ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து சந்திரயான்-3 வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது: புவி சுற்றுவட்டப்பாதையில் நிலைநிறுத்தம்; ஆக.23ம் தேதி நிலவில் தரை இறங்கும்

சென்னை: ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து சந்திரயான்-3 விண்கலத்துடன் எல்எம்வி3 எம் 4 ராக்கெட் விண்ணில் சீறி பாய்ந்தது. விண்கலம் வெற்றிகரமாக புவி வட்ட பாதையில் நிலை நிறுத்தப்பட்டது. ஆக.23ம் தேதி நிலவில் தரையிறக்கப்படும் என இஸ்ரோ தலைவர் சோம்நாத் கூறினார். பல நாடுகள் நிலவில் ஆராய்ச்சி மேற்கொண்டு வந்தாலும் நிலவின் தென் துருவத்தில் இதுவரை எந்த நாடும் ஆராய்ச்சி மேற்கொண்டது இல்லை. இந்தியா மட்டுமே நிலவின் தென் துருவத்தை ஆராய்வதற்காக சந்திரயான் திட்டத்தை தொடங்கியது.

முதல் முறையாக கடந்த 2008ம் ஆண்டு சந்திரயான்-1 விண்ணில் செலுத்தப்பட்டது. சந்திரயான் -1 விண்கலம் நிலவின் சுற்றுப்பாதையில் வலம் வந்து ஆய்வுகளை வெற்றிகரமாக செய்து முடித்தது. பின்னர் சந்திரயான்-2 திட்டத்தில் நிலவின் பரப்பில் கருவிகளை இறக்கி ஆய்வுகளை செய்ய திட்டமிடப்பட்டது. அதன்படி கடந்த 2019ம் ஆண்டு சந்திரயான் 2 விண்ணில் செலுத்தப்பட்டது. ஆனால் சந்திரயான்-2 லேண்டரான விக்ரம் லேண்டர் சரியாக தரையிறங்காமல் நிலவில் மோதி திட்டம் தோல்வியில் முடிந்தது. கடந்த முறை அடைந்த தோல்வியில் இருந்து இம்முறை தவறுகளை திருத்திக் கொண்டு சரியாக நிலவில் லேண்டர் கருவியை தரையிறங்கும் பணியை விஞ்ஞானிகள் மேற்கொண்டுள்ளனர்.

இதையடுத்து நேற்று மதியம் 2.30 மணிக்கு எல்எம்வி3 எம்4 ராக்கெட் மூலம் சந்திராயன் 3 விண்கலம் விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டது. சரியாக 2.30 மணிக்கு ராக்கெட்டின் 2 எரிபொருள் நிரம்பிய அலகுகள் எறியூட்டப்பட்டு தீயை வெளியேற்றிய படி ராக்கெட் விண்ணில் பாயத் தொடங்கியது. சரியாக 127 வினாடிகளில் 2 எரிபொருள் அலகுகள் பிரிந்தன. அதைத் தொடர்ந்து 194 வினாடியில் ராக்கெட்டின் மேல் பக்க கவசமும், 305வது நொடியில் இரண்டாவது எரிபொருள் அலகும் பிரிந்தது. தொடர்ந்து விண்கலனை சுமக்கும் பிரிவு பயணித்து இறுதியாக 17வது நிமிடத்தில் விண்கலம் புவி சுற்றுவட்ட பாதையில் வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்டது.

பின்னர் ஒன்றிய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறை இணையமைச்சர் ஜித்தேந்தர சிங் நிருபர்களிடம் கூறியதாவது: சந்திரயான் 3 விண்ணில் செலுத்தப்பட்டது, இந்தியாவிற்கு பெருமிதமான செய்தி. இது நிச்சயமாக ஒரு மகத்தான தருணம். ஓர் இலக்கை நோக்கிய வரலாற்றுப் பயணத்தின் தொடக்கம். இந்தியாவை பெருமைப்படுத்திய இஸ்ரோவுக்கு நன்றி. 60 ஆண்டுகளுக்கு முன்னர் விக்ரம் சாராபாய் கண்ட கனவை நினைவாக்கியுள்ள நாள். இந்தியாவின் தற்சார்பு நிலை நிரூபிக்கப்பட்டுள்ளது. இதுவரை யாரும் கண்டிராததை சந்திரயான் 3 ஆராயவுள்ளது. கடந்த 3,4 ஆண்டுகளாக அதிகமான விண்வெளி திட்டங்களை இந்தியா செயல்படுத்தியுள்ளது. இந்தியாவில் விஞ்ஞானிகளுக்கு பற்றாக்குறையில்லை. அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த பொருளாதார வளர்ச்சியில் இந்தியா உலக நாடுகளுக்கு வழிகாட்டியாக திகழுகிறது. இவ்வாறு அமைச்சர் கூறினார்.

இஸ்ரோ தலைவர் சோம்நாத் நிருபர்களிடம் கூறியதாவது: வரும் ஆகஸ்ட் 1ம் தேதி புவி வட்ட பாதையில் இருந்து விலகி நிலவின் சுற்றுப்பாதையில் பயணிக்க தொடங்கும். ஆகஸ்ட் 23ம் தேதி மாலை 5.47 மணியளவில் விக்ரம் லேண்டர் தரையிரங்கும். நிலவை நோக்கி லேண்டர் 100 கி.மீ வேகத்தில் செல்லும். நிலவை நெருங்கியவுடன் 30கி.மீ வேகத்தில் சென்று தரையிறங்கும். சந்திரயான் திட்டத்தில் இருந்த தவறுகள் குறித்து ஒரு வருடம் ஆராய்ச்சி செய்தோம். அதன் பின்னர் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகளை செய்து திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.

சந்திரயான் 3ல் ஆர்பிட் கருவிக்கு லேண்டர் சுமந்து சென்று நிலவுக்கு அனுப்பும், லேண்டர் கருவி சந்திரயான் 2 விண்கலனுக்கு தகவல்கள் அனுப்பும், சந்திரயான் ஏவப்பட்ட ராக்கெட்டில் 85 சதவீதம் குறிப்பாக உலோக பாகங்கள் தனியார் தொழிற்சாலைகளில் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. சந்திரயான் 3 விண்கலம் நிலவின் வெப்பதன்மை மற்றும் ரசாயன பரப்பு என இரண்டு முக்கிய கோணங்களில் ஆராய்ச்சி மேற்கொள்ளவுள்ளது. மேலும் நிலவில் எற்படும் நில அதிர்வுகள் உள்ளிட்டவை குறித்து ஆராய்ச்சி செய்யப்படவுள்ளது. நிலவின் வளிமண்டலம் மற்றும் அதில் இருக்கும் தனிமங்கள் குறித்து ஆராயவுள்ளோம். இது போன்ற தனித்துவமான ஆராய்ச்சிகளை யாரும் மேற்கொண்டது இல்லை. மேலும் நிலவின் தென் துருவம் அதிகம் ஆராய்ச்சி செய்யப்படவில்லை.

நிலவின் மத்திய பகுதிகள் உள்ளிடவையே அதிகம் ஆராயப்பட்டுள்ளது. சந்திரயான் 2 லிருந்து சந்திரயான் 3ல் சில மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. சந்திராயான் 2ல் 5 எஞ்சின்கள் இருந்த நிலையில் தற்போது 4 எஞ்சின்களாக குறைக்கப்பட்டுள்ளது. மேலும் 2 எஞ்சின்கள் தரையிரங்க பயன்படுத்தப்பட உள்ளது. இம்முறை எரிபொருளை அதிகளவில் நிரப்பியுள்ளோம். லேசர் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தரையிரக்கம் செய்யவுள்ளோம், தரையிரக்கும் நிலபரப்பை அதிகரித்துள்ளோம். இதன் காரணமாக மென்மையான தரையிறக்கம் சாத்தியமாகும். லூபெக்ஸ் திட்டம் தொடர்பான திட்ட அறிக்கை இன்னும் தயாரிக்கப்படவில்லை. அது தொடர்பான கட்டமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

அதை தொடர்ந்து சந்திரயான்-3 திட்ட இயக்குநர் வீரமுத்துவேல் நிருபர்களிடம் கூறியதாவது: சந்திரயான்-3 வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டுள்ளது. நிலவில் சந்திரயான் இறங்கும் நாளை எதிர்பார்த்து காத்திருக்கிறோம். சந்திரயான் 3-க்காக உழைத்த என் குழுவுக்கும், இஸ்ரோ அதிகாரிகளுக்கும், அனைத்து ஊழியர்களுக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். நிலவை நோக்கிய நம் பயணம் தொடங்கி விட்டது. விண்கலனின் இயக்கத்தை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். அடுத்த 42 நாட்கள் மிக முக்கியமானவை. ஏற்கெனவே சந்திரயான் 2 ரோவரின் சக்கரங்களில் அசோக சக்கரமும், இஸ்ரோவின் சிங்கமுகம் பொறிக்கப்பட்டது. அது நிலவை சென்றடையவில்லை, தற்போது மீண்டும் அதை பொருத்தி இருக்கிறோம். இம்முறை ரோவர் நிலவில் பயனிக்கும் போது அதன் அச்சுகளை படம் பிடிக்க ரோவரின் பின் பகுதியில் கேமரா பொருத்தப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் தமிழர்களின் பங்களிப்பு அதிகம்.

* சந்திரயான் 3ல் உள்ள கருவிகள் மற்றும் அதன் செயல்பாடுகள்
சந்திரயான் 3 விண்கலம் புரொப்பல்சன் மாட்யூல், லேண்டர், மற்றும் ரோவர் கருவிகளை கொண்டுள்ளது. இதன் மொத்த எடை 3895 கிலோ, முதலில் புவி வட்ட பாதையில் இருந்து விண்கலம் நிலவின் சுற்றுவட்ட பாதையை சென்றடைந்து நிலவை சுற்றி வந்து நிலவின் அருகில் வந்தவுடன் புரொப்பல்சன் மாட்யூல் லேண்டர் மற்றும் ரோவருடன் நிலவில் தரையிறங்கும் வேலையை தொடங்கும். நிலவில் லேண்டர் கருவி தரையிறக்கப்படும் லேண்டரில் இரு ரோவர் வெளியே வந்து நிலவில் மேற்பரப்பில் சென்று பயணிக்க தொடங்கும்.

* லேண்டரின் பயன்பாடு
நிலவில் தரையிறக்கப்படும் லேண்டர் 14 நாட்களுக்கு செயல்படும். அப்போது நிலவின் தரைப்பரப்பின் அடர்த்தி மற்றும் பரப்பில் உள்ள அயனிகள் மற்றும் எலக்ட்ரோன்கள் ஆராய்ந்து. மேலும் அதில் ஏற்படும் மாற்றங்களை கண்காணிக்கும். மேலும் நிலப்பரப்பின் வெப்ப தன்மை மற்றும் அதிர்வுகள் குறித்து ஆராய்ச்சி மேற்கொள்ளப்படும்.

* ஜனாதிபதி, பிரதமர் வாழ்த்து
சந்திரயான்-3 விண்கலம் விண்ணில் செலுத்தப்பட்டதற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளனர்.
ஜனாதிபதி திரவுபதி முர்மு: சந்திரயான்-3 விண்கலத்தை இந்தியா வெற்றிகரமாக செலுத்தியிருப்பது விண்வெளி ஆராய்ச்சியில் மற்றொரு குறிப்பிடத்தக்க மைல்கல்லை குறிக்கிறது. அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் நாட்டின் முன்னேற்றத்திற்கான அசைக்க முடியாத அர்ப்பணிப்பை இது நிரூபிக்கிறது.
பிரதமர் மோடி: இந்தியாவின் விண்வெளி பயணத்தில் இது புதுஅத்தியாயம். ஒவ்வொரு இந்தியனின் கனவையும், லட்சியத்தையும் உயர்த்தும் வகையில் இது உயர்ந்து நிற்கிறது. இந்த சாதனை நமது விஞ்ஞானிகளின் இடைவிடாத அர்ப்பணிப்புக்கு ஒரு சான்றாகும். அவர்களின் அறிவுகூர்மைக்கு தலைவணங்குகிறேன் என்றார். மேலும் பல்வேறு தலைவர்களும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

Related posts

சொந்த மாவட்டத்திலேயே தலைமறைவு வாழ்க்கை வாழும் மாஜி மந்திரியை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

காக்கிநாடாவில் பரபரப்பு ஒய்எஸ்ஆர் காங். மாஜி எம்எல்ஏ கட்டிடத்தை இடித்த அதிகாரிகள்

74000 பேர் பனிலிங்க தரிசனம்