிகளும் அடைகிறார்கள். ஆகவே ஞான யோகம், நிஷ்காம கர்ம யோகம் இரண்டும் தரும் பலன் ஒன்றே என்று அறிக.’’ சுய அறிவினால் இயற்கையினுள் புதைந்திருக்கும் உண்மையை அறிய முயல்வது ஞான யோகம். இதன் மூலம், எதிலும் பற்று வைப்பதே எல்லாத் துன்பங்களுக்கும் காரணம் என்பதை உணரமுடியும். இதையே நிஷ்காமத்துடன் கர்மத்தை இயற்றுபவர்களும் உணரமுடியும். ஆக, இந்தப் பரதர்மம், இரண்டு முறையிலும் ஒன்றாகவே விளங்குகிறது.

வித்தியாசம் எப்போது தெரிகிறது? உதாரணமாக, ஒரு காட்சியைக் கண்கள் பார்க்கின்றன. ஆனால் கண்ணில் படும் காட்சி உண்மையிலேயே அங்கே நிலவுவதுதானா? ‘எங்கேயோ பராக்கு பார்த்துக் கொண்டிருக்கிறான்’ என்று ஒரு மாணவனை, அவன் பாடத்தில் முழு கவனம் செலுத்தாததைக் குறிப்பிட்டு ஒரு ஆசிரியர் சொல்வார். அதாவது அவன் ஆசிரியர் பாடம் நடத்துவதைப் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறான். ஆனால் ‘கவனிக்கவில்லை’. இதுதான் உண்மை.

கண்ணுக்கு, பார்ப்பதற்கான நோக்கம் எதுவும் கிடையாது. அது ஒரு கண்ணாடி மாதிரி. எதிரே நடப்பதைக் காட்டும். ஆனால் அது எதைக் காட்டுகிறது என்பதைப் புரிந்துகொள்வதுதான் நோக்கமாக, கவனமாக அமைகிறது. உணர்வுகளால் மனம் தடுமாறும்போது, இந்திரியங்கள் தத்தமது இயல்பான பணிகளைச் செய்தாலும் அதில் முழுமையிருப்பதில்லை.

கண்களுக்கு 180 டிகிரி கோணத்தில் பார்க்கும் சக்தி இருக்கிறது. அதாவது இடது கோடியிலிருந்து ஆரம்பித்து ஒரு அரை வட்டமாக, மேலே, பிறகு வலது கோடிவரை, பிறகு கீழே, மீண்டும் இடதுகோடிவரை என்று பார்வையின் வீச்சு இருக்கிறது. அதாவது இடது முதல் வலதுவரை 180 டிகிரி, மேலிருந்து கீழே வரை 180 டிகிரி. இந்த வட்டத்துக்குள் நிகழும் எல்லா காட்சிகளையும் கண்கள் பார்க்கத்தான் செய்கின்றன, ஆனால், எதைச் சரியாகப் ‘பார்க்கின்றன’? எதைப் பார்க்கவேண்டும் என்ற நோக்கம் இருக்கிறதோ, அதை மட்டும் பார்க்கின்றன.

ஒரு பொருள் காணாமல் போய்விட்டது. அதைத் தேடுகிறோம். தேடும் பொருள் தவிர வேறு எத்தனையோ பொருட்கள் இருக்கின்றன. ஆனால் கண்கள் அவற்றைப் பார்க்கின்றனவா? அவற்றின் இப்போதைய நோக்கம் காணாமல் போன பொருளைக் கண்டடைவதுதான். அதனால் மற்ற பொருட்கள் எதுவும் கண்ணில் ‘படாமல்’ போகின்றன. தேடிய பொருள் கிடைத்துவிட்டால், அப்போதும், அந்தப் பொருள் மட்டும்தான் கண்களில் படுகின்றதே தவிர, பிற பொருட்கள் படுவதில்லை.

இயற்கையினுள் புதைந்திருக்கும் உண்மை இதுதான். அதாவது நாம் கண்களால் காண்பதில்லை; எண்ணத்தால் காண்கிறோம்.ராமதாசர் ராமாயணச் சொற்பொழிவு நிகழ்த்திக் கொண்டிருந்தார். காலை வேளைகளில் அவர் ராமாயணம் எழுதுவார், மாலை வேளைகளில் அதையே, அந்தப் பகுதி மக்களுக்குச் சொற்பொழிவாக நிகழ்த்துவார். ராமதாசர் ராமாயண நிகழ்வுகளை நேரில் பார்த்தவரில்லை; ஆனாலும் ராமாயணத்தை அறிந்திருந்தவர். அந்த ராமாயணத்தைத் தன் சொந்த சொற்களால் மீண்டும் எழுதியவர் அவர்.

ஆனால், ராமாயணக் காட்சிகள் ஒவ்வொன்றையும் அவர் வர்ணிக்கும்போது, அதை நேரில் கண்டவர்கூட அத்தனை தத்ரூபமாக உணர்ந்திருக்க முடியாது, அப்படி நெகிழ்ச்சியுடன் வர்ணிப்பார். அந்த உபந்யாசத்தைக் கேட்கும் மக்கள் அதே நெகிழ்ச்சியுடன் உணர்ச்சிவசப்பட்டு மெய்மறந்திருப்பார்கள்.அந்தப் பார்வையாளர்களிடையே அந்த ராமாயணக் காட்சிகளில் பலவற்றை நேரில் கண்ட ஒருவரும் இருந்தார். ஆமாம், அனுமன்தான் அவர். ராமனை சந்தித்தது முதல், அவருடைய பட்டாபிஷேகம்வரை கூடவே இருந்து ராமனுடைய ஒவ்வொரு அசைவையும் கவனித்தவர். ஆதலால் அவர் ராமதாசரின் வர்ணனையில் அப்படியே மூழ்கிப்போனார். நெக்குருகினார். கண்ணீர் பெருக்கினார்.

ஆனால் ஒரு கட்டத்தில் அவர் முகம் சுளித்தார். ராமதாசரின் வர்ணனை உண்மைக்குப் புறம்பாக இருந்தது. அந்தக் காட்சி, அனுமன் அசோகவனத்துக்குப் போனதை விவரித்தது. அங்கே அற்புதமான இயற்கை செழிப்பைப் பார்த்தான் அனுமன். வெகு பரவலாக நிரவியிருந்த வெள்ளை நிற மலர் களைப் பார்த்து இப்படி இயற்கை வளம் செறிந்த ஒரு நாட்டு மன்னன், அநியாயமாக மாற்றான் மனைவிமீது இச்சை கொண்டானே என்று வருந்தினான்.

இந்த கட்டத்தில் கூட்டத்திலிருந்து சற்றுக் கோபமாகவே எழுந்தான் அனுமன். ‘‘நிறுத்துங்கள், ராமதாசரே, உங்கள் வர்ணனை பொய்யானது. நீங்கள் தவறான தகவலைத் தருகிறீர்கள்,’’ என்றான். ‘‘இல்லை,’’ மறுத்தார் ராமதாசர். ‘‘நான் மிகச் சரியான தகவலைத்தான் தருகிறேன். இதைத் தவறு என்று சொல்ல நீ யார்?’’ என்று கோபமாகவே கேட்டார்.

‘‘நான் அனுமன். ஸ்ரீராமனுடனேயே இருந்தவன். அவர் வைகுந்தம் ஏகிய பிறகு, அவரால் சிரஞ்சீவியாக ஆசியளிக்கப்பட்டதால் நான் என்றென்றும் இந்த உலகில் சஞ்சரித்தபடி, ராமகாதை எங்கெல்லாம் சொல்லப்படுகிறதோ, அங்கெல்லாம் சென்று உள்ளம் குளிர கேட்டுக்கொண்டிருக்கிறேன். ராமன் என்னுடனேயே, எனக்குள்ளேயே இருப்பதாக நான் உணர்கிறேன். ஆனால் எங்கெல்லாம் தவறாக ராமாயணம் சொல்லப்படுகிறதோ அங்கே நான் திருத்துவதும் வழக்கம். அந்தவகையில் நீங்கள் வர்ணித்த அசோகவனம், நான் பார்த்ததுபோல இல்லை. நீங்கள் அதைப் பார்க்காததால் கற்பனையாக, தவறாக வர்ணிக்கிறீர்கள் போலிருக்கிறது,’’ அனுமனும் கோபமாகவே சொன்னான்.

‘‘நீ பார்த்ததற்கும், நான் வர்ணிப்பதற்கும் என்ன வித்தியாசம்?’’

‘‘அசோகவனத்தில் நான் அனைத்தும் சிவப்பு நிற மலர்களாகத்தான் பார்த்தேன். ஆனால் நீங்களோ வெண்மை நிற மலர்கள் என்று சொல்கிறீர்கள். இது பொய்.’’
‘‘நான் வர்ணிப்பதுதான் நிஜம், அவை அனைத்தும் வெண்மைநிற மலர்கள்தான், அப்படித்தான் வால்மீகியார் எழுதியிருக்கிறார். அவர் தவறாக வர்ணித்தார் என்று எடுத்துக்கொள்ள முடியுமா?’’ ராமதாசர் தொடர்ந்து தன் நிலையை உறுதிபடுத்தினார்.

அதேசமயம் இருவர் முன்னாலும் ஸ்ரீராமர் பிரத்யட்சமானார். அந்தப் பரவச அனுபவத்தில் திளைப்பதைவிட, யாருடைய கருத்து சரியானது என்ற ஆவல் அதிகம் இருந்ததால் அவரிடமே நியாயம் கேட்டார்கள்.ராமர் வழக்கமான மென்னகையுடன், ‘‘அனும, கவி ராமதாசர் சொல்வதுதான் சரி,’’ என்றார். அதைக் கேட்டுக் குழம்பிய அவனிடம், ‘‘நீ அசோகவனத்தில் பார்த்தவையெல்லாம் வெண்ணிற மலர்களே. ஆனால், சீதையை சிறைவைத்து விட்டானே என்று ராவணன் மீது உனக்கிருந்த கோபம் உன் கண்களை ரத்தச் சிவப்பாக்கி விட்டது. அதனால்தான் அந்த மலர்களெல்லாம் உனக்கு சிவப்பாகத் தெரிந்தன,’’ என்று விளக்கம் அளித்தார்.

அனுமன் சமாதானமானான்; ராமதாசர் தான் தவறாக வர்ணிக்கவில்லை என்று நிம்மதி அடைந்தார்.ஆனால் கண்கள் சிவப்பதால் வெண்ணிற மலர்கள் எல்லாம் சிவப்பு வண்ணத்தில் தோன்றுமா என்ன, என்று யதார்த்தம் பேசத் தோன்றும்தான். இங்கே நாம் கவனிக்க வேண்டியது கண்கள் பார்த்ததையல்ல, அதன் நோக்கத்தை. ‘கண்மூடித்தனமான கோபம்’ என்று சொல்கிறோமே, அதைத்தான் அனுமன் அன்று அடைந்திருந்தான். அதனால் இயற்கையெல்லாம் முரண்பட்டே அவனுக்குத் தெரிந்திருக்கிறது!

பக்கத்து வீட்டு ஜன்னல் கண்ணாடி அழுக்கேறி, மங்கலாக இருக்கிறது. ஏன் இத்தனை அசுத்தமாக வீட்டை வைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்றுகூட நினைக்கத் தோன்றுகிறது. ஆனால் ஒரு கணம், நாம் நம் வீட்டின் எந்த ஜன்னல் கண்ணாடி வழியாகப் பார்க்கிறோமோ, அதை நம் விரல் நகத்தால் சுரண்டினால், அழுக்கு நம் ஜன்னல் கண்ணாடியிலேயே இருப்பதை நம்மால் உணர முடியும். பக்கத்து வீடு சுகாதாரமற்று இருக்க வேண்டும் என்ற குரோதமான எண்ணமே, நம் வீட்டு ஜன்னல் சுத்தமாக இல்லாததைக் கவனிக்க அனுமதிக்கவில்லை!

இதைத்தான் கிருஷ்ணன் சொல்கிறார். நிஷ்காம கர்மம், கர்ம சந்நியாசம் இரண்டினாலும் கிடைப்பது ஒரே பரம ஸ்திதிதான். பார்வையின் கோணத்தில் எந்த குறுக்கீடும் இல்லாதிருந்தால், காணும் காட்சியில் எந்தத் தடையும் இல்லாமல் இருந்தால், பார்த்தவை பார்த்தபடிதான் இருக்கும். ஆனால் புலனின் நோக்கம் மாறுபட்டிருந்தால், புலனின் செய்கையில் முழுமை இருக்காது. அதாவது கண்களால் உள்ளதை உள்ளபடி காண முடியாது.

கர்மத்தை இயற்றும்போது, அதைச் சரியாக ஆரம்பித்து சரியாக முடிக்க வேண்டும். இந்தப் பக்குவம் எப்போது வரும்? எந்தவகை கர்மாவினாலும் விளையக் கூடிய சாதகம் மற்றும் பாதகம் இரண்டையும் ஒன்றுபோல் கருதும்போதுதான். அதாவது நற்செயலுக்குப் பாராட்டு கிடைக்காததையும், தவறுக்கு கண்டனம் கிடைப்பதையும் ஒன்றுபோலக் கருதும் மனஉறுதி வரும்போதுதான்.

இதில் விசாரம் எங்கே வருகிறதென்றால், தன் கோணத்திலேயே பிறரைக் காணும்போதுதான். தான் பிறருடைய நற்செயல்களை நாம் எப்படிப் பாராட்டுகிறோமோ, அதேபோல தன்னையும் பிறர் பாராட்ட வேண்டும் என்று எதிர்பார்க்கும் போதுதான்; இதற்கு மாறாக பிறர் தவறைத் தான் கண்டிப்பதுபோல, தன் தவறைப் பிறர் கண்டிக்கக் கூடாது என்றும் எதிர்பார்க்கும்போதுதான். இந்த நிலையை, ‘தன் குற்றத்துக்குத் தான் நீதிபதியாகவும், பிறர் குற்றத்துக்குத் தான் வக்கீலாகவும் நடந்துகொள்வதாக’ வர்ணிப்பார்கள்.

கிருஷ்ணன் தர்மவான்தான். நீதியும், நியாயமும் நிலைநாட்டப்பட வேண்டும் என்று போதிப்பவர்தான். ஆனால், இப்போது போரை ஆதரிக்கிறார். எதிரே நிற்பவர்களை அழி என்று அர்ஜுனனுக்கு ஆணையிடுகிறார். அவரைப் பொறுத்தவரை இந்த கர்மா இப்படித்தான் முடித்து வைக்கப்பட வேண்டும். ‘மேனியைக் கொல்வாய்’ என்றுதான் அவர் உபதேசிக்கிறார். ஏனென்றால் ஆன்மாவை யாராலும் அழிக்க முடியாது என்பது அவருக்குத் தெரியும்.

நிஷ்காம கர்மா என்பது ஏற்கெனவே சொன்னதுபோல, கீழே விழுந்துவிட்ட ஒருவருடைய புத்தகத்தை எடுத்துக்கொடுப்பது போலத்தான். அப்படி கொடுத்துவிட்டுத் தயங்கி நின்றால், அவருடைய ‘நன்றி’க்காக காத்திருப்பதுபோல ஆகும். கொடுத்துவிட்டு கொஞ்சமும் யோசிக்காமல் உடனேயே அந்த இடத்தை விட்டு அகன்றுவிட வேண்டும். கீழே விழுந்ததை எடுத்துக் கொடுப்பதாகிய என் கர்மாவை நான் செய்துவிட்டேன், அவ்வளவுதான் என்று இயல்பாக நினைத்துக்கொண்டுவிட வேண்டும். மாறாக, ‘ரொம்ப தேங்ஸ் சார்’ என்று அவர் சொல்ல வேண்டும் என்று எதிர்பார்த்துக் காத்திருக்கக்கூடாது.

அப்படி அவர் நன்றி தெரிவிக்காவிட்டால், ‘இப்படி பொறுப்பில்லாமல் புத்தகத்தைக் கீழே தவறவிடுகிறாயே,’ என்று அவருக்கு புத்திமதி சொல்லி, அந்த சாக்கில் அவர் நன்றி தெரிவிக்க மாட்டாரா என்று ஏங்கவும் கூடாது. ஏனென்றால், ‘அதான் புத்தகத்தை எடுத்துக்கொடுத்தாச்சு இல்லே, சும்மா போவியா…!’ என்று புத்தகத்தை நழுவ விட்டவர் நம் உதவியைக் கொஞ்சமும் மதிப்பில்லாததாக்கி விடவும் கூடும்!

ஆமாம், புத்தகத்தைத் தவற விட்டதாகிய தன் தவறை உணர விரும்பாதவராக அவர் ஆகிவிடுவார்! ஏனென்றால் இந்தத் தவறை, எடுத்துக் கொடுத்தவர் சுட்டிக் காட்டுகிறாரே என்ற குற்ற உணர்ச்சியும், கோபமும் காரணமாகி விடுகின்றன. அதாவது நிஷ்காம கர்மாவும் (கர்மாவில் பற்று வைக்காதது) இதுதான்; கர்ம சந்நியாசமும் (கர்மாவின் பலனை எதிர்பாராதது) இதுதான்! இரண்டின் பரதர்மமும் ஒன்றே!

(கீதை இசைக்கும்)

தொகுப்பு: பிரபு சங்கர்

Related posts

திருச்செந்தூர் முருகன் அருளை பெற வழிபடும் முறை..!!

திரு இந்தளூர் பரிமள ரங்கநாதன்

சிதைவிலும் அழகு